அன்றிலிருந்து இன்று வரை... அப்துல் கலாமின் பார்வையில் பாதுகாப்புத் துறை...
டாக்டர் அப்துல் கலாமின் மேற்பார்வையில் 1998-ம் ஆண்டு போக்ரானில் நடந்த அணு ஆயுத சோதனை, இந்தியாவை ஒரு அணுசக்தி நாடாக காட்டியது.

Published : October 15, 2025 at 3:12 PM IST
- By DR G சதீஷ் ரெட்டி
"இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று போற்றப்படும் டாக்டர் ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கியமானவராக திகழ்கிறார். அக்டோபர் 15, 1931 அன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், மீனவ மக்களின் எளிமையான வாழ்க்கையில் தொடங்கி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக (2002-2007) உயர்ந்தது அவரது விடாமுயற்சி மற்றும் புதுமைக்கு மிகச் சிறந்த சான்றாகும்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையை கட்டமைத்ததில் டாக்டர் கலாமின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்களுக்கு வெளிநாடுகளின் உதவியை நாடி இருந்த நிலையை மாற்றி, இந்தியாவை ஏவுகணை மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிய முத்தான திட்டங்களுக்கு அவர் தான் தலைமை வகித்தார். டாக்டர் கலாமின் தொலைநோக்கு பார்வை என்பது பாதுகாப்புத் துறையில் முழுக்க முழுக்க உள்நாட்டு உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியே இருந்தது. ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்த நிலையை குறைத்தது மட்டுமல்லாமல் அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி காட்டியது. இந்த நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்புத் துறையை வலிமைப்படுத்த அரசின் தொடர் முயற்சிகளான "மேக் இன் இந்தியா" மற்றும் "ஆத்மநிர்பார் பாரத்" போன்றவற்றுக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த திட்டங்கள் ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றன.
டாக்டர் அப்துல் கலாமின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் எளிமை மற்றும் அறிவுத் தாகத்தில் தொடங்கியது. அறிவியல் உலகில் அவரது பயணம் டிஆர்டிஓ என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் உடன் தொடங்கியது. அங்கு அவர் நந்தி என்ற ஹோவர் கிராஃப்ட் வடிவமைப்பில் பணியில் சேர்ந்தார். இந்த திட்டம், சிறியது தான் என்றாலும், அவரது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது மட்டுமல்லாமல் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு ஒரு தளம் அமைத்துத் தந்தது. விண்வெளி மீதான ஆர்வம் அவரை 1969-ம் ஆண்டு இஸ்ரோவிற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் INCOSPAR என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழுவில் இணைந்தார். இதுவே நாட்டின் விண்வெளி திட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது எனலாம்.
விக்ரம் சாராபாய் போன்ற மாமேதைகளால் கவரப்பட்ட டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் தொழில்நுட்பத்தில் தனது கவனத்தை செலுத்தி அதில் திறமைகளை வளர்த்துக் கொண்டார். 1979-ல் செயற்கைக்கோள் ஏவுதள சாதனம் தோல்வி போன்றவை ஆரம்ப காலத்தில் அவருக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்தன. தோல்வித் திட்டங்களில் கிடைந்த அனுபவம் அவருக்கு தன் மீதான தன்னம்பிக்கையை அதிகரித்து அவற்றுக்கு ஒரு புதிய வடிவத்தை தந்தது. பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திற்கு 1982-ல் இயக்குநராக திரும்பி வந்தார். 1983 -ல் உள்நாட்டிலேயே ஏவுகணைகளின் வடிவமைப்பு தொடர்பான ஒரு முதன்மை மற்றும் முன்னோடியாக ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.
அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியா பிருத்வி போன்ற குறுகிய தூரம் சென்று தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி தாக்கும் ஏவுகணைகள், அக்னி போன்ற நீண்ட தூரம் சென்று இலக்கினை துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணைகள் மற்றும் ஆகாஷ், திரிசூல் போன்ற தரையிலிருந்து வான்வெளியில் இலக்கினை வழிமறித்து தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கியது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி ஏவுகணைகள், இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தியது. மேலும், டாக்டர் அப்துல் கலாமின் மேற்பார்வையில் 1998-ம் ஆண்டு போக்ரானில் நடந்த அணு ஆயுத சோதனை, இந்தியாவை ஒரு அணுசக்தி நாடாக உலகிற்கு காட்டியது. உள்நாட்டு உற்பத்தி மீதான அவரது செயல், ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை இந்தியா நம்பியிருந்ததை குறைத்தது. விஞ்ஞானிகள், தொழில்துறை மற்றும் பாதுகாப்பு துறை இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒத்துழைப்பை வளர்த்தது.

