ETV Bharat / spiritual

காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடகம்; 6 ஆண்டுகளுக்குப் பின் பொலிவிழந்த ஆடிப்பெருக்கு விழா

மேட்டூர், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய படித்துறைகளில் நீர் வரத்து இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கலையிழந்து காணப்பட்டது.

வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு பூஜை செய்யும் மக்கள்
வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு பூஜை செய்யும் மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 3, 2026 at 1:02 PM IST

5 Min Read
Choose ETV Bharat

By ரா. செல்லப்பா

தமிழர்களின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. நதி வழிபாட்டு விழாவான இவ்விழா ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18ஆம் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘பெருக்கு’ என்பதற்கு ‘பெருகி வருவது’ அல்லது ‘அதிகரிப்பது’ என்று பொருள். தென்மேற்கு பருவமழை காரணமாக ஆடி மாதத்தில் காவிரி மற்றும் பிற ஆறுகளில் நீர் பெருகி வரும்.

ஆடிப்பெருக்கு நாளில் விவசாயத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குகிற காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக மக்கள் அனைவரும் காவிரி கரைகளில் சிறப்பு பூஜை செய்து நீரை தெய்வமாக கருதி வழிபடுவர். மேலும், சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க பூஜை செய்வர். மறைந்த முன்னோர்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர்.

மாங்கல்யம் மாற்றும் பெண்கள்
மாங்கல்யம் மாற்றும் பெண்கள் (ETV Bharat Tamil Nadu)

அதுமட்டுமல்லாமல், திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவண் கிடைக்கவேண்டி கடவுளை வணங்கி வழிபாடு செய்வர். அதேபோல் திருமணமான புதுமண தம்பதிகள் இந்த நாளில் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உண்டு.

பொய்த்த பருவமழை; ஏமாற்றிய கர்நாடகம்

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. ஆடிப் பெருக்கு நாளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம். இந்த நாளில் தொடங்கப்படும் காரியங்கள் அனைத்தும் பெருகி, நல்ல பலனை தரும் என்பது ஐதிகம்.

ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறந்துவிடாமல் ஏமாற்றியது. இதனால் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. இதன் காரணமாக ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிற டெல்டா மாவட்டங்களின் முக்கிய தலங்களில் நீர் வரத்து இல்லாமல் போனது. பக்தர்கள் காவிரியில் நீராட முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, பல்வேறு இடங்களில் பூஜை மற்றும் சடங்கு வழிபாடுகளை நடத்துவதற்காக ‘ஷவர்’ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடாகவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கவும், அணைகளின் பாதுகாப்பு கருதியும் தற்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும், அந்த நீர் காவிரியை இன்று மாலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காவிரி நீர் திறப்பு - ‘முதல்வர் விஜய் சாதனை’ என கர்நாடக வாகனங்களுக்கு மாலை அணிவித்து த.வெ.க-வினர் கொண்டாட்டம்

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டும் இதே போன்று காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போதும் பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக ஷவர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், அடுத்த ஆண்டிலிருந்தே காவிரி கரைபுரண்டு ஓடியதால் 2020 முதல் 2025 வரை பக்தர்கள் மகிழ்வுடன் காவிரியில் நீராடி ஆடிப்பெருக்கை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஷவர் அமைக்கும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஆடிப்பெருக்குக்கு புகழ்பெற்ற திருச்சி ‘அம்மா மண்டபம்’ படித்துறையில் கடந்த ஆண்டு 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி பாய்ந்தது. ஆனால், இந்த ஆண்டு அங்கும் நீர் வரத்து இல்லாமல் தண்ணீர் சிறிதளவே குளம் போல் தேங்கி நிற்கிறது. மேட்டூர், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய படித்துறைகளில் நீர் வரத்து இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

மயிலாடுதுறை காவிரி துலா கட்ட ஆடிப்பெருக்கு விழா

காவிரியில் தண்ணீர் இல்லாததால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா பொலிவிழந்துள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, காசிக்கு இணையான புனித தலமாக கருதப்படும் துலா கட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்படாததால் காவிரி ஆறும் அதன் கிளை ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் காவிரி துலா கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் புஷ்கரத் தொட்டியில் போர்வெல் மூலம் நீர் நிரப்பப்பட்டு, ஷவர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

காவிரி துலா கட்டத்தில் நீராட போர்வெல் மூலம் தண்ணீர் ஏற்பாடு
காவிரி துலா கட்டத்தில் நீராட போர்வெல் மூலம் தண்ணீர் ஏற்பாடு (ETV Bharat Tamil Nadu)

இருப்பினும், வறண்ட காவிரியில் பக்தர்கள் காமாட்சி விளக்கு ஏற்றி, மாவிளக்கு தீபமிட்டு, தலைவாழை இலை போட்டு காப்பரிசி, கண்ணாடி வளையல், தாலிக்கயிறு, மாவிளக்கு, மஞ்சள், குங்குமம், காதோலை கருகமணி, பேரிக்காய், விளாங்காய், மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் வைத்து தீபமிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறை கழுத்திலும் கைகளிலும் கட்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ததுடன், காவிரி தாயையும் வழிப்பட்டனர். ஆண்டுதோறும் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடாததால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே வருகை தந்தனர்.

