ஈரானுக்கு எதிரான போர் வளைகுடா நாடுகள் வரை எதிரொலிப்பது ஏன்? அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமா ஈரான்?
அமெரிக்காவுக்கு சவால் விடுவது போல ஈரானிய ராணுவ கட்டமைப்பு இல்லை என்றாலும், யாரையும் துணிந்து எதிர்க்கும் ராணுவ வலிமை இருக்கிறது என்பதற்கு கடந்த மூன்று நாள்களாக அந்நாடு மேற்கொள்ளும் எதிர் தாக்குலே சாட்சி.

By Bilal Bhat
Published : March 2, 2026 at 11:08 PM IST
ஈரானை மையமாக கொண்டு அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் சல்லடைப் போட்டு தாக்குதலில் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில், மத்திய கிழக்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடந்த வாரம் வரை இது போன்ற நிலையை மக்கள் சந்திப்பார்கள் என்று அந்த பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டு தலைவர்களும் எண்ணியிருக்க மாட்டார்கள். இஸ்ரேல், ஈரான், கத்தார், லெபனான், குவைத் என எங்கு திரும்பினாலும் கடந்த மூன்று நாட்களாக குண்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளது. வரலாறு எத்தனையோ போர்களை பார்த்துள்ளது. அமெரிக்கா எத்தனையோ நாட்டுகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால், சுமார் ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளை குறி வைத்து அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது என்றால், அது உள்ளபடியே மற்ற நாடுகளை சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
அணு ஆயுத தயாரிப்பு மட்டுமே காரணமா?
ஈரான் சட்ட விரோதமாக ஆணு ஆயுதத்தை தயாரிக்கிறது. இது உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே அச்சு பிசகாமல் அனைத்து இடங்களிலும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. ஆனால், அதனுடன் நட்புப் பட்டியலில் இருக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் அணு ஆயுதம் வைத்திருப்பதை மறந்தும் கூட அமெரிக்கா கண்டித்ததாக நினைவில்லை. இது ஒருபுறம் என்றால், அதிரடி தாக்குதல் நடத்தி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்த அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது ஈரான்.

குறிப்பாக ஈரானை பல தாசாப்தங்களாக ஆண்ட அதன் உச்ச தலைவர் காமேனி உள்ளிட்டவர்களுக்கு எதிராக அதிருப்தியில் இருந்தவர்களை கூட தற்போது ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் பர்தா அணியவில்லை என்று காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அப்போது பெண் சுதந்திரத்திற்கு எதிரான இருக்கும் இந்த ஆட்சி வேண்டாம் என்று கூறி பெரிய அளவில் போராட்டங்களும் கூட ஈரானில் நடைபெற்றன. பழமைவாதத்திற்கு எதிராக ஒரு பெருங்கூட்டம் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வந்தாலும், அவர்களை எல்லாம் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் ஓரணியில் இணைத்து, ஈரானின் இறையாண்மை யாரையும் விட, மற்ற எந்த நோக்கத்தையும் விட முக்கியமானது என நினைக்க வைத்துள்ளது.
தப்புக் கணக்கு போட்ட அமெரிக்கா
ஈரானில் உச்ச தலைவரை ஆதரிப்பவர்கள் ஒருபுறம், எதிர்ப்பவர்கள் மறுபுறம் என இருக்கும் நிலையில், அரசியல்ரீதியாக இதை அணுக முயற்சிக்காமல், ட்ரம்ப் உள்ளிட்ட மேற்கத்திய தலைவர்கள் ஆயுதங்களை கையில் எடுத்ததால், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்த ஒரு சில ஈரானிய மக்களும் ஒன்றிணைந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறார்கள். எங்கள் நாட்டில் நுழைந்து எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, யாரிடம் இருந்து எங்களை காப்பாற்ற போகிறீர்கள்? என்று அவர்களின் எதிர்க் கேள்விக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளிடம் சரியான பதிலில்லை. சரியான பதில் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

ஈரான் ஆட்சியாளர்களின் மீதான தாக்குதலை அந்த நாட்டு மக்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த அமெரிக்க தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றமே கிடைத்தது. தங்களின் இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே இதை ஈரானியர்கள் பார்க்கிறார்கள். இதற்கு காமேனி இறுதி சடங்கில் கூடியிருந்தவர்கள் எழுப்பிய முழக்கமே சாட்சி. எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்காலம், அதை காலமும் நாங்களும் பார்த்துக் கொள்கிறோம், ஆனால் எங்கள் மக்களை எங்களுடைய நிலத்தை அழித்து நீங்கள் எதுவும் எங்களுக்கு செய்ய வேண்டாம் என்பதே அவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சொல்லாமல் சொல்கின்றனர்.
ஈரானின் ராணுவ கட்டமைப்பு
அமெரிக்காவுக்கு சவால் விடுவது போல ஈரானிய ராணுவ கட்டமைப்பு இல்லை என்றாலும், யாரையும் துணிந்து எதிர்க்கும் அளவுக்கு அதன் ராணுவ வலிமை இருக்கிறது என்பதற்கு கடந்த மூன்று நாள்களாக அந்நாடு மேற்கொள்ளும் எதிர் தாக்குதலே சாட்சி. பெரும்பான்மை நாடுகளை போல் அல்லாமல், ஈரானின் ராணுவ கட்டமைப்பு சற்று சிக்கலானது. அந்த நாட்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அதன் உச்ச தலைவரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். மேலும் ராணுவ தளபதி, அதிபர் என அனைவரும் உச்ச தலைவரின் கண் அசைவில் செயல்படுவார்கள்.
இவ்வாறு ஜனநாயக நாட்டில் உள்ளது போல் அல்லாமல், ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தனித்தனியாக செயல்படுவது சற்று வித்தியாசமாக இருந்தாலும், அமெரிக்கா சற்று குழம்பி போக இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் யார் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதை எதிரியால் கணிக்க முடியாத வகையில் அதன் ராணுவ கட்டமைப்பு உள்ளது. இது மட்டுமே அமெரிக்க தாக்குதலை எதிர் கொள்ள போதுமானதா? என்பது இந்த போரின் முடிவில் தான் தெரிய வரும்.

