நேபாளத்தின் போட்டே கோஷி பேரழிவு - இமயமலை பனிப்பாறை உருகுவது ஏன்?
இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, விருப்பத்தின் அடிப்படையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையிலிருந்து, தானியங்கி எச்சரிக்கை அமைப்புகளாக மாற வேண்டும்.

Published : September 3, 2026 at 9:01 AM IST
By- ஹரி கிருஷ்ண நிபானுபூடி
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவால், நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். வீடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் சின்னாபின்னமாகி உள்ளன. புதிதாக உருவான ஏரி ஒன்று உடைந்துபோகும் அபாயத்தில் இருப்பதால், இரண்டாவது வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு, ஒரு வழக்கமான பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் அல்ல. மாறாக மிக அதிக உயரத்தில் இருந்து லெண்டே கோலா ஆற்றுக்குள் விழுந்த பனிப்பாறை சரிவினால் இந்த பேரழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த பனிச்சரிவு ஆற்றை முதலில் அடைத்து, பின்னர் திடீரென உடைந்து ஒரு பெரிய வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. கால்ச்சி பகுதியில் யி30 நிமிடங்களில் ஒன்பது மீட்டர் நீரின் மட்டம் உயர்ந்தது.
பருவநிலை மாற்றத்தால், இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுகின்றன. அத்துடன் பனிச்சரிவுகள், பனிப்பாறை நகர்வுகள், இடிபாடுகளின் ஓட்டம் மற்றும் ஆற்று வெள்ளப் பெருக்குகள் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்படும் கூட்டுப் பேராபத்துகளை தூண்டுகிறது.
கடந்த 2014-இல் ஜூரே-சுன் கோஷி ஆற்றில் இதுபோன்ற ஒரு பேரிடர் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒரு மலைச்சரிவு, ஆற்றின் கீழ்நோக்கிய நீர் ஓட்டத்தை 12 மணி நேரம் தடுத்து, ஒரு தற்காலிக ஏரியை உருவாக்கியது.
இயற்கையாகவே கோஷியாறு ஏன் பேரழிவை சந்திக்கிறது?
720 கி.மீ. நீளமுள்ள கோஷி ஆறு, திபெத் பீடபூமியில் தொடங்கி நேபாளம் வழியாக பீகாரை அடைந்து குர்செலா அருகே கங்கை நதியுடன் கலக்கிறது. சுமார் 87,300 முதல் 88,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட வடிநிலப் பகுதியில், ஏறக்குறைய 45% நேபாளத்திலும், 33% சீனாவிலும், 22% இந்தியாவிலும் அமைந்துள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரம் முதல் எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயரம் வரையிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த பகுதி, 4 கோடி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.
சன்கோஷி, அருண், தாமோர் ஆகிய மேல்மட்ட ஆறுகள், இமயமலை பள்ளத்தாக்குகளில் இருந்து கங்கை சமவெளிக்குள் நுழையும் முன்பே ஒன்றாக இணைகின்றன. இமயமலைப் பகுதி பல பிளவுளாக உடைந்துள்ளதால், இந்த நதிப் படுகையில் 5,653 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இது ஆறுகளின் குறுக்கே இயற்கை அணைகள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த நதி ஆண்டுதோறும் 100 மில்லியன் டன் வண்டல் படிவுகளை கடத்துகிறது; இது சில நேரங்களில் 135 மில்லியன் டன்களையும் எட்டுகிறது. இதன் படிவு உற்பத்தி விகிதம் ஆண்டுக்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 2,500 டன்களாக உள்ளது.
படிவுகள் குவிவதால் ஆற்றின் படுகை உயர்ந்து, நதி தன் பாதையை மாற்றிக் கொள்கிறது; இதன் காரணமாக கோஷி ஆறு 100 கிலோமீட்டருக்கும் மேல் நகர்ந்துள்ளது.
