ETV Bharat / opinion

தமிழ்நாட்டில் 7 தசாப்த திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தவெக தலைவர் விஜய்யின் வெற்றி 1977ஆம் ஆண்டு எம்.ஜிஆரின் வெற்றியை போன்றே அமைந்திருக்கிறது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் (PTI)
author img

By Prince Jebakumar

Published : May 6, 2026 at 4:51 PM IST

6 Min Read
Choose ETV Bharat

அதிமுக என்ற கட்சியை எம்.ஜிஆர் உருவாக்கி திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றியது போன்றே போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திராவிடக் கோட்டையை தகர்த்து திமுகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் தவெக விஜய்.

1977-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 144 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்றார். அதே போன்ற ஒரு சம்பவம் தான் 2026-ம் ஆண்டு தேர்தலிலும் நடந்திருக்கிறது. தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நிலவிய நிலையில், திமுக மற்றும் அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் அதிகம் பேரால் விரும்பப்பட்டாலும் விஜய்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்வது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. அதற்காக, பல்வேறு தடைகளையும், அதிகார நெருக்கடிகளையும் அவர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

பிரச்சாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள்

தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்க தங்களால் இயன்ற அனைத்து விஷயங்களையும் செய்தன. திமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த சில காவல் துறை அதிகாரிகள், திமுகவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி, விஜய்க்கு பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.

குறிப்பாக, செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பரப்புரை மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதையே ஆளும்கட்சியினர் விஜய்க்கு நிபந்தனைகளாக விதித்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டிய தவெக விஜய்
சென்னைபெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டிய தவெக விஜய் (PTI)

இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், விஜய்யிடம் விசாரணை என்ற பெயரில் சிபிஐ அவரை பலமுறை டெல்லிக்கு வரவைத்து அலைக்கழித்தது. சிபிஐ-யை விஜய்க்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தி தங்களுடன் கட்டாய கூட்டணிக்கு பாஜக முயற்சிப்பதாக பலர் விமர்சித்தனர்.

இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தவெகவுடன் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் எந்த கட்சியும் முன் வராததால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தவெக. அதில், எடப்பாடி தொகுதி வேட்பாளர் வேட்புமனு பரிசீலனை சமயத்தில் திடீரென தலைமறைவாக, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது தவெக. 233 தொகுதிகளில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் களம் கண்டனர்.

அதன் பிறகும், வெயிலின் தாக்கம் மற்றும் பரப்புரைக்கான விதிமுறைகளை காரணம் காட்டி, விஜய்யின் மக்கள் சந்திப்பானது பலமுறை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், தனது கட்சி தமிழர்களுக்கான ஒரு கட்சியாக இருக்கும் என்ற தனது கொள்கையை மக்கள் மனதில் ஆணித்தரமாக விதைத்தார் விஜய்.

அதிர்ச்சி கொடுத்த வாக்கு எண்ணிக்கை

ஜெயலலிதாவுக்கு அடுத்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தார் விஜய். அதன்படி, சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு இடங்களிலுமே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தோற்கடித்து தொகுதியை கைப்பற்றினார் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு. இது தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. 1996-ல் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுகவின் இ.ஜி சுகவனத்திடம் தோற்றது போன்று, இந்த முறை ஆட்சியில் இருந்த முதலமைச்சரான மு.க ஸ்டாலின் தோல்வியை தழுவினார்.

மே 4-ம் தேதி முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய போது, ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் தவெகவின் வாக்குகள் பதிவாகின. ஆனால் சற்று நேரத்திலேயே அந்த எண்ணிக்கையானது விறுவிறுவென ஏறி, திமுக, அதிமுக ஆகிய ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு நிகராகின. அதுவே, அடுத்த சில நிமிடங்களில் மேலும் அதிகரித்து, திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, முன்னிலை வகிக்கத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக 108 இடங்களையும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக 38%, அதிமுக 33% முறையே மொத்தமாக 71% வாக்குகளை திராவிட கட்சிகள் பெற்றிருந்தன. ஆனால் இந்த முறை தவெகவிற்கு 35% வாக்குகளும், திமுகவிற்கு 24% வாக்குகளும், அதிமுகவிற்கு 21% வாக்குகளும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரு சூப்பர் ஸ்டாரால் திராவிடக் கட்சிகளின் வாக்குகளை பிரிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் விஜய்.

2026 சட்டமன்ற தேர்தலானது 1971 தேர்தலின் மறுவடிவமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறி வந்தனர். 1971 தேர்தலில் 234 இடங்களில் 184 இடங்களை திமுக கைப்பற்றியது. இதன் மூலம், 1967-ல் முதன்முறையாக திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மு.கருணாநிதி இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

அதே போன்று ஸ்டாலினும் தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சாராவார் என்று நிபுணர்கள் கூறிய நிலையில், இந்த தேர்தலில் அது போன்று நடைபெறவில்லை. 1971 மற்றும் 2026 தேர்தல்களை ஒப்பிடுகையில், இரண்டுக்கும் இடையே ஒற்றுமையும் இருக்கிறது, முரண்பாடும் இருக்கிறது.

