டிரம்ப் போட்ட தப்புக்கணக்கு - ஈரானின் எதிர்வினை உணர்த்தும் பாடம் என்ன?
தனது ஆட்சிக் காலத்தில், புதிய போர் எதையும் தொடங்கமாட்டோம் என்ற ஒரு புனிதமான வாக்குறுதியோடுதான் டிரம்ப் நிர்வாகம் அரியணை ஏறியது.


By Vivek Mishra
Published : March 18, 2026 at 6:41 PM IST
|Updated : March 19, 2026 at 9:41 AM IST
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தாக்குதல், ஒரு சாதாரண போர் போன்ற பிம்பத்தை நமக்களித்தாலும், அது முற்றிலும் மாறுபட்ட சூழலில் பயணிப்பதை உற்று கவனித்தால் புரிந்துகொள்ள முடியும்.
ஈராக் போர் மற்றும் வளைகுடா நாடுகள் மீதான போரில் அமெரிக்காவின் தலையீடு, தற்போதைய ஈரான் பிரச்சினையின் சாயலைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இம்முறை ஈரானில் ஏவப்பட்டுள்ள ராணுவத் தாக்குதல், இதுவரை உலகம் கண்ட போர்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
இதை ஒரு சாதாரண போர் என்ற தோற்றத்தில் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல், ஈரானின் எதிர்வினையை குறைத்து மதிப்பிட்டது. அவர்கள் நாடி நரம்பெல்லாம் கணக்கிட்டு வைத்திருப்பார்கள் என்று அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இம்மி அளவும் நினைத்திருக்கவில்லை.
எனினும், உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊசலாட்ட நிலைக்கு தள்ளிவிட்டு, ‘நாங்கள் வெற்றியடைந்து வருகிறோம்’ என்று டிரம்ப் கூறி வருகிறார். அந்தவகையில் இதை ஒரு ‘மாயத்தோற்றம்’ என்று வர்ணிப்பதே சரியாக இருக்கும்.

கடந்த ஆண்டு ஈரானின் அணு ஆற்றல் நிலைகள் மீது அமெரிக்க ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசப்பட்டன. இது ஒரு சாதாரண முயற்சி என்று கடந்துவிட முடியாது. இந்த வகை குண்டுகளைப் பயன்படுத்தி, ஒரு நாட்டின் முக்கியப் பகுதியை தாக்கிவிட்டு, எளிதாக வெளியேற முடியும்.
மேலும், திட்டமிடப்பட்ட இலக்குகளை மின்னல் வேகத்தில் அழித்துவிடலாம் என்றும் அமெரிக்கா நினைத்திருந்தது. அதாவது, ‘ஒரு நீண்டகால போருக்கு தாங்கள் தயாராக இல்லை’ என்பதையே டிரம்ப் நிர்வாகம் சொல்லிவந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ‘தனது ஆட்சிக் காலத்தில், புதிய போர் எதையும் தொடங்க மாட்டோம்’ என்ற ஒரு புனிதமான வாக்குறுதியோடுதான் டிரம்ப் நிர்வாகம் அரியணை ஏறியது. ஆனால், ‘சீட்டுக்கட்டுகளை குலைப்பது’ போல, அமெரிக்கா அதன் வாக்குறுதிகளை மறந்து, ஈரான் மீதான போரை 165-க்கும் மேற்பட்ட அப்பாவி பள்ளிக்குழந்தைகளை கொன்று தொடக்கி வைத்தது.
திரும்பி வர முடியாத பாதை
பொதுவாக இருநாடுகள் முட்டிக்கொண்டு, கடைசியாக கையிலெடுக்கும் ஆயுதமாகவே ‘போர்’ இருந்தது. ஆனால், அமெரிக்கா வம்படியாக போரைத் தொடங்கியது, திரும்பி வரும் பாதைகளை எல்லாம் அடைத்துள்ளது. அமெரிக்கா அதன் உச்ச எல்லையை தாண்டி செயல்பட்டதாகவே ஈரானும் எண்ணுகிறது. அதனால், அவர்கள் எந்த சூழலிலும் அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஈரான் நிலைகள் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் பலவீனமாக இருக்கிறது என்றும், இப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், எளிதாக வெற்றிக் கனியை சுவைக்கலாம் எனவும் இந்த தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கலாம்.
அப்படி அமெரிக்கா ஒரு போரை தொடங்கியிருந்தாலோ, ஈரானின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி இருந்தாலோ, அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டிருக்க முடியும். ஆனால், மேற்காசியாவின் பெரிய நாடாக இருக்கும் ஈரான் மீதும், அந்நாட்டு மக்கள் மீதும் அமெரிக்கா நேரடியாக தாக்குவது போரின் திசையை வேறு வழிக்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஒரு திடீர் தாக்குதலை நடத்தி, அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் சுயமரியாதையை சீண்டியுள்ளனர். பலவீனமாக இருக்கும் போதே அடித்துவிடலாம் என்று அமெரிக்கா போட்ட கணக்கை, ‘அது எவ்வளவு பெரிய விபரீதம்’ என்பதை ஈரானின் எதிர்தாக்குதல் உணர்த்தி இருக்கிறது.
தப்பிய டிரம்ப் கணக்கு
‘திரும்பிப்பார்க்க ஒன்றுமில்லை’ என்ற சுடரை ஈரானியர்கள் மனதில் அமெரிக்க எரியவிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக அந்நாட்டு மக்களும் அணிதிரண்டு ஈரான் அரசுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
தங்களின் உரிமைகளை அங்கீகரித்தல், சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற உத்தரவாதம் போன்ற நிபந்தனைகளை ஈரான் முன்வைக்கிறது. இவையே ஈரானின் எதிர்கால பாதுகாப்பிற்கு அச்சாணியாக இருக்கும். ஆனால், இவை எதற்கும் அமெரிக்காவோ, இஸ்ரேலோ உடன்படும் மனப்பாண்மையில் இல்லை என்பதே தற்போதைய நிலவரம்.
ஏதோ ஒரு வழியில் போரைத் தொடங்கிவிட்டு, தோல்வியில் பின்வாங்க மனமில்லாமல் தான் அமெரிக்காவும் தவித்து வருகிறது. எளிதாக அழித்துவிடலாம் என்ற அவர்களின் கண்ணோட்டத்தை, ஈரான் சுக்குநூறாக சிதைத்துள்ளது. அமெரிக்கா கிஞ்சித்தும் எதிர்பார்க்காத சில கூட்டாளிகளை ஈரான் தனது கணக்கில் வைத்திருந்தது, இந்த போரின்போது தான் உலகிற்கு தெரியவந்தது.
நரம்புகளில் கைவைத்த ஈரான்
அமெரிக்காவின் ராணுவத் தளங்களுக்கு இடமளித்து பங்காளிகளாக வலம்வரும் துபாய், சார்ஜா, கத்தார், சவுதி அரேபியா, பெஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் குறிவைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டிரம்பின் கணக்கு கூட்டல்கள் அனைத்தும் ஈரானின் இந்த நடவடிக்கையால் வலுவிழந்தன.
தற்போது, பொருளாதார நரம்பு மண்டலங்களைத் தாக்கும் ஈரானின் திறன், உலக நாடுகளுக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ‘ஹார்மூஸ் ஜலசந்தியை’ மூடிவிடுவோம் என்ற அச்சுறுத்தல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ‘பிரம்மாண்ட வியூகம்’ என்பது ஈரானைப் பொறுத்தவரை தப்புக் கணக்குகளால் நிரம்பியதாகப் பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் அமெரிக்கா இந்த புதைக்குழியில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறது. அதேவேளை, தங்கள் கெளரவத்தை பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது.

