ETV Bharat / spiritual

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் களமிறங்கும் விநாயகர் சிலைகள் - கருமாரப்பட்டி கிராமத்தில் பணிகள் தீவிரம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மர விதைகளை உள்ளே வைத்து 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள விநாயகர் சிலை செய்யும் பணி
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள விநாயகர் சிலை செய்யும் பணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 3:08 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மர விதைகள் வைக்கப்பட்டு இயற்கை சார்ந்த பொருட்கள் கொண்டு விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 14-ம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விழாக்குழுவினர் விநாயகர் சிலைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணியில் தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மர விதைகளை உள்ளே வைத்து 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.

குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதக் குழம்பு மற்றும் வாட்டர் பெயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறிய அளவிலான சிலைகள் முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான வடிவமைப்புகளில் இந்த சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை சிலைகளை விழா முடிந்த பின்னர் கரைக்கும்போது அதனுள் வைக்கப்பட்டுள்ள மர விதைகள் மூலம் மரக்கன்றுகள் உருவாகும் என்பது கூடுதல் சிறப்பானதாக உள்ளது.

தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி விழா - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சேலம் ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து முன்பதிவுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளின் விற்பனை அதிகரிக்கும் என சிலை வடிவமைப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த விழாவிற்காக சில மாதங்களுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டு, விறுவிறுவென நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு ஆன்மிகம் முதல் அறிவியல் வரை பல விதமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தாண்டும் மக்களை ஈர்க்கக்கூடிய பல்வகை வடிவங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.