சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க உச்சி மாநாடுகள் - இந்தியாவிற்கு உணர்த்துவது என்ன?
முறையான நட்புறவு இல்லாத போதிலும், பனிப்போருக்கு பிந்தைய அனைத்து கால கட்டங்களையும் விட சீனா - ரஷ்யா உறவு இன்று மிகவும் வலுவாக உள்ளது.

Published : June 2, 2026 at 1:44 PM IST
சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற சந்திப்புகள், சர்வதேச அளவில் எதிர்கால அதிகார சமநிலை குறித்த ஒரு விவாதத்தை தொடங்கி வைத்துள்ளன.
2026, மே 14 முதல் 15 வரை பெய்ஜிங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான உச்சி மாநாட்டை தொடர்ந்து, ஒரு வார காலத்திற்குள் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றதால் இந்த விவாதம் சர்வேதேச அளவில் மிகப் பெரிய பேசு பொருளாகியுள்ளது.
சில ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வுகளை, அமெரிக்காவிற்கு எதிராக சீனா - ரஷ்யா இடையே ஒரு சக்தி வாய்ந்த கூட்டணி உருவாகி வருவதற்கான சான்றாக கருதுகின்றன. ஆனால், ஒரு தரப்பினர் அமெரிக்காவின் வலியுமையும் கூட்டணியும் ஈடு இணையற்றவையாகவே இருப்பதாக வாதிடுகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மை என்பது இந்த இரு வேறுபட்ட வாதங்களுக்கு இடையே ஏதோ ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
இரு உச்சி மாநாடுகள், இருவேறு நோக்கங்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஷி ஜின்பிங் இடையிலான உச்சி மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புமுனையை உருவாக்கும் என்று ஒரு போதும் எதிர்பார்க்கப்படவில்லை. அதன் முதன்மை நோக்கம் உறவுகளை பேணி காப்பதும், அவை கட்டுப்பாடற்ற மோதலுக்குள் செல்வதைத் தடுப்பதும் ஆகும். இரு தரப்பினரும் மிதமான எதிர்பார்ப்புகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக தைவான், வர்த்தகம், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமல் இருந்தன.

ஷி ஜின்பிங் - புடின் சந்திப்பு ஒரு மாறுபட்ட தன்மையை கொண்டிருந்தது. அது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நட்புறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தலைவர்களும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர் மற்றும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ராஜதந்திர துறைகள் முழுவதும் ஆழமான ஒருங்கிணைப்புக்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் பகிரங்கமாக மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த வெளிப்படையான விளைவுகள், டிரம்ப் - ஷி ஜின்பிங் உச்சி மாநாட்டின் வரையறுக்கப்பட்ட சாதனைகளை விட சீனா - ரஷ்யா உறவு வலுவானதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றுகிறது என்ற முடிவுக்கு நாம் அனைவரையும் அழைத்துச் சென்றன.
சீனா - ரஷ்யா உறவு ஒரு கூட்டணியாக மாறி வருகிறதா?
சீனாவையும் ரஷ்யாவையும் ஒரு ஒருங்கிணைந்த மேற்கத்திய எதிர்ப்பு அணியாக இன்றும் பல ஆய்வுகள் சித்தரித்து வருகின்றன. இருப்பினும், சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் மற்றும் சாத்தம் ஹவுஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், சீனாவும் ரஷ்யாவும் வெறும் ஒப்பந்தத்திற்காக அல்லாமல், கூட்டாளிகளாகவே நீடிக்கின்றன என்று சுட்டிக் காட்டுகின்றன. நேட்டோ உறுப்பினர்களைப் போல் அல்லாமல், ஒரு மோதலின் போது இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ராணுவ உதவிக்கு வரக் கடமைப்பட்டிருக்கவில்லை.
இதற்கு தைவான் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தைவான் ஜலசந்தியில் ஒரு நெருக்கடி வெடித்தால், சீனாவுடன் இணைந்து போரிட ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் முறையான உறுதிப்பாடு எதுவும் இல்லை. அதே போல், உக்ரைன் போரின் போது மாஸ்கோவிற்கு அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஆதரவளித்த போதிலும், நேரடி ராணுவத் தலையீட்டை சீனா வழங்கவில்லை. அதாவது ரஷ்யாவுக்கு ராணுவரீதியாக உதவுவதை மிகவும் கவனமாக தவிர்த்துள்ளது. இது, இரு நாடுகளும் கட்டுப்படுத்தும் கூட்டணிக் கடமைகளை விட, மிக முக்கியமான நெகிழ்வுத்தன்மைக்கே இன்னும் மதிப்பளிக்கின்றன என்பதை காட்டுகிறது.