அதாவது, அந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ் 201 இடங்களில் களம் கண்டது. அதில் 35% வாக்குகளை பெற்றது. ஆனால் ஸ்தாபன காங்கிரஸுக்கு கிடைத்த சீட்கள் வெறும் 15. அதுவே 2026 தேர்தலில் தவெகவிற்கும் ஏறக்குறைய 35% வாக்குகள் தான் கிடைத்தன. ஆனால், கைப்பற்றிய தொகுதிகளோ 108. இது தான் இரண்டு தேர்தலுக்குமான முரண்பாடாக அமைந்திருக்கிறது. ஆட்சியை கைப்பற்றியுள்ள அறிமுக தலைவருக்கு திராவிட கட்சிகள் பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அடுத்த ஜெயலலிதா விஜய்?

ஜெயலலிதா எப்படி திமுகவை விமர்சிப்பாரோ அதே போன்று, விஜய்யும் தன்னை திமுகவுக்கு எதிரானவரானவர் என்று காட்டும் விதமாக, ‘திமுக ஒரு தீய சக்தி’ என்று கூறி வந்தார். ஒவ்வொரு மேடையிலும் அவர் ஸ்டாலினிடம் கேள்விக்கணைகளை தொடுத்து வந்தார். சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஸ்டாலின் தான் பொறுப்பு என்ற கருத்தை மக்கள் மனதில் திணித்தார். இதுவே அவரை திமுக எதிர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக காட்ட உதவியது. அது தேர்தலிலும் பலன் கொடுத்திருக்கிறது.

எப்போதும் திமுகவை விமர்சிக்கும் விஜய், அதிமுக பற்றி பேசுவதையே தவிர்த்து வந்தார். ஏனென்றால் தான் எதிர்க்கும் அளவில் அதிமுக இல்லை, பாஜகவின் முகமாக தான் அதிமுக இருக்கிறது என்பதை குறிக்கும் விதமாக ‘பாஜக மற்றும் வேறு சிலர்’ என்ற கருத்தை தெளிவாக முன் வைத்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு பரப்புரையில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிப்பதாக கூறி, சுமார் 10 தொகுதிகளின் பெயரை குறிப்பிட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் ‘விஜய்’ என்று கூறினார். அதோடு, ஒவ்வொரு தொகுதியிலும் தவெக வேட்பாளருக்கு வாக்கு அளித்தால் அது தனக்கே அளித்ததற்கு சமம் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்தார். அந்த யுக்தி அவருக்கு உறுதியாக கை கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தப்புக்கணக்கு போட்ட ஸ்டாலின்

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் விஜய் பற்றி பேசுவதையே தவிர்த்து வந்தார். மத்தியில் ஆளுகிற பாஜக தான் தங்களது நேரடி எதிரி என்று தெளிவுபடுத்த விரும்பினார். திமுகவை விஜய் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது கூட, புதிதாக வருகிறவர்கள் திமுகவை விமர்சித்து தான் அரசியல் பழகுவார்கள் என்று கடந்து சென்றார். ஆனால் அவருடைய இந்த யுக்தியானது தீவிர திமுக ஆதரவாளர்களை தவிர மற்றவர்களிடம் எடுபடவில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தனது தந்தையின் வழியையே பின்பற்றினார். தனது பரப்புரைகளில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பேசி வந்தார். அதிலும், சசிகலாவின் காலில் இபிஎஸ் விழுந்து வணங்கும் புகைப்படத்தை ஒவ்வொரு தொகுதியாக எடுத்துச் சென்று காட்டி விமர்சித்தார். இதற்காக, இபிஎஸ் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், எடப்பாடிக்கு நீதிமன்றம் ஆதரவாக செயல்படவில்லை. 33 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவின் அடிமை தான் எடப்பாடி பழனிசாமி. அவர் தமிழ்நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிப்பவர் என்று முத்திரை குத்தினார்.

கூட்டணிகளின் வெற்றி விவரம்

திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டுமே வெளியேறியது. தேமுதிக, விசிக, சிபிஐ, ஐயுஎம்எல், சிபிஐ, மதிமுக போன்ற மற்ற அனைத்து கட்சிகளும் திமுகவிலேயே அங்கம் வகித்தன. கூட்டணி குறித்து தவெகவுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது என்று அறிந்திருந்தும், அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் 28 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவற்றில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதே போல், தேமுதிகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டதில் 1 இடத்திலும், விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 8 இடங்களில் 2-லும், சிபிஐ, சிபிஐ(எம்) தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டிலும் அந்த கட்சி வெற்றி பெற்றது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக போட்டியிட்ட 18 இடங்களில் 4 தொதுகளிலும், டிடிவி தினகரனின் அமமுக 11 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

அடுத்து என்ன?

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தவெக 108 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை. எனவே இரண்டு திராவிடக் கட்சிகளின் கூட்டணி கட்சிகளும் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒரு விஷயமாக, தேர்தலுக்கு முன்பே ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்று கூறி விஜய், வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த போதிலும் தவெகவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை.

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்குள் கூட்டணி குறித்த முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், ப. சிதம்பரம் பரிந்துரையின்பேரில், சோனியா காந்தி வலியுறுத்தி, காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத விதமாக அமைந்த நிலையில் தவெகவிற்கு யார் யார் ஆதரவளிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

இதையும் படிங்க:

1. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2. தனிப் பெரும்பான்மை பெறாத தவெக; ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் என்ன?