தற்காப்புக்காகச் சுவரில் முட்டி நிற்கும் ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகளையும், வளைகுடா நாடுகளையும் குறிவைத்துத் தாக்கும் என்று பென்டகனோ அல்லது டிரம்ப்போ துளியும் கணிக்கவில்லை என்பதே உண்மை. வளைகுடா நாடுகள் எப்போதும் பாதுகாப்பானவை என்ற தோற்றத்தையும், ஈரான் சுக்குநூறாக சிதறடித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, இது முன்னெப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு ஒருபுறம், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவைச் சமன்படுத்துவது மறுபுறம் என இந்தியா திணறுகிறது.
அமெரிக்காவின் நெருக்கடியால் ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி உறவு ஒரு பெரும் சோதனையாக இருக்கும் நிலையில், இப்போது அமெரிக்கா-ஈரான் போருக்கு நடுவே இந்தியா தனது நடுநிலை மனப்பான்மையை தக்கவைக்க முயற்சிப்பது சற்று நெருடலும், நெருக்கடியும் நிறைந்ததாகவே பார்க்க முடிகிறது.
நடுகாட்டில் இந்தியா
ஏற்கனவே இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் பல உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஈரானின் உச்சத் தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹியும், “இந்திய மக்கள் தங்களின் துயரங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கின்றனர்.
தங்கள் மீது தேவையில்லாத தாக்குதலை நடத்தி அப்பாவி குழந்தைகளை கொன்ற அமெரிக்கவுக்கு எதிரான கருத்தை பகிர்ந்து வருகின்றனர். இது இந்தியா-ஈரான் இடையிலான பிணைப்பிற்கு வலுசேர்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டு பேசினார். மேலும், இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியில் பாதுகாப்பாக கடப்பதை ஈரான் உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
| இதையும் படிங்க |
இதனைத் தொடர்ந்து, ஹார்மூஸ் ஜலசந்தியை இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து வருகின்றன. இல்லையெனில், ஒரு பெரிய நெருக்கடி நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கும்.
இந்திய அரசும் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து வரும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஈரானுடன் தொடர்பில் இருக்கிறது. இவ்வாறான நெருக்கடி கட்டத்திலும் கூட, எந்த ஒரு பக்கமும் சாயாமல் இந்தியா மேற்கொள்ளும் இந்த ‘வியூகச் சமநிலை’ போருக்கு பிந்தைய வர்த்தகத்தையும் சீராக மேற்கொள்ள வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களே. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் ஈடிவி பாரத் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

