ETV Bharat / spiritual

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.

புனித ஆரோக்ய அன்னை ஆலயத்தின் 96 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட கொடி
புனித ஆரோக்ய அன்னை ஆலயத்தின் 96 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட கொடி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 10:17 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 96 ஆம் ஆண்டு பெருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 96 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு சிறப்பாக இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பெருவிழாவையொட்டி, சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாதா உருவம் பதித்த கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெண்கள் அனைவரும் கொடியை கைகளில் சுமந்தபடி முக்கிய சாலைகள் வழியாக பக்தியுடன் ஊர்வலமாக புறப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் மாதா உருவம் பதித்த கொடிக்கு சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஆலயத்தின் பங்குத்தந்தை ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜைகளில் அருட்தந்தையர்கள் பெர்க்மான்ஸ், இருதயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாதா உருவம் பதித்த கொடியை பக்தியுடன் தொட்டு பார்த்த கிறிஸ்தவர்கள்
மாதா உருவம் பதித்த கொடியை பக்தியுடன் தொட்டு பார்த்த கிறிஸ்தவர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: அனைவருக்கும் அன்புடன் அருள்பாலிக்கும் அன்னை மாதா - வேளாங்கண்ணி பேராலய வரலாறும் சிறப்பம்சங்களும்

சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாதா உருவம் பதித்த பெருவிழா கொடி ஆலய கொடிக்கம்பத்தில் பக்தர்களின் கரகோஷத்துடன் ஏற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் பிரார்த்தனை செய்து, இயேசு கிறிஸ்துவையும், புனித ஆரோக்கிய அன்னையையும் வழிபட்டனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. பெருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து நடைபெற உள்ள சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற உள்ளனர். கொடியேற்ற விழா அமைதியான முறையிலும், பக்தி உணர்வுடனும் நடைபெற்றது.