டைப்பிங் செய்யும் தலைமுறை: கைகளால் எழுதுவதை மறந்தால் மூளைக்கு ஆபத்தா?
கைகளால் எழுதுபவர்களின் மூளையில் 'தீட்டா' மற்றும் 'ஆல்பா' எனப்படும் மூளை அலைகளின் செயல்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published : June 26, 2026 at 12:55 PM IST
அ..ன்னா, ஆ..வன்னா என விரல்களை பிடித்து பழகிய தொடக்க காலம் முதல், பென்சில், பேனா என விதவிதமாக வாங்கி பள்ளியில் எழுதியது வரை நம் எல்லோருக்கும் பல நினைவுகள் இருக்கும். ஆனால், காலம் மாற மாற, இன்று எதற்கெடுத்தாலும் மொபைலில் டைப் செய்வது, கணினியில் வேலை பார்ப்பது எனப் பேனா பிடித்து எழுதுவதையே நாம் பலரும் மறந்து வருகிறோம்.
எப்போதாவது ஒருமுறை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது, அங்குள்ள படிவத்தை நிரப்ப நேர்ந்தால் தான் நமக்கே ஒரு விஷயம் புரியும். "என்ன இது, எழுதவே வரமாட்டேங்குதே, கைகள் திணறுதே" என்று யோசிப்போம். இப்படிப்பட்ட அனுபவம் உங்களில் பலருக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். இதையெல்லாம் இப்போது ஏன் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
நாம் கைகளால் எழுதுவதை நிறுத்திவிட்டு, கீபோர்டில் டைப் செய்ய தொடங்கியதால் நம் மூளையின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆய்வு வெளியாகியுள்ளது.
அன்றாட வாழ்வில் கீபோர்டுகளும் தொடுதிரைகளும் (Touchscreens) பேனா, பேப்பர்களை வேகமாக இடமாற்றம் செய்து வருகின்றன. ஆனால், கைகளால் எழுதுவது நம் மூளை கற்கும் திறனை, டைப் செய்வதை விட முற்றிலும் மாறுபட்ட மற்றும் சிறந்த வழியில் மேம்படுத்துகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டு ஆய்வும் மூளையின் செயல்பாடும்
நார்வே நாட்டை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆட்ரி எல். எச். வான் டெர் மீர் என்பவர் 2024ம் ஆண்டில் இது தொடர்பாக ஒரு விரிவான ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். 'ஃபிரான்டியர்ஸ் இன் சைக்காலஜி' (Frontiers in Psychology) என்ற இதழில் வெளியான இந்த ஆய்வு, கைகளால் எழுதுவது கீபோர்டில் டைப் செய்வதை விட மூளையை எவ்வளவு ஆழமாகவும், நுணுக்கமாகவும் செயல்படுத்துகிறது என்பதை விளக்குகிறது.
இந்த ஆய்விற்காக 36 பல்கலைக்கழக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஒரு டிஜிட்டல் பேனாவைப் பயன்படுத்தி கைகளால் வார்த்தைகளை எழுதும்போதும், அதே வார்த்தைகளை கணினி கீபோர்டில் டைப் செய்யும்போதும் அவர்களுடைய மூளையின் செயல்பாடுகள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டன. இதற்காக மூளையின் மின்சார செயல்பாட்டை அளவிடும் 'ஹை-டென்சிட்டி ஈஇஜி' (High-density EEG) என்ற நவீன ஸ்கேன் சோதனை பயன்படுத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவில், டைப் செய்வதை விட கைகளால் எழுதும்போது மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே மிக வலுவான மற்றும் பரவலான தொடர்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. குறிப்பாக மூளையின் நடுப்பகுதி மற்றும் பின் parietal பகுதி ஆகியவை இந்த எழுதும் செயல்பாட்டின் போது அதிக விழிப்புணர்வோடு செயல்பட்டன. இந்த பகுதிகள் தான் மனிதனின் கவனம், இயக்கம், மொழி செயலாக்கம், நினைவாற்றல் மற்றும் காட்சிப் புரிதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பானவை ஆகும்.
கற்றலை மேம்படுத்தும் மூளை அலைகள்
ஆய்வின் போது கைகளால் எழுதுபவர்களின் மூளையில் 'தீட்டா' (Theta) மற்றும் 'ஆல்பா' (Alpha) எனப்படும் மூளை அலைகளின் செயல்பாடு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது. இந்த குறிப்பிட்ட அலைவரிசைகள் மனிதனின் கற்றல் திறனோடும், புதிய நினைவகங்களை உருவாக்குவதோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவை ஆகும்.
