ஆடிப்பெருக்கு திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆடிப்பெருக்கு அன்று வழிபாடு நடத்தி தேங்காய் நேர்த்திக்கடனை செலுத்தி சென்றால், தொழில் வளம் பெருகும். வம்சம் விருத்தி அடையும். எதிரிகளை வெல்லும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Published : August 4, 2026 at 4:42 PM IST
கரூர்: மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு அடுத்த நாளான ஆடி 19ஆம் தேதி, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மேட்டு மகாதானபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமி அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு ஆடிப்பெருக்கு விழாவான இன்று, ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தேரில் அம்மன் வலம் வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
இதையடுத்து, ஆடி 1ஆம் தேதி முதல் 18 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்க, பூசாரி தேங்காயை எடுத்து ஒவ்வொருவரின் தலையில் அடித்து உடைத்தார்.
| இதையும் படிங்க: த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? - உதயநிதி விவகாரத்தில் ஆர்.எஸ் பாரதி கேள்வி |
இதுகுறித்து, நேர்த்திக்கடன் செலுத்த வந்த பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில் - மது தம்பதியர்கள் ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்தித்தளத்துக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறுகையில், "தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளும் நேர்த்திக்கடன் செலுத்தினால், நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால், இன்று குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்த பொள்ளாச்சியில் இருந்து வந்திருக்கிறோம்" எனக் கூறினர்.
இதுகுறித்து மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் நிர்வாக குழு செயலாளர் முருகன் கூறுகையில், "தமிழகம் முழுவதும் உள்ள மும்முடையார் குல மக்கள், மகாலட்சுமி அம்மனுக்கு குடும்பமாக வந்து ஆடிப்பெருக்கு அன்று, வழிபாடு நடத்தி தேங்காயை தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்வர்.
ஆடிப்பெருக்கு அன்று வழிபாடு நடத்தி தேங்காய் நேர்த்திக்கடனை செலுத்தி சென்றால், தொழில் வளம் பெருகும். வம்சம் விருத்தி அடையும். எதிரிகளை வெல்லும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் வைபோகம் நடைபெற்று வருகிறது" என்றார்.
இந்த கோயிலில் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதை பார்க்கவே தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர்.