நட்புறவு ஏன் வலுவாக உள்ளது?
முறையான நட்புறவு இல்லாத போதிலும், பனிப்போருக்கு பிந்தைய எந்த கால கட்டத்தையும் விட சீனா - ரஷ்யா உறவு இன்று மிகவும் வலுவாக உள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கு குறித்த கவலைகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. அமெரிக்காவின் ஆதிக்கத்திலான சர்வதேச ஒழுங்கு என அவர்கள் விவரிப்பதை இருவரும் எதிர்க்கின்றனர். வாஷிங்டனில் அதிகாரம் குவிக்கப்படுவதற்குப் பதிலாக, பல முக்கிய நாடுகளிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு பன்முக உலகத்தை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிக்கின்றன.
பொருளாதார நலன்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவை வலுப்படுத்துகின்றன. ரஷ்யாவின் எரிசக்தி, மூலப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பான அணுகல் சீனாவிற்கு தேவைப்படுகிறது. ரஷ்யாவிற்கு சீன சந்தைகள், தொழில்நுட்பம், நிதி மற்றும் முதலீடு தேவைப்படுகிறது. இவை ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் நலன்கள், தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.
நட்புறவில் உள்ள மறைக்கப்பட்ட பலவீனங்கள்
இருப்பினும், இந்த நட்புறவில் ஏராளமான பலவீனங்கள் காணப்படுகின்றன. மிக முக்கியமான சவால் என்பது, அதிகரித்து வரும் சமச்சீரற்ற தன்மையாகும். சீனாவின் பொருளாதாரம் இப்போது ரஷ்யாவின் பொருளாதாரத்தை விட பல மடங்கு பெரியது. உக்ரைன் போரைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட மேற்கத்தியத் தடைகள், பெய்ஜிங்கை மாஸ்கோ சார்ந்திருப்பதை அதிகப்படுத்தியுள்ளது. சீனா, ரஷ்யாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை உள்ளீடுகளின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த உறவில், மாஸ்கோ சீனாவின் ஆதரவிலிருந்து பயனடைந்தாலும், அதிகப்படியான சார்பு நிலை படிப்படியாக ரஷ்யாவின் சுயாட்சியை குறைக்கக் கூடும். இந்த ஏற்றத்தாழ்வு எதிர் காலத்தில் மோதலுக்கான ஒரு ஆதாரமாக மாறக் கூடும்.
வரலாற்றுரீதியாக, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை மோதல்கள், சித்தாந்தப் போட்டி மற்றும் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் செல்வாக்கிற்கான போட்டி ஆகியவை இருந்துள்ளன. தற்போதைய தலைமைத்துவ உறவுகள் சிறப்பாக இருந்தாலும், வரலாற்றுரீதியான அவநம்பிக்கை முற்றிலுமாக மறைந்துவிடவில்லை.
சீனாவையும் ரஷ்யாவையும் பிரிக்கும் ட்ரம்பின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதா?
'தி டிப்ளமேட்' இதழில் மே 26, 2026 தேதியிட்ட லிங்கோங் காங் எழுதிய ஒரு கட்டுரை, அதிபர் ட்ரம்பின் சில கொள்கைகள் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மறைமுகமாகவே பயனளித்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது. நட்பு நாடுகளுடனான வர்த்தகப் பிரச்சினைகளும், ஐரோப்பியப் பங்காளிகளுடனான கருத்து வேறுபாடுகளும் மேற்கத்தியக் கூட்டணிக்குள் அழுத்தங்களை உருவாக்கின. அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை, அமெரிக்க தலைமை குறித்த பிம்பத்தை பலவீனப்படுத்தியது. இது, அந்த கட்டுரை ஆசிரியரின் கூற்றுப்படி, பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் தங்களை நிலைத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் ஒரு சமச்சீரான சர்வதேச ஒழுங்கின் ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. இது உலக அரங்கில் அவர்களின் ராஜதந்திர நிலையை மேம்படுத்தியுள்ளது.
