ETV Bharat / opinion

இந்தியாவுக்கு தண்ணீர் தன்னிறைவு ஏன் இப்போது தேவை?

நகர்ப்புறங்களில் கான்கிரீட்மயமாக்கல் காரணமாக மழைநீர் கழிவுநீர்க் கால்வாய்களில் கலந்து விடுகிறது. இது நகர்ப்புறங்களில் நீர் உறிஞ்சப்படுவதை பெருமளவில் தடுக்கிறது.

இந்தூரில் லாரி மூலம் தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்
இந்தூரில் லாரி மூலம் தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள் (ANI)
author img

By Indra Shekhar Singh

Published : January 8, 2026 at 3:12 PM IST

5 Min Read
Choose ETV Bharat

புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், நமது கொண்டாட்டங்களை தண்ணீர் தொடர்பான 3 துயர சம்பவங்கள் சீர்குலைத்து விட்டன. முதலாவது, இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை பருகிய 10 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. 2-வது குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில், அசுத்தமான குடிநீரால் 100-க்கும் மேற்பட்டோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது துயரம் பெங்களூருவில் இருந்து வருகிறது, அங்கு குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் மக்களையும், அந்த துறை சார்ந்த நிபுணர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. ஏனென்றால், இந்தூர், நாட்டின் மிகவும் தூய்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. பெங்களூரு பசுமை மேலாண்மை மற்றும் தூய்மைக்குப் பெயர் பெற்ற ஒரு முக்கிய பெருநகர். காந்தி நகர் பிரதமரின் சொந்த மாநிலத்தின் தலைநகர்.

அப்பாவி மக்களின் உயிரிழப்பும், அவர்கள் படும் துன்பமும் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டது நல்ல விஷயம் தான். ஆனால் நாம் வழங்கும் நீதி என்பது பணத்துடன் மட்டும் நின்று விடக் கூடாது. அரசியல் சேற்றை வாரி இறைப்பதைத் தவிர்த்து, இந்த துயரங்களில் இருந்து அரசுகள் கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல், சுகாதரமற்ற தண்ணீரால் எந்த உயிரும் பலியாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த துயரங்கள் குறித்து ஒரு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நமது நீர் மேலாண்மையில் உள்ள ஏதேனும் ஒரு குறைபாடு அல்லது தவறு இந்த மூன்று சம்பவங்களையும் இணைக்கிறதா? என்பதை ஆராய வேண்டும். இந்த துயரங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குழாய் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் 'ஜல் ஜீவன் இயக்கம்' மீது ஒரு மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது. நடப்பு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக 67,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தூரில் பாகிரதபூர் பகுதியில் வீடு அருகே பைப் மூலம் தண்ணீர் பிடிக்கும் சிறுவன்
இந்தூரில் பாகிரத்பூர் பகுதியில் வீடு அருகே குழாய் மூலம் தண்ணீர் பிடிக்கும் சிறுவன் (ANI)

நாட்டையே உலுக்கிய இந்த துயரங்களுக்கு காரணமான அலட்சியம் எங்கிருந்து உருவானது என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த தண்டனையுடன் நின்று விடக் கூடாது. இந்த மூன்று சம்பவங்களும் நமது நகர்ப்புற தண்ணீர் விநியோகத்தில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நாம் இப்போது விழித்துக் கொள்ளவில்லை பின் எப்போதும் விழித்துக் கொள்ள முடியாது. நாட்டில் கோடைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அப்போது பொதுவாகவே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும்.

கோடையில் நாம் சந்திக்கப் போகும் தண்ணீர் பிரச்சினை குறித்து அரசு ஏற்கனவே ஓரளவு யூகித்திருக்கிறது. அதனால் தான், கடந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) கீழ் மேற்கொண்ட பணிகளை பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கு திசை திருப்புமாறு மத்திய அரசு கேட்டு கொண்டது. குறிப்பாக சில மாவட்டங்களில், திட்டத்திற்கான நிதியில் 60% வரை நீர்நிலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது.

2030-ம் ஆண்டு வாக்கில் நமது மக்கள்தொகையில் பாதி பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போகலாம் என சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஆயோக் கூறியிருந்தது. மாசுபாடு, கலப்படம் மற்றும் மாறிவரும் பருவநிலை ஆகியவை நமது நீர் வளங்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2025-26 குளிர்காலத்தில், பருவமழை மாதங்களில் கனமழை பெய்த போதும், இமயமலை பகுதியில் பனிப்பொழிவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் பல பகுதிகள் இன்னும் பனியைக் காண ஏங்குகின்றன. இதற்கிடையே, கட்டுக்கடங்காத நீர் மாசுபாடு, ஆறுகளில் சட்டவிரோத மணல் அள்ளுதல் மற்றும் ஆக்கிரமிப்புகள் நமது நீரை அழித்து வருகின்றன. தொழில்துறை விவசாயம் மற்றும் நெல், கரும்பு போன்றவற்றுக்கு அரசு வழங்கும் மானியங்கள் நிலத்தடி நீர் அதிக அளவில் குறைவதற்கு வழி வகுக்கின்றன.

இந்தூரில் குடிநீர் குழாயின் மோசமான நிலை
இந்தூரில் குடிநீர் குழாயின் மோசமான நிலை (ANI)

சுருக்கமாக சொன்னால், முதலாவதாக நாம் நமது நீரை தவறாகப் பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக நமது நீரை அதிக அளவில் மாசுபடுத்துகிறோம். இவற்றுடன் காலநிலை மாற்றத்தையும் சேர்க்கும் போது, ​​நமது நீர் இருப்பு அதலபாதாளத்திற்குச் செல்கின்றன.