மழைப்பொழிவு, தீவிரப் பருவமழை, புவித்தட்டு நகர்வுகள், நிலச்சரிவுகள், படிவுகள் குவிதல், நதி தன் பாதையை மாற்றுதல், உள்கட்டமைப்பு வசதிகள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன.
25,000க்கும் மேற்பட்ட பனியாற்று ஏரிகள் உடைபடும் அபாயம்
ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டிற்கான சர்வதேச மையம்(ICIMOD ), 2026இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்து குஷ் இமயமலையில் உள்ள 5 படுகைகளில் 25,614 பனிப்பாறை ஏரிகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சுமார் 200 ஏரிகள் ஆபத்தானவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. புவி வெப்பம் அடைவதால், பனிப்பாறைகள், உறைபனி நிலங்கள் நிலைத்தன்மையற்றதாக மாறி, புதிய ஏரிகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் ஏரிகள் விரிவடைகின்றன. இது இயற்கையான அணைகளையும் மலைச்சரிவுகளையும் பலவீனப்படுத்துகிறது.
கோசி ஆற்றின் படுகையில், 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 3,624 ஏரிகள் கண்டறியப்பட்டன. அவற்றில் 47 ஏரிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆபத்தான ஏரிகளில் பெரும்பாலானவை கோசி ஆற்றின் படுகையிலேயே அமைந்துள்ளன (சீனாவில் -25, நேபாளத்தில்-21, இந்தியாவில்-1). கடந்த காலங்களில் 62 பனிப்பாறை ஏரி வெடிப்புகள் நடந்துள்ளன. இவை சீனா (28), பூட்டான் (13), நேபாளம் (8) மற்றும் இந்தியா (2) ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு 26 பனிப்பாறை ஏரி வெடிப்புகள் பதிவாகியுள்ளன. எவரெஸ்ட்–தூத் கோசி பகுதி, கடந்த 50 ஆண்டுகளில் 5 பெரிய பனிப்பாறை ஏரி வெடிப்பால் வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளது. இந்த ஆபத்துகள் முற்றிலும் கணிக்க முடியாதவையாக உள்ளன.
கிழக்கு இமயமலைப் பகுதியில்தான் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள அபாயம் மிக அதிகமாக இருப்பதாகவும், 2100-ஆம் ஆண்டிற்குள் இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் பல்வேறு அறிவியல் முன்னுதாரணங்கள் தெரிவிக்கின்றன. கும்பு பனிப்பாறைகள் ஆண்டுக்கு 30 முதல் 60 மீட்டர் வரை உருகிச் சுருங்கியுள்ளன. எவரெஸ்ட் பகுதியில் உள்ள 10 முக்கிய பனிப்பாறைகள், 1970 முதல் 2007 வரை மோசமடைந்து, கரைந்து வந்துள்ளன.
ராஜ்ஜிய ரீதியிலான பிரச்சனையாக மாறும் இடம்
ஒரு தட்பவெப்ப நிலை மற்றும் புவியியல் சார்ந்த பிரச்சனை, இரு நாடுகளுக்கு இடையேயான ராஜ்ஜிய ரீதியாலன பிரச்சனையாக மாறும் இடம் இதுதான். கோஷியாறு எல்லைகடந்த ஒத்துழைப்புக்கான ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது, 1954-இல் இந்திய-நேபாள கோசி ஒப்பந்தத்தில் தொடங்கி, பின்னர் 1966-இல் திருத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் தடுப்பணைகள், ஆய்வுகள், வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டதாகும்.
தற்போது, பல தரப்பு அமைச்சர்களைக் கொண்ட கூட்டு ஆணையம், நீர் வளங்களுக்கான கூட்டுக்குழு, கூட்டு நிலைக் தொழில்நுட்பக் குழு, கூட்டு வெள்ள முன்னறிவிப்புக் குழு உள்ளிட்ட பல தரப்பு வழிமுறைகள் மூலம் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கிறது.
