கரூர்: கரூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ராஜேஷ் நேற்று (ஆகஸ்ட் 9) இரவு வழக்கம் போல், கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து இன்று அதிகாலை, பூட்டியிருந்த கடையில் திடீரென தீ கொழுந்து விட்டு, எரியத் தொடங்கியதால், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கும், கரூர் மாநகர போலீசாருக்கும், தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மளமளவெனப் பரவிய தீயை அணைத்தனர்.
இதில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. கடைக்குள் செல்போன் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டுச் சென்றதால், மின் கசிவு காரணமாக பேட்டரி வெடித்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கரூர் மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.