தற்போது வீடுகளில் குழாய்கள் அமைப்பது அல்லது ஆறுகளை இணைப்பது போன்றவை குடிநீர் விநியோகத்தை உறுதிபடுத்துவதற்கான குறுகிய கால நடவடிக்கைகளாக இருக்கலாம். ஆனால் அது சுத்தமான நீருக்கு உத்தரவாதம் அளிக்காது. சமீபத்திய சம்பவங்கள் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளன. சில நேரங்களில் விஷம் கூட குழாய்கள் மூலம் வரலாம். எனவே இதில் ஒரு புதிய கண்ணோட்டம் தேவைப்படுகிறது.

ஒருவேளை, ஏற்கனவே உள்ள முறைகளையே மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதற்குப் பதிலாக, காந்தியடிகளின் கிராம சுயராஜ்யம் என்ற கருத்தை குடிநீரிலும் கடைப்பிடிக்க நாம் பாடுபட வேண்டும். நாட்டில் நீர் மேலாண்மைக்கு தற்போது ஒரு முன்னுதாரணமான மாற்றம் தேவைப்படுகிறது. தனியார்மயமாக்கலுக்கு பதிலாக, நாடு தனது நீர் நிர்வாகத்தை மறுசீரமைத்து, அன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராம மக்கள் அடங்கிய குழுவால் செயல்படுத்தப்படும் பரவலாக்கப்பட்ட நீர் மேலாண்மை அமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் தான் நாம் நீர் சுயராஜ்யத்தை அடைய முடியும். மேலும் சுத்தமான நீர், அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

கிராம அளவில், ஒவ்வொரு கிராமத்திற்கும் அல்லது வட்டாரத்திற்கும் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் நீர்நிலைகளை பராமரிக்கவும் அல்லது தேவையான அளவு மழைநீரை சேகரிக்க முடியும். வாய்ப்பு இருந்தால், பல கிராமங்களை ஒன்றிணைத்து மழைநீரின் கடைசி துளியையும் வீணாக்காமல் சேமிக்கும் வசதி கொண்ட ஒரு வலையமைப்பை உருவாக்கலாம். இந்த முறையின் மூலம், நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும். இது மிகவும் சிக்கனமானது. ஏனெனில் பெரும்பாலான நீர் நிலைகள் மண்ணை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். பாரம்பரிய நீர் சேமிப்பு நுட்பங்களை மீட்டெடுப்பது, நீரை பூமிக்குள் ஊடுருவ வைப்பது மற்றும் நிலத்தடி நீரின் நீரியல் இயக்கத்தை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாவட்ட அளவில், இந்த வலையமைப்பு பல்வேறு வட்டாரங்களையும் நகர்ப்புறங்களையும் இணைத்து, பூமிக்கு மேலேயும், நிலத்தடியிலும் நீரின் இருப்பு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவலாக்கப்பட்ட, பொதுமக்கள் அடங்கிய குழுவால் வழி நடத்தப்படும் நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகர்ப்புறத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

இந்த முயற்சிகளுடன், ஒவ்வொரு வட்டாரமும் அல்லது பொதுமக்கள் அமைப்பும் நீரின் தரம் குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். வட்டார அளவில், கிராமப் பிரதிநிதிகள் நீரின் தரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் நீரினால் பரவும் நோய்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ய செல்பேசி அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட வேண்டும்.

நாகரிகத்தின் ஜனநாயக மற்றும் சூழலியல் உணர்வை நாம் நம்பினால் மட்டுமே இந்தியாவால் நீர் இறையாண்மையை அல்லது சுயராஜ்யத்தை அடைய முடியும். நாம் பழைய குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். சிறிய குளங்களை மீட்டெடுப்பதன் மூலம் ஆறுகளை மீண்டும் ஓடச் செய்யலாம். நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மீண்டும் காடுகளாக மாற்றப்பட வேண்டும். அதன் மூலம் இயற்கையின் பங்களிப்புடன் நீரின் இருப்பும் அதிகரிக்கும்.

மேலும், நமது பகுதிகளை அதிக நீரை உறிஞ்சும் நிலையிலிருந்து நீரை சேமிக்கும் இடங்களாக மாற்ற நாம் உதவ வேண்டும். நமது மண்ணை கரிமப் பொருட்களால் செறிவூட்டினால், அதன் நீர் தக்கவைப்புத் திறனை பெருமளவில் அதிகரிக்க முடியும். எனவே ஒரு சிறந்த நீர்க் கொள்கையின் கீழ் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

எதிர்கால நகரத் திட்டமிடல் அனைத்திலும், ஒவ்வொரு நகர்ப்புறப் பகுதிக்கும் நீர்த்தேக்கம் என்பது ஒரு கட்டாய அம்சமாக இருக்க வேண்டும். நகர்ப் புறங்களில் கான்கிரீட்மயமாக்கல் காரணமாக மழைநீர் கழிவுநீர்க் கால்வாய்களில் கலந்து விடுகிறது. இது நகர்ப்புறங்களில் நீர் உறிஞ்சப்படுவதையும் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதையும் பெருமளவில் குறைக்கிறது.

நிதி ஆயோக்கின் எச்சரிக்கையிலிருந்து தப்பிக்க, நமது நாகரிகத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, நீர் இறையாண்மை கொண்ட இந்தியாவை நோக்கி நாம் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். இந்த நேரத்தின் தேவை பெரிய அணைகளோ அல்லது பிரம்மாண்டமான நீர் திட்டங்களோ அல்ல. மாறாக சிறிய குளங்களை மீட்டெடுப்பதும், பொதுமக்களால் செயல்படுத்தப்படும் பரவலாக்கப்பட்ட நீர் புத்துயிரூட்டும் அமைப்புகளும் தான்.