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை வழக்கம்போல் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாத சூழல் உள்ளது. வரும் காலங்களிலாவது தண்ணீரை தேக்கி வைத்து பண்டிகை நாட்களுக்கு தண்ணீர் விட ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றங்கரையில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடினாலும் பாரம்பரிய மரபுகளை பின்பற்றி ஆயிரக்கணக்கான புதுமண தம்பதியினர் வழிபாடு செய்தனர். பொதுமக்களும் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

புதுமணத்தம்பதியினர் தாங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, தண்ணீர் இல்லாததால் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் புனித நீராடி, தங்களது வாழ்வு பெருகவும், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதுபோல மகிழ்ச்சி நிலைக்கவும், மாங்கல்யம் பெருக்கவும் வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலி மாற்றிக்கொண்டனர்.

நீர் வரத்து இல்லாவிட்டாலும் காவிரிக்கரையில் பூஜை செய்யும் பக்தர்கள்
நீர் வரத்து இல்லாவிட்டாலும் காவிரிக்கரையில் பூஜை செய்யும் பக்தர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறதா திமுக? தவெகவின் விமர்சனமும், திமுகவின் பதிலடியும்

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையிலும் இந்த ஆண்டு திருச்சி மட்டுமன்றி, நாமக்கல், கருர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து காவிரி தாயை வழிபட்டு செல்கின்றனர்.

பின்னர் ஸ்ரீரங்கம், சமயபுரம், உச்சிப்பிள்ளையார் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் பக்தர்கள் தர்ப்பணம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள நொய்யல் ஆற்று படித்துறை மற்றும் தர்ப்பண மண்டபத்தில், மறைந்த முன்னோர்களுக்கு (பிதுர்க்களுக்கு) தர்ப்பணம் செய்வதற்காக காலை முதலே பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

காலையில் பக்தர்கள் வருகை சற்று குறைவாக காணப்பட்ட போதிலும், நேரம் செல்லச் செல்ல கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

பேரூரில் பொதுமக்கள் வழிபாடு செய்ய ஷவர் ஏற்பாடு
பேரூரில் பொதுமக்கள் வழிபாடு செய்ய ஷவர் ஏற்பாடு (ETV Bharat Tamil Nadu)

​தற்போது நொய்யல் ஆற்றில் நீர்வரத்து ஏதும் இல்லாததால், படித்துறைக்கு வரும் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதைக் கருத்தில்கொண்டு, பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் படித்துறை பகுதியில் தற்காலிக நீர் குழாய்கள் (ஷவர்) அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அதில் நீராடி, தங்களது வழிபாடுகளையும் தர்ப்பண சடங்குகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர்.

ஆற்றில் இறங்கி யாரும் பூஜைகள் செய்யாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை திருவையாறு வறண்ட காவியில் ஆடிப்பூஜை

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ய மண்டப படித்துறைக்கு தங்களது குடும்பத்தினருடன் வந்த புதுமண தம்பதிகள், தண்ணீரில்லாமல் வறண்டு மணல் திட்டுகளாக இருந்த காவிரி ஆற்றின் நடுவில் காதோலை கருகமணி, பச்சரிசி, பழங்கள், திருமண மாலைகள், மாங்கல்யம் ஆகியவற்றை வைத்து பூஜைகள் செய்து தங்களது திருமண மாலைகளை மணலில் விட்டு சென்றனர்.

எப்போதும் களைக்கட்டி காணப்படும் ஆடிப்பெருக்கு விழா வறண்ட காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் களை இழந்து காணப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை மாவட்டம் திருவையாறு காசிக்கு நிகரானது. காவிரி ஆற்றில் எப்போதும் கரைபுரண்டு தண்ணீர் ஓடும். ஆனால் இந்த வருடம் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடி 18 விழாவை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தை தவெக அரசு ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பொதுவாக ஆடி 18 விழா இங்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உற்றார் உறவினர்கள் புடை சூழ ஆயிரத்துக்கு மேற்பட்ட புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்திருந்து ஆடி 18 விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த வருடம் கூட்டம் இல்லாததால் ஆடி 18 விழா களையிழந்து காணப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்தனர்.

ஆடிப்பெருக்கு முடிந்த பின்னர் கரை புரண்டோட வருகிறது காவிரி நீர்

ஆடிப்பெருக்கை கொண்டாட காவிரியில் நீர் இல்லாத நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த திடீர் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் வெகு வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அசாம்பாவிதங்களை தவிர்க்க, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்திருக்கிறது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை (ETV Bharat Tamil Nadu)

எப்படியாயினும், கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரானது இன்று இரவு தான் மேட்டூர் அணைக்கு வரும் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வறண்ட காவிரிக்கு பூஜை செய்ததன் பலனாக காவிரித்தாய் தங்கள் மண்ணை நினைக்க வருகிறாள் என்று விவசாயிகள் தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது இந்த ஆண்டு ஆடிப்பெருக்கும், காவிரி நீர் வரத்தும்!