சில அமைப்புகள் மிகவும் திறம்படச் செயல்படுகின்றன; பருவமழைக் காலத்தில், நேபாளத்தின் நீரியல்-வானிலை தரவுகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, இந்தியாவிற்கு வழங்கப்படுகின்றன.
பீகாரில் உள்ள கோஷி அமைப்பானது 17 இடங்களில், 72 மணிநேரத்திற்கு முன்பாகவே வெள்ளம் குறித்த முன்னறிவிப்புகளை வழங்குகிறது. 2014 முதல் கோசி அமைப்பானது சென்சார்கள், ரேடார் ஆகியவற்றை ஒன்றிணைத்து 3 நாட்கள் முன்பாகவே வெள்ளம் தொடர்பான முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது.
இந்தியா, வங்கதேசம், பூடான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ICIMOD அமைப்பும், உலக வானிலை அமைப்பும் இணைந்து 2010-இல் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம், 38 நிகழ்நேர நீரியல்-வானிலை நிலையங்கள் நிறுவப்பட்டு பிராந்திய ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இருப்பினும், இந்த ஏற்பாடுகள் அரசியல் உறவுகளால் பாதிக்கப்படுவதால், அபாயத் தரவுகள் தானாகவே தடையின்றிப் பாய்வதற்கான, சட்டப்பூர்வ உத்தரவாதம் பெற்ற அமைப்பாக மாறவில்லை. உதாரணமாக, கடந்த 2025 ஜூலை மாதத்தில் ராசுவா மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கின்போது, சீனா எந்தவொரு எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என்று நேபாள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதம், வெள்ள நீர் எல்லையைக் கடந்த பிறகுதான் முக்கியமான தகவல்கள் நேபாளத்தை வந்தடைந்தன. இதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே, அரசியல் காரணங்களால் நீரியல் தரவுப் பகிர்வு தடைபடுவதாகப் ஆய்வுகள் எச்சரித்திருந்தன.
வெள்ளம் மற்றும் பனிப்பாறை அபாயம் குறித்த தகவல்கள், அரசியல் சார்பற்ற ஒரு மனிதநேய உள்கட்டமைப்பாக கருதப்பட வேண்டும். ஏனெனில், ஒரு பனிப்பாறை உருகி விழுவதற்கு ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை காத்திருக்காது; நிலச்சரிவினால் ஏற்படும் தற்காலிக அணை அடைப்புகளுக்கு நாடுகள் வகுத்துள்ள எல்லைகள் தெரியாது.
இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, விருப்பத்தின் அடிப்படையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையிலிருந்து, தானியங்கி எச்சரிக்கை அமைப்புகளாக மாற வேண்டும்.
சீனா, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகள் ஆகியவை ஒன்றிணைந்து, நீர் மட்டம், நில அதிர்வு செயல்பாடுகள், பனிப்பாறைகள், ஏரிகள், மலைச்சரிவு நகர்வுகள், நிலச்சரிவுகள் ஆகியவற்றிற்கான ஆபத்துக் கட்ட எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும். அரசியல் சூழல்களை பொருட்படுத்தாமல், இந்த ஆபத்து எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தானாகவே அனுப்பப்பட வேண்டும்.
இந்த எச்சரிக்கைகள் மழை வெள்ளம், பனிப்பாறை ஏரி வெடிப்பு, பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள் மற்றும் பிற ஆபத்துகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். திபெத்-ஜிசாங் பகுதியில் உள்ள சாலைகளின் நீளம் 2012-இல் 65,200 கிலோமீட்டராக இருந்தது. 2024-இல் 124,900 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. சிச்சுவான்-திபெத் பகுதியில், 1,543 கிலோமீட்டர் நீளமுள்ள இரயில் பாதை, நில அதிர்வுகள் அதிகம் ஏற்படும் அபாயகரமான மலைப் பகுதி வழியாகச் செல்கிறது.
