ETV Bharat / opinion

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்- அடுத்து என்ன?

ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தெரிவித்துள்ள கருத்து, இந்த ஒப்பந்தம் நெடுநாள் நீடிக்குமா? மேற்காசிய பிராந்தியத்தில் நீண்ட கால அமைதியை ஏற்படுத்துமா? என்ற சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை ஒட்டி, ஈரானுக்கு நன்றி தெரிவித்து லெபானில் வைக்கப்பட்டுள்ள பதாகை
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை ஒட்டி, ஈரானுக்கு நன்றி தெரிவித்து லெபானில் வைக்கப்பட்டுள்ள பதாகை (AP)
author img

By Achal Malhotra

Published : June 16, 2026 at 10:26 PM IST

4 Min Read
Choose ETV Bharat

அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் வரும் 19ஆம் தேதி கையெழுத்தாக உள்ளது.

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தீவிரப்படுத்துவதாக கூறி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில், ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயதுல்லா அலி காமேனி உட்பட பலர் உயி​ரிழந்​தனர்.

இதனையடுத்து இருதரப்புக்கு இடையே மூண்ட போரின் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இதனால் உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாடு அதிகரித்து, விலை உயர்​வும் ஏற்பட்டது.

கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இறங்கின. இதன் விளைவாக, இரு நாடுகளும் மோதல்களை நிறுத்த சம்மதித்தன. இதன் விளைவாக 2 மாதங்​களாக நீடித்த இந்த இழுபறி தற்​போது முடிவுக்கு வந்​துள்​ளது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஈரான் இடையே ஜெனிவா நகரில் வரும் 19ஆம் தேதி அமைதி கையெழுத்தாக உள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் 14 முக்கிய அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஈரான் எல்லையில் அமெரிக்காவின் முற்றுகை விலக்கிக் கொள்ளப்படும்; ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு அந்த வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்; முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகள் விடுவிக்கப்படும்; போரினால் சேதமடைந்த ஈரானை மறுகட்டமைப்பு செய்ய 300 பில்லியன் டாலர் நிதியுதவி; ஈரானின் அணுசக்தித் திட்டம்; ஈரான் மீதான தடைகள் நீக்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி வருகின்றன.

இவை அனைத்துப் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆனால், ஈரானின் மறைமுக கூட்டாளிகளான ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹவுதி ஆகியோரின் பங்கு குறித்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெறுமா என்று தெரியவில்லை.

அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை மேலோட்டமாக பார்த்தால், இந்த ஒப்பந்தம் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் நன்மை அளிப்பதாக தெரிகிறது. ஏனெனில், ஈரான் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளதாகத் தோன்றுகிறது.

அதேசமயம், ஏற்கெனவே கடந்தந 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதை விட கூடுதலாக ஈரான் எதை ஏற்கும் என்று தெரியவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி (P5+1 ) ஆகிய நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறியதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இருப்பினும், ஈரான் செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் (ஐஏஇஏ) கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா ஏறக்குறைய மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது. ஆனால், ஈரான் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்பு

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதியானதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த ஒப்பந்தம், மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும், சர்வதேச பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கவலை தரும் இஸ்ரேலின் நிலைப்பாடு

இருப்பினும், இந்த நேரத்தில் இஸ்ரேல் தெரிவித்துள்ள கருத்து, இந்த ஒப்பந்தம் நெடுநாள் நீடிக்குமா? மேற்காசிய பிராந்தியத்தில் நீண்ட கால அமைதியை ஏற்படுத்துமா? என்ற சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தாங்கள் ஒரு தரப்பினராக இல்லை என்பதையும் இஸ்ரேல் தெளிவாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில், "நானும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஒரு கொள்கையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம். அதன்படி, எல்லைப் பகுதிகளையும், அங்குள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளையும் ஜிகாதியிடம் இருந்து பாதுகாக்க, லெபனான், சிரியா, காசா ஆகிய இடங்களில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தொடர்ந்து காலவரையின்றி நிலைநிறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் தனது எல்லையை விரிவுபடுத்தி மாபெரும் இஸ்ரேல் என்ற தனது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, கடந்த இரண்டரை ஆண்டுகளில், காசா, லெபனான், சிரியா ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முடிவான பிறகு, ஈரான் உடனான நேரடி மோதலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்று தெரிகிறது. அதே வேளையில், ஈரானின் மறைமுக கூட்டாளிகளான ஆதரவு படைகளை முறியடிப்பது, ஈரானை முழுமையாக அழித்தொழிக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பலவீனப்படுத்துவது ஆகிய இறுதி இலக்குகளை அடைவதில் இஸ்ரேலுக்குத் தொடர்ந்து தார்மீக மற்றும் பொருளுதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலின் முடிவுகள் அதிபர் டிரம்ப்பிற்கு சாதகமாக அமைந்தால், அமெரிக்காவும் இந்த மோதலில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது.

என்ன நடந்தாலும், ஐ.நா. சபை பரிந்துரை செய்துள்ள இரு நாடுகளின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனியர்களுக்கு இறையாண்மை கொண்ட தாயகம் வழங்கப்படும் வரை இந்த பிராந்தியத்தில் நிரந்தர அமைதியும், ஸ்திரத்தன்மையும் சாத்தியமில்லை. அப்படி ஒரு தீர்வே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் மோதுவதற்கான சூழலை உருவாக்காது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பாலஸ்தீனம் குறித்து செயல்திட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உலகப் பொருளாதாரம் மேம்படும்

இருப்பினும், ஆக்கப்பூர்வமாக பார்த்தால், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, அமெரிக்காவும், ஈரானும் அதை அப்படியே செயல்படுத்தினால், மேற்காசிய பிராந்தியத்தில் நிரந்தரை அமைதி என்பது வெகு தொலைவில் இருந்தாலும், இந்த பகுதியில் இயல்பு நிலையை மீட்டெடுக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று உறுதியாகக் கூறலாம். மேலும் இந்த ஒப்பந்தத்தால் உலகப் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மேம்படும்.

ஈரானிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதற்கான தடைகள் நீக்கப்படுவதும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சரக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுவதும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும்; விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தும்.

இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கச்சா எண்ணெய் விலையும் ஏற்கெனவே குறைந்துள்ளது. பங்குச் சந்தைகளும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.

இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள்

இந்தியாவை பொருத்தவரை, இது ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்கவும், ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும். மேலும், ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த உதவும்.

அதுமட்டுமன்றி, கடல்வழி வர்த்தகம், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையும் பயனடையும். உரங்களை தடையின்றி இறக்குமதி செய்வது, இந்திய விவசாயத்திற்கு ஒரு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கமின்றி தொடர்ந்தால், அந்நியச் செலவாணி வெளியேற்றம் குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விற்பனை விலை குறைந்து, விலைவாசியை கட்டுப்படுத்த உதவும்.

அதேவேளையில், மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர், பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வருவது, விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி வர்த்தகம் சீராக நடைபெறுவது ஆகியவை ஒட்டுமொத்த உலகிற்கும் நற்பலனை அளிக்கும். இருப்பினும், இந்த மோதலுக்கான முழுமையான மற்றும் இறுதியான தீர்வு இன்னும் வெகுதொலைவில் உள்ளது.