ETV Bharat / opinion

In Depth | முன்னாள் ‘காட்பாதர்களை’ அலற வைக்கும் தலிபானின் புதிய கூட்டணி - ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

சிஐஏ மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை ஒரு காலத்தில் விலக்கி வைக்க முயன்ற சக்திகளுடனேயே தலிபான்கள் நெருக்கமாவதை வெளிப்படுத்தும் இந்த புதிய கூட்டணி, ஒரு குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய 5-வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் தலிபான்கள்
கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய 5-வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் தலிபான்கள் (AP Photo/Siddiqullah Alizai)
author img

By Bilal Bhat

Published : August 22, 2026 at 1:04 PM IST

5 Min Read
Choose ETV Bharat

1979-ல் ஐஎஸ்ஐ அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அக்தர் அப்துல் ரஹ்மான் கானிடம், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக் ஒருமுறை, "ஆப்கானிஸ்தானில் நீர் சரியான வெப்ப நிலையில் கொதிக்க வேண்டும்" என்று கூறினார். அதன் அர்த்தம், சோவியத் படைகள் அந்த நாட்டை ஆக்கிரமித்திருந்த அந்த காலகட்டத்தில், கம்யூனிச ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும், இதற்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கும் என்பதாகும்.

இப்போது ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியனின் கட்டுப்பாடு இல்லை. ஏன் சோவியத் யூனியனே இப்போது இல்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அமெரிக்க வீரர்கள், 2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரே இரவில் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களைக் கைப்பற்றிய தலிபான்கள், இப்போது ஆட்சியில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனை வாஷிங்டனால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம், கொதிக்கும் நீரில் கை வைத்தால் கையும் வெந்துவிடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தானாலும் தலிபான்கள் விவகாரத்தில் தலையிட முடியவில்லை.

காபூலில் தலிபான் கொடிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற குழந்தைகள்
காபூலில் தலிபான் கொடிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற குழந்தைகள் (AP Photo/Nava Jamshidi)

ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட பல தசாப்தங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் அமெரிக்காவின் சிஐஏ ஆகியவை இணைந்து தொடங்கிய ஒரு நடவடிக்கை, இன்று நாளுக்கு நாள் எப்படி வலுவிழந்து வருகிறது என்பதற்கு தலிபான்களின் இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி ஒரு தெளிவான சான்றாக உள்ளது. ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஆக்கிரமிப்புக்கு பிறகு, சோவியத் எதிர்ப்புப் போராட்டத்தை வழி நடத்த ஐஎஸ்ஐ அமைப்பு தனது மூத்த ராணுவ அதிகாரிகளை அந்நாட்டிற்குள் அனுப்பி வைத்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகும் ஆப்கானிஸ்தான் மீதான கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பாகிஸ்தான் தக்க வைத்துக் கொள்வதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

பிரிகேடியர் எம். யூசுப் மற்றும் மேஜர் மார்க் ஆட்கின் ஆகியோர் தங்கள் புத்தகத்தில் (Afghanistan-The Bear Trap: The defeat of a superpower), இந்த நோக்கத்தை "ஆப்கானிஸ்தானை மற்றொரு வியட்நாமாக மாற்றுவது" என்றும், இதில் அமெரிக்கர்களின் இடத்தை ரஷ்யர்கள் பிடிப்பார்கள் என்றும் விவரித்துள்ளனர்.

ஐஎஸ்ஐ-யின் ஆப்கானிஸ்தான் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்த பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பிரிகேடியரான அந்த நூலாசிரியர், "போரின் மென்பொருள்" (software of war) என்று அழைக்கப்பட்ட ஒரு துறையை பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த துறையின் மூலம் சிஐஏ-வின் நிதி தாராளமாக கொண்டு வரப்பட்டு, அது சோவியத் ராணுவத்தை எதிர்த்துப் போராடிய ஆப்கானிய ஆயுதக் குழுக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

பஷ்டோ மொழி பேசும் ஆப்கானியப் போராளிகள் முகாமிட்டிருந்த இந்துகுஷ் மலைத் தொடரின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு பெருமளவிலான ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அதேபோல், இந்துகுஷ் மலைத்தொடரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசித்த தாஜிக், ஹசாரா மற்றும் உஸ்பெக் இன மக்களுக்கும் (இவர்களில் பலர் டாரி அல்லது பாரசீக மொழி பேசுபவர்கள்) உதவிகளும் வழங்கப்பட்டன.

ஆப்கன்  வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தலிக்
ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தலிக் (AP Photo/Siddiqullah Alizai)

