ETV Bharat / opinion

அமெரிக்கா - சீனா வர்த்தக போருக்கு இடையே ஒரு தற்காலிக தீர்வே ''பூசன் ஒப்பந்தம்''!

நிலைமையை சமாளிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகு, கடந்த மே மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு 2 நாடுகளும் வரியை குறைத்துக்கொண்டன.

பூசன் உச்சி மாநாட்டில் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங்
பூசன் உச்சி மாநாட்டில் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 9, 2025 at 10:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

- By அஜய் ஸ்ரீவஸ்தவா

தென்கொரியாவின் பூசன் நகரில் அக்டோபர் 30 ஆம் தேதியன்று உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இதனால் மீண்டும் ஒரு போர் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, சீனப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியை குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதுடன் ஃபெண்டானில் தொடர்பான வரியை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல் சீனாவும் அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடைக்கு ஓராண்டு விலக்கு, அமெரிக்க வேளாண் பொருட்கள் கொள்முதல் போன்றவைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா, சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக மோதல்கள் இருந்து வரும் நேரத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னால் ஒரு முக்கிய நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது. அரியவகை தாதுக்கள் மற்றும் குறைகடத்தி பொருட்களுக்கு அமெரிக்கா சீனாவை சார்ந்திருக்கிறது. சீனாவை தவிர்த்து வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய நினைத்தாலும் உலகளாவிய விநியோகத்தில் சீனா 80 சதவீதத்தை கைக்குள் வைத்திருக்கிறது. சீனாவிற்கு இந்த சலுகைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. அதே சமயம் உள்நாட்டிலேயே நிதி நெருக்கடியை சந்தித்து வருகிற அமெரிக்காவிற்கு இந்த வர்த்தகம் உதவியாக இருக்கும்.

இரு நாடுகளிடையேயான பொருளாதார அதிர்ச்சி அலைகள்

அமெரிக்கா - சீனா இடையேயான பொருளாதார மோதல் 2018 ஆம் ஆண்டு முதலே நடந்து வருகிறது. இடையே அந்த போர் சற்று தணிந்த நிலையில் இரண்டாவது முறையாக டிரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து சீனா - அமெரிக்கா வர்த்தக போரானது மீண்டும் பற்றிக்கொண்டது. இந்த இரு நாடுகளிடையேயான மோதல் மற்ற நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிப்ரவரி மாதம் சீனா மீதான வரியை டிரம்ப் அதிகரிக்க பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. சீனா மீது அமெரிக்கா 145% வரி விதிக்க சீனாவும் அமெரிக்க பொருட்களின் மீது 125% வரி விதித்தது.

குறிப்பாக சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிற ரசாயனங்களை சீனா நிறுத்த தவறிவிட்டதாக டிரம்ப் கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற கோழிகள், சோயா பீன்ஸ், கோதுமை, பன்றி இறைச்சி மற்றும் சோளம் உள்ளிட்ட உணவு பொருட்களை குறிவைத்தது.

அதே நேரத்தில் தனது நாட்டில் மட்டுமே கிடைக்கிற அரிய வகை மண் மற்றும் காலியம் போன்றவற்றின் ஏற்றுமதியையும் சீனா கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிற இந்தியா, வியட்நாம் மற்றும் மெக்சிகோ போன்ற மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. மேலும் அமெரிக்காவை ‘பொருளாதார கொடுமைப்படுத்தும் நாடு’ என்று சித்தரித்தது.

இதையும் படிங்க: 1. அரசு நிதி முடக்கம் எதிரொலி; அமெரிக்காவில் 2-வது நாளாக 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
2. நிதி முடக்கத்தால் திணறும் அமெரிக்க அரசு! 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி!

ஒருவழியாக எட்டப்பட்ட ஒப்பந்தம்

இப்படி சீனா மீது அமெரிக்கா வரி அதிகப்படியான வரி விதித்தாலும் அமெரிக்காவில் சீனப் பொருட்களின் பயன்பாடு மற்றும் தேவை அதிகமாக இருந்ததால் என்னவோ, மே 2025 இல் 28.2 பில்லியனாக இருந்த வர்த்தகம் செப்டம்பரில் 34.3 பில்லியனாக உயர்ந்தது. அதே நேரத்தில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 37% குறைந்தது.

இதனால் நிலைமையை சமாளிக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகு, கடந்த மே மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரு நாடுகளும் வரியை குறைத்துக்கொண்டன. அதன்படி சீனா மீதான வரியை அமெரிக்கா 30 சதவீதமாக குறைப்பதாகவும், சீனாவும் 10 சதவீதமாக குறைப்பதாகவும், 90 நாட்களுக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக இரு நாடுகளும் கூட்டு அறிக்கை வெளியிட்டன.

அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒப்பந்தமானது மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பானது இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையும் நிலையில், பூசனில் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பிற்கு பிறகு இரு நாடுகளும் இந்த வரி குறைப்பை ஓராண்டுக்கு நீட்டித்து இருக்கின்றன.

பூசன் உச்சி மாநாடு பேச்சுவார்த்தை
பூசன் உச்சி மாநாடு பேச்சுவார்த்தை (AP)

வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட போட்டி

உலகின் மாபெரும் பொருளாதார நாடுகளாக பார்க்கப்படுகிற அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் என்பதையும் தாண்டி கடுமையான போட்டி நிலவுகிறது. 2024 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகம் 582 டாலரை எட்டியது. அதில் அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மின்னணு பொருட்கள், பெட்ரோலியம் மற்றும் சோயா பீன்ஸ் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி 143 பில்லியனாக இருந்தது.

அதே போல் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள் போன்றவற்றின் இறக்குமதி 439 பில்லியனாக இருந்தது. இப்படி இரு நாடுகளும் பல ஆண்டுகளாக வர்த்தகத்தில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி வந்தாலும் இரு நாடுகளுமே இந்த நிலைமையை மாற்ற நினைக்கின்றன. இதற்காக வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கில் பல்வேறு திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் சிப் (chip) விநியோகத்திற்கு சீனாவையே பெரும்பாலும் சார்ந்திருக்கிற நிலையில் அரியவகை மற்றும் சிப்களின் விநியோகங்களில் நெருக்கடி ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. உலகமயமாக்கல் நடைமுறைக்கு வந்த 3 தசாப்தங்களுக்கு பிறகு அமெரிக்காவும், சீனாவும் அதை மாற்ற முயற்சித்து வருகின்றன. பிற நாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டு உற்பத்தியையும், அதன் பயன்பாட்டையும் மேம்படுத்த நினைக்கின்றன. எனவே பூசன் போர் நிறுத்த ஒப்பந்தமானது நீண்ட காலமாக நடந்து வருகிற இரு நாடுகளின் போட்டிக்கு ஒரு தற்காலிக நிறுத்தம் தானே தவிர, இது நிரந்தரமல்ல.