டாக்டர் கலாமின் தலைமைத்துவப் பாணி என்பது ஒத்துழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. அவர் டிஆர்டிஓவை புதுமைகளின் மையமாக மாற்றினார். 500-க்கும் மேற்பட்ட தொழில்களை ஏவுகணை தயாரிப்பில் ஒருங்கிணைத்தார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி அமைப்புகளை தன்னிறைவு பெறச் செய்ததில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கு 1997-ம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்றுத் தந்தது. "கனவு, கனவு, கனவு. கனவுகள் எண்ணங்களாக மாறுகின்றன, எண்ணங்கள் செயல்பாட்டில் விளைகின்றன" என்ற கலாமின் பிரபலமான கூற்று, ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முன்னணி நாடாக உருவெடுக்க அடித்தளம் அமைத்தது.
இன்று, இந்தியாவின் பாதுகாப்புத் துறை வளர்ந்து மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் மதிப்பு கொண்டதாக உள்ளது. இது 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் டாக்டர் கலாம் அமைத்துத் தந்த அடித்தளமே காரணம். ரஷ்யாவுடனான கூட்டு முயற்சியான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றிலும் அவரது ஆரம்ப கட்ட பங்களிப்பு இன்னும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் கலாமின் முக்கியத்துவம் நாட்டின் பாதுகாப்புத் துறை கொள்கைகளை வடிவமைத்தது. அதாவது, ஆக்கிரமிப்பை விட தடுப்பில் கவனம் என்பது தான் அது.
1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இன்று இந்தியாவின் பாதுகாப்புத் துறை பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளது. டாக்டர் கலாம் போன்ற தொலைநோக்கு பார்வையாளர்களின் முயற்சிகளை அரசு நிறைவேற்றியுள்ளது. 2000-ம் ஆண்டு தொடக்கம் மாற்றத்தக்க சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தது. 2001 ஆம் ஆண்டில், மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் முதன் முறையாக 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்தது. பாதுகாப்புத் துறையை 100 சதவீதம் தனியார் பங்களிப்புக்கும் திறந்து விட்டது. பின்னர் 2014-ம் ஆண்டில் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாகவும், 2020-ல் அதனை 74 சதவீதமாகவும் அதிகரித்தது. இருந்தாலும், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
2020-ம் ஆண்டுகளில், இந்த நடைமுறை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மிகவும் வலுவானதாக மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் "ஆத்மநிர்பார் பாரத்" பாதுகாப்புத் துறையில் வளர்ச்சியை பல மடங்கு வேகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்றுமதிகளுக்கான வரவேற்பு இன்று இருப்பதை விட ஒரு போதும் இருந்ததில்லை. பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2014-ல் 690 கோடி ரூபாயிலிருந்து இன்று 23,600 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2029-ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதி 50,000 கோடி ரூபாயாக இருக்கும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, சைபர் தாக்குதல் மற்றும் ஹைப்பர்சோனிக்ஸ் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை கையாளும் வகையில் இந்திய பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களின் தரவுத்தளமான ஸ்ரீஜன் டீப் போர்டல் உள்ளிட்ட அண்மை கால நடவடிக்கைகள், ராணுவ தளவாட உற்பத்தியில் தொலைநோக்குப் பார்வையை காட்டுகிறது. இது, பாதுகாப்புத் துறை குறித்த தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதை உறுதி செய்கிறது. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ தளவாட தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனங்களாக மறுசீரமைத்தலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவை பாதுகாப்புத் துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களாக மாறினால், எதிர்கால உக்திகளை அந்த நிறுவனங்களே உருவாக்கிக் கொள்ளும். இவை சிறந்த மாற்றத்திற்கான அறிகுறி.
மேலும், உலகளாவிய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை குறிக்கிறது. மேலும் நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஒரு நிலையான வளர்ச்சியை வைத்திருக்க முடியும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கான நிதி, பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 75 சதவீதம் ஆகும். மேலும், ADITI என அழைக்கப்படும் தொழில்நுட்பங்களைப் பெறுதல், மேம்படுத்துதல் மற்றும் புதுமைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாட உற்பத்தியில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
டாக்டர் கலாமின் வாழ்க்கை - ஒரு செய்தித்தாள் போடும் சிறுவனிலிருந்து ஏவுகணை முன்னோடி வரை - இந்தியாவின் பாதுகாப்பு பயணத்தை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அரசின் முயற்சிகள் அவரது தன்னம்பிக்கை பற்றிய பார்வையை நிறுவனமயமாக்கியுள்ளன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, நாட்டை ஒரு முன்னணி பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியாளர் மற்றும் புதுமை வடிவமைப்பாளராக உயர்த்தியுள்ளன. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டது போல, பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு - கலாமின் கனவுகள் தேசத்தை முன்னோக்கி வழிநடத்துவதை உறுதி செய்கிறது.
இந்தியா இன்று எந்த இடத்தை எட்டியுள்ளது, நாம் நமக்காக என்ன லட்சியங்களை வகுத்துள்ளோம் என்பதைப் பற்றி அந்த மாமனிதர் - டாக்டர் கலாம் - பெருமைப்படுவார்.
- கட்டுரையாளர் ஜி.சதீஷ் ரெட்டி, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் எழுத்தாளரின் கருத்துகளே. இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் ETV பாரத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்காது)

