ETV Bharat / spiritual

உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மாசி மக தீர்த்தவாரி விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அஸ்திர தேவருடன் மகாமக குளத்தில் சிவாச்சாரியார் இறங்கி, மும்முறை முங்கி எழ, மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

மாசி மக தீர்த்தவாரி விழா
மாசி மக தீர்த்தவாரி விழா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 5:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் இன்று மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் பெருவிழா உலக பிரசித்தி பெற்றது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அடுத்த மகாமகம் 2028ல் நடைபெற உள்ளது.

இதை தவிர்த்து, கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல, இந்தாண்டு மாசி மகம் கடந்த மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளும் சாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

மேலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாளான இன்று, மாசி மகத்துடன் கூடிய பௌர்ணமி நன்நாளில், ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், அபிமுகேஸ்வரர் கௌதமேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீவரர், ஏகாம்பரேஸ்வரர் பாணபுரீஸ்வரர், நாகேஸ்வரர், திருக்கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர் ஆகிய 11 சிவாலயங்களில் இருந்து மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும், பஞ்சமூர்த்திகள் தனித்தனி ரிஷப வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மகாமக படித்துறையில் வைத்து, அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அஸ்திர தேவருடன் மகாமக குளத்தில் சிவாச்சாரியார் இறங்கி, மும்முறை முங்கி எழ, மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடி, கரைகளில் எழுந்தருளிய சாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை முன்னிட்டு, கும்பகோணம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குளத்திற்குள் பைபர் படகுகளுடன், கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்துடன், தொடர்ந்து தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு துறையினர் முன்னச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் முழு சந்திர கிரகணம்: தமிழ்நாட்டில் எங்கு, எப்போது பார்க்கலாம்?