குறைந்துவிட்டதா அமெரிக்காவின் செல்வாக்கு?
அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை, அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்து வருவதற்கான சான்றாக கருதுவது அவசரமான முடிவாக இருக்கும். அமெரிக்காவின் செல்வாக்கு தொடர்வதற்கான மிக வலுவான வாதம், அதன் இணையற்ற கூட்டணிகள் மற்றும் நட்புறவின் வலையமைப்பில் அடங்கியுள்ளது. ஐரோப்பா மற்றும் இந்தோ - பசிபிக் முழுவதும் பரவியுள்ள, ஒப்பந்த அடிப்படையிலான நட்பு நாடுகளின் இத்தகைய நட்புறவை இன்று வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) உறுப்பினர்களுடனான உறவுகள், வாஷிங்டனுக்கு ஆழமான அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார ஆதரவை வழங்குகின்றன. சீனாவோ ரஷ்யாவோ தற்போது இதை மீண்டும் உருவாக்க முடியாது. இந்தக் கூட்டணி கட்டமைப்பு, அமெரிக்காவின் மிகவும் நீடித்த நட்புறவின் நன்மைகளில் ஒன்றாகவும், அதன் உலகளாவிய செல்வாக்கின் முக்கிய தூணாகவும் விளங்குகிறது.
மேலும், சீனாவின் மிகப் பெரிய வர்த்தக உறவுகளில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முக்கிய ஆசிய பொருளாதாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. எனவே, மாஸ்கோவின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முழுமையாக பிணைக்கப்படுவதைத் தவிர்க்க பெய்ஜிங்கிற்கு வலுவான உந்துதல்கள் உள்ளன.
உலக நாடுகளுக்கு என்ன நன்மை?
சர்வதேச அரசியல், பல பெரும் சக்திகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் ஒரு காலகட்டத்திற்குள் நுழைகிறது. சீனாவும் ரஷ்யாவும் தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவும், தற்போதுள்ள அமைப்பின் சில அம்சங்களுக்கு சவால் விடவும் இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்கா மகத்தான பொருளாதார, ராணுவ, தொழில்நுட்ப மற்றும் கூட்டணி நன்மைகளை கொண்டுள்ளன. தற்போது இரு தரப்பிலும், தாங்களாகவே சர்வதேச ஒழுங்கை தீர்க்கமாக வடிவமைக்கப் போதுமான சக்தி இல்லை.
இதன் விளைவாக, முக்கியமான போட்டி பல ஆண்டுகளாக நீடிக்க வாய்ப்புள்ளது. இது, பெருகிய முறையில் பன்முகத்தன்மை கொண்ட, சவால்கள் நிறைந்த மற்றும் கணிக்க முடியாத ஒரு உலகத்தை உருவாக்கும்.
இந்தியாவுக்கான சவால்கள்
இந்தியாவை பொறுத்தவரை, மிக முக்கியமான வளர்ச்சி என்பது, சீனா மீதான ரஷ்யாவின் சார்புநிலை அதிகரித்து வரும் நீண்டகாலப் போக்காகும். வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றிற்காக மாஸ்கோ சீனாவை அதிகளவில் சார்ந்திருந்தால், ரஷ்யாவின் சுதந்திரமான முடிவு எடுக்கும் வாய்ப்பு படிப்படியாகக் குறையக்கூடும்.
அதே நேரத்தில், இந்தியா சீனா - ரஷ்ய உறவை ஒரு உடைக்க முடியாத கூட்டணியாக கருதுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க சமச்சீரற்ற தன்மைகளும், மறைந்திருக்கும் பதற்றங்களும் நீருபூத்த நெருப்பாக தொடர்ந்து நீடித்து நீடிக்கின்றன. ரஷ்யாவுடன் வலுவான உறவுகளை பேணுதல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் தனது சொந்த பொருளாதார மற்றும் ராணுவ திறன்களை தொடர்ந்து வலுப்படுத்துதல் ஆகியவற்றுடன் சுயாட்சியைப் பேணுவதே புதுடெல்லியின் ஒரே வழியாகும்.
(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துக்கள். இங்கு கூறப்பட்டுள்ள உண்மைகளும் கருத்துக்களும் ஈடிவி பாரத் நிறுவனத்தின் நிலையை பிரதிபலிக்கவில்லை)