கடந்த ஆண்டு சீனா, 168 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் யார்லுங் சாங்போ நீர்மின் திட்டத்தைத் தொடங்கியது. யார்லுங் சாங்போ ஆறு, பிரம்மபுத்திரா நதிப் படுகையில்அமைந்துள்ளது, கோசி ஆற்றுப் படுகையில் அல்ல; எனவே, சீனாவின் இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அண்மையில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. எனினும், சாலைகள், சுரங்கப்பாதைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் கூட்டு ஆபத்துகளே முதன்மையான கவலையாக உள்ளது. இவை மலைச்சரிவுகளையும் மண் படிவுகளையும் பாதிப்பதால், இது குறித்துத் தனித்த அறிவியல் மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.
பொறியியல் துறை ஆபத்தை குறைக்கலாம்- முற்றிலும் அகற்ற முடியாது
பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள அபாயத்தை பொறியியல் துறையின் மூலம் குறைக்க முடியுமே தவிர, இமயமலையின் ஒட்டுமொத்த உறைபனி மண்டலத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது. உதாரணமாக, நேபாளத்தில் உள்ள சோ ரோல்பா ஏரியின் நீர்மட்டம் பொறியியல் முறைப்படி 3 மீட்டர் வரை குறைக்கப்பட்டது. இம்ஜா ஏரியின் நீர்மட்டமும் 3.4 மீட்டர் வரை குறைக்கப்பட்டது.
அங்குள்ள தானியங்கி எச்சரிக்கை அமைப்புகள் 50 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 90,000-க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாத்து வருகின்றன. கடந்த 2025-இல் ஆண்டில், பசுமை காலநிலை நிதியம், அதிக ஆபத்துள்ள 4 ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்கவும், தாவரங்களை மீட்டெடுக்கவும் 7 ஆண்டுகள் திட்டத்திற்கு $36.1 மில்லியன் நிதியை ஒப்புதல் அளித்தது; இதன் மூலம் 22 லட்சம்முதல் 23 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
இந்த நடவடிக்கைகள் ஏரிகளின் நீர் அழுத்தத்தைக் குறைத்தாலும், பனிச்சரிவுகளையோ, மலைச்சரிவு வீழ்ச்சிகளையோ தடுத்து நிறுத்த முடியாது. இந்து குஷ் இமயமலைப் பகுதியில் சுமார் 200 ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் உள்ளதால், அனைத்து இடங்களிலும் இத்தகைய கட்டுமானப் பொறியியல் தலையீடுகளைச் செய்வது சாத்தியமற்றது.மற்ற இடங்களில் தொடர் கண்காணிப்பு, அவசரக் கால வெளியேற்றத் திட்டங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
முன்னெச்சரிக்கைகள் கடைசி மைல் தூரம் வரை சென்றடைவதை உறுதிசெய்வோம்
குடியிருப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை வெள்ளப் பாதிப்புப் பகுதிகளுக்கு வெளியே மாற்றுவதன் மூலம், இமயமலைப் பிராந்திய உள்கட்டமைப்புகள் தீவிர வெள்ளப் பெருக்குகளைத் தாங்கி நிற்பவையாக மாற்றப்பட வேண்டும். அங்குள்ள பாலங்களை பெரிய பாறாங்கற்கள், மண் படிவுகளுடன் வரும் இடிபாடுகள் நிறைந்த வெள்ளத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
முக்கிய அணைகள், சாலைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவை நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு போன்ற ஆபத்துகள் குறித்த பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவை கடந்த கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொள்ளாமல், எதிர்காலப் பருவநிலை மாற்ற நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு அமைய வேண்டும்.
தொழில்நுட்ப எச்சரிக்கைகள் மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே அவை பயனுள்ளதாக இருக்கும்; நேபாளத்தில் ஏராளமான கண்காணிப்பு நிலையங்கள் இருந்தபோதிலும், அங்குள்ள எச்சரிக்கை அமைப்புகள் பலவீனமாகவே உள்ளன; சோ ரோல்பா சைரன் போன்ற அமைப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன.