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு, பஷ்டூன்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் வடக்குப் பிரிவுகளுக்கு எதிராகப் போரிட்டன. அமெரிக்கர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்ட வடக்குப் படைகள், இறுதியில் தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டன. தங்களை அடக்குவதற்கான வெளி சக்திகளின் முயற்சிகளை பஷ்டூன்கள் வரலாற்றுரீதியாக எதிர்த்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை அமெரிக்கர்கள் கண்டுகொள்ளாதது போல் தோன்றியது. அந்த பகுதியின் போரிடும் பழங்குடியினரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பிரிட்டிஷார் கூட போராடியிருந்தனர் என்பது இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு ஆதரவளித்த போது பாகிஸ்தானுக்கு வேறு ஒரு நோக்கம் இருந்தது. இந்தியாவும் சோவியத் யூனியனும் கூட்டாளிகளாக இருந்ததால், தான் ஓரங்கட்டப்படலாம் என்று பாகிஸ்தான் அஞ்சியது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கு சோவியத் யூனியன் ஒரு பலம் வாய்ந்த வெளிப்படையான எதிரியாக இருந்தது. மேலும் வியட்நாமில் அமெரிக்கா சந்தித்ததை மாஸ்கோவும் சந்திக்க வேண்டும் என்று வாஷிங்டன் விரும்பியது. எனவே, ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த சோவியத் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இருந்தது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான போராட்டங்களுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவு என்பது, இன்று காசாவிற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு வாஷிங்டன் அளிக்கும் ஆதரவோடு ஒப்பிடத்தக்க வகையில் இருந்தது. சோவியத்துக்கு எதிரான ஆப்கானிஸ்தான் போருக்கு நிதியளிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவும் மிக தாராளமாகவே இருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா உதவுவதை தீவிரமாக ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் வில்சன், பாகிஸ்தானில் உள்ள மிராம் ஷா நகருக்கு அருகே, ஆப்கானிஸ்தானுக்குள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாவர் என்ற இடத்தில் இருந்த ஆப்கானிய முகாமிற்கு சென்றார். இது ஜனவரி 14, 1985 அன்று 'தி டெய்லி டெலிகிராஃப்' பத்திரிகையில் செய்தியாக வெளியானது. ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த முதல் அமெரிக்க அரசியல்வாதி வில்சன் ஆவார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம், உளவுத் தகவல்களை சேகரிப்பதற்கும் ஆப்கானியப் போராளிகளுக்கு உதவிகளை வழிநடத்துவதற்கும் தனது சொந்த வீரர்களை ஆப்கானிஸ்தானுக்குள் செயல்பட வைத்திருந்தது. அவர்களில் பலர் காணாமல் போனார்கள் அல்லது போரில் உயிரிழந்தனர். 1989-ல், காபூலில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் சோவியத் வீரர்களால் பிடிக்கப்பட்டதாக 'தி டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டது. அவர்கள் உளவு பார்த்ததை ஒப்புக் கொண்டதாகவும், புல்-இ-சர்கி என்ற சிறையில் 16 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தச் சிறையில், கைதிகள் அந்த கொடூரமான நரக வாழ்க்கையை அனுபவிப்பதை விட மரணத்தையே விரும்புவதாக சொல்லப்பட்டது. அந்த இருவரையும் பாகிஸ்தான் கைவிட்டது. ராணுவ மோதல் மட்டுமல்லாமல், ஒரு உளவுத்துறைப் போரும் இணையாக நடந்து கொண்டிருந்தது.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், ஆப்கானியப் பெண்களின் உரிமைகளைப் பறித்ததற்காக தலிபான்களை மீண்டும் மீண்டும் விமர்சித்தன. ஆயினும், ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்திருந்த போது பெண்களின் உரிமைகள் அவர்களாலேயே பாதுகாக்கப்பட்டது. ஆக்கிரமிப்புக்குப் பிறகு, சோவியத் ஆதரவு பெற்ற அரசாங்கம் ஆப்கானியப் பெண்களுக்குக் கல்வி அளிப்பதற்கு முன்னுரிமை அளித்தது. ஆனால், பெண் கல்வி என்பது தங்கள் கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீதான தாக்குதல் என்று ஆப்கானிய சமூகத்தின் ஒரு பகுதியினர் கருதினர். சோவியத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட அதே ராணுவம், காலப்போக்கில் அவர்களுக்கு எதிராகவே திரும்பத் தொடங்கியது.

தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வருவதாகத் தெரிகிறது. அதே வேளை, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுடனான அதன் உறவு மிகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் ஐந்து ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் டெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகம் நடத்திய விழாவும், அதில் இந்திய அதிகாரிகள் அழைக்கப்பட்டதும் மாறி வரும் அரசியல் சூழலுக்கான மற்றொரு அறிகுறியாகும். அதே சமயம், எல்லைப் பகுதியில் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், காபூல் மற்றும் இஸ்லாமாபாத் இடையிலான கசப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளன.

தலிபான் தலைவரான அமீர் முத்தகி இந்தியாவுக்கு வருகை தந்ததும், உத்தரப்பிரதேசத்தின் தியோபந்தில் உள்ள 'தாருல் உலூம் தியோபந்த்' மத அறிஞர்களை சந்திக்கச் சென்ற முடிவும் அரசியல் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன. இது நிச்சயமாக பாகிஸ்தானை கதிகலங்க வைத்திருக்கக் கூடும். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவும், அதைத் தொடர்ந்து பெண் பத்திரிகையாளர்களை அதில் பங்கேற்க அனுமதிக்கவும் தலிபான்கள் எடுத்த முடிவு, இந்தியாவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிதல் இருப்பதை காட்டுகிறது.

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை ஒருபுறம் நிறுத்தி விட்டு, சிஐஏ மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை ஒரு காலத்தில் விலக்கி வைக்க முயன்ற சக்திகளுடனேயே தலிபான்கள் நெருக்கமாவதை வெளிப்படுத்தும் இந்த புதிய கூட்டணி, ஒரு குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது.

தாங்களே உருவாக்கிக் கொண்ட இந்த இக்கட்டான சூழலை பாகிஸ்தானும் அமெரிக்காவும் எவ்வாறு கையாளப் போகின்றன என்பது உற்றுநோக்கத்தக்க ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும். 'சரியான வெப்பநிலையில்' கொதிக்க வைக்க வேண்டும் என்று ஜியா-உல்-ஹக் விரும்பிய அந்த நீர், இறுதியில் கொதித்து நீராவியாகி இருக்கலாம். அதன் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு காலத்தில் நம்பிய சக்திகள், இப்போது அதன் விளைவுகளை சமாளிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றன.