அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக தொடக்கம்
பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவத்தில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சந்திரசேகரர், உண்ணாமுலை அம்மன, விநாயகர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

Published : July 8, 2026 at 3:26 PM IST
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரமுள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனி மாதத்தில் நடைபெறும் இந்த பிரம்மோற்சவம், சைவ சமய மரபில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் தட்சிணாயன புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக, மிதுன லக்னத்தில் இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி ஆகம விதிமுறைகளின்படி நடைபெற்றது. ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதக் கொடியை ஏற்றி வைத்தனர். கொடியேற்றம் நிறைவடைந்ததும், பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர்.
பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவத்தில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சந்திரசேகரர், உண்ணாமுலை அம்மன், விநாயகர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் நடைபெறும் இந்த உற்சவ ஊர்வலங்களை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில், ஆனி பிரம்மோற்சவத்தின் முதல் நாளான கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழா நாட்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