போட்டே கோசி ஆற்றுப் பகுதியில், இந்த எச்சரிக்கை மணிகள் மக்களை எச்சரிக்க மிகக் குறைந்த நேரத்தையே வழங்குகின்றன. எனவே, அவசரகால வெளியேற்றத் திட்டங்களில் செயற்கைக்கோள், நில அதிர்வை உணரும் கருவிகள், ரேடார், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு, வானொலி, மொபைல் அலர்ட்டுகள் ஆகியவை உள்ளடக்கப்பட வேண்டும். வெள்ளம் மக்களை வந்தடைவதற்கு முன்பாகவே, எச்சரிக்கை செய்தி அவர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டு இந்த அணுகுமுறை அமைய வேண்டும்.
அரசுகளுக்கு மாற்றாக சர்வதேச நிறுவனங்கள் மாற முடியாது. ஆனால் அவை ஒத்துழைப்பிற்கான ஒரு நடுநிலையான தளத்தை வழங்க முடியும்.
உலக வானிலை அமைப்பு, ICIMOD, ஐ.நா. வளர்ச்சித் திட்டம் (UNDP), பசுமை காலநிலை நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய அமைப்புகள், ஆபத்துத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், எல்லை கடந்த எச்சரிக்கைகள் ஆகியவற்றில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பணம் மிச்சமாகும். ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகளில் செய்யப்படும் முதலீடுகள், அதன் தொகையை விட 10 மடங்கு பலனைத் தரும் என்று உலக வானிலை அமைப்பு தெரிவிக்கிறது; இருப்பினும் 60% நாடுகளில் மட்டுமே பலவகை ஆபத்து எச்சரிக்கை அமைப்புகள் உள்ளன.
இந்து குஷ் இமயமலைப் பகுதியில் 240 மில்லியன் மக்களும், அதன் கீழ்நிலைப் பகுதிகளில் 1.65 பில்லியன் மக்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குஷ் இமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்தாண்டுகளில் (2011–2020) 65% வேகமாக உருகியுள்ளன. அதிகப்படியான கார்பன் உமிழ்வு தொடரும் பட்சத்தில், 2100 ஆம் ஆண்டிற்குள் இந்த பனிப்பாறைகள் தங்களின் ஒட்டுமொத்த அளவில் 80% வரை இழக்க நேரிடும்.
2014-இல் ஜூரே பேரிடர் மற்றும் 2025, 2026-இல் ராசுவா வெள்ளப்பெருக்கு கற்றுத்தந்த பாடங்கள், இமயமலைப் பிராந்திய அரசியல் உலகின் செயல்பாடுகளை விட, அங்குள்ள புவியியல் சூழல் மிக வேகமாக மாறி வருவதைக் காட்டுகின்றன.
இவற்றை எதிர்கொள்வதற்கான தேவையான அறிவியலும் தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளன. ஆனால் எல்லைகடந்த ஒத்துழைப்பிற்கான அரசு நிறுவனங்களின் அர்ப்பணிப்பு மட்டுமே பின்தங்கியுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பேரிடர்களின் பாதிப்புகள், நாம் அறிவைப் பகிர்ந்துகொள்வதிலும், உள்கட்டமைப்புகளை வடிவமைப்பதிலும், பேரிடர்கள் தாக்குவதற்கு முன்பே துல்லியமான எச்சரிக்கைகள் உள்ளூர் மக்களைச் சென்றடைவதிலும் தான் தங்கியுள்ளன.
(ஹரி கிருஷ்ண நிபானுபூடி. 2009 முதல் 2016 வரை, இந்து குஷ் இமயமலைப் பகுதி முழுவதும் பனி ஏரி உடைப்பால் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டவர்.)