எளிமையாக சொன்னால், நாம் கைகளால் எழுதும்போது மூளையின் பல்வேறு பகுதிகள் தங்களுக்குள் மிகவும் திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் பேசிக்கொள்கின்றன. இந்த தொடர்பு தான் நாம் படிக்கும் விஷயங்களை எளிதில் உள்வாங்கி கொள்ள உதவுகிறது.
கைகளால் எழுதுவது ஏன் தனித்துவமானது?
டைப் செய்வதோடு ஒப்பிடும்போது கைகளால் எழுதுவது என்பது மிகவும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உடல் சார்ந்த செயல்பாடாகும். ஒரு நபர் கைகளால் எழுதும்போது அவருடைய கண்கள் பார்க்கும் பார்வை, விரல்களின் அசைவு, கைகளின் கட்டுப்பாடு, பேனாவைத் தொடும் உணர்வு மற்றும் ஒவ்வொரு எழுத்தையும் வடிவமைக்கும் நுணுக்கம் எனப் பல விஷயங்களை மூளை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.
இந்த கூட்டு செயல்பாடு மூளைக்கு ஒரு சிறந்த 'சென்சாரிமோட்டார்' (Sensorimotor) உள்ளீட்டை தருகிறது. அதாவது, இயக்கம் மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலிருந்தும் மூளை ஒரே நேரத்தில் தகவல்களை பெறுகிறது. ஆனால், கீபோர்டில் டைப் செய்யும்போது விரல்களால் ஒரே மாதிரியான பொத்தான்களை திரும்ப திரும்ப அழுத்தும் எந்திரத்தனமான வேலை மட்டுமே நடக்கிறது.
இதற்கு பெரிய அளவிலான துல்லியமான கைகளின் அசைவோ, ஒருங்கிணைப்போ தேவையில்லை. இந்த எந்திரத்தனமான அசைவு காரணமாகவே டைப் செய்யும்போது மூளையின் இணைப்பு பாதைகள் பலவீனமாக அமைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
நினைவாற்றலும் புரிதலும்
பழைய பல ஆய்வுகளும் கூட கைகளால் எழுதுவது எழுத்துப்பிழைகளை குறைக்கும், நினைவாற்றலை வலுப்படுத்தும், எழுத்துக்களை எளிதில் அடையாளம் காண உதவும் மற்றும் கற்கும் விஷயங்களை ஆழமாக புரிந்துகொள்ள வைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. நாம் கைகளால் எழுதும்போது வேகம் சற்றே குறைகிறது.
இந்த மெதுவான வேகம் தான் நமக்கு சாதகமாக மாறுகிறது. இது ஒரு தகவலின் மீது அதிக கவனம் செலுத்த மூளையை கட்டாயப்படுத்துகிறது, இதனால் மூளை அந்த தகவலை மிகவும் ஆழமாக செயலாக்க முடிகிறது. டைப்பிங் என்பது அதிவேகமாக இருக்கலாம், ஆனால் அந்த வேகம் பெரும்பாலும் விழிப்புணர்வையும், படித்ததை நினைவில் வைத்து கொள்ளும் திறனையும் குறைத்து விடுகிறது.
டைப்பிங் செய்வது தவறா?
இதற்காக கணினியிலோ அல்லது மொபைலிலோ டைப் செய்வது முற்றிலும் தவறானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை. இன்றைய டிஜிட்டல் உலகில் டைப்பிங் செய்வதும் மிக அவசியமான ஒன்றுதான். அது குழந்தைகளுடைய கருத்துக்களை விரைவாக வெளிப்படுத்த உதவுகிறது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
எனவே, இவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். புதிய கருத்துக்களை கற்கும்போதும், வகுப்பறை குறிப்புகளை எடுக்கும்போதும், தகவல்களை மனப்பாடம் செய்யும்போதும் கைகளால் எழுதுவது தான் சிறந்தது. அதே நேரத்தில், நீண்ட கட்டுரைகளை எழுதுவதற்கும், வேகமான டிஜிட்டல் தொடர்புகளுக்கும் டைப்பிங் முறையை பயன்படுத்தலாம்.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், பள்ளிகளில் குழந்தைகள் கைகளால் எழுதுவதை தொடர்ந்து பழக வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும், இந்த நன்மை சாதாரண பேப்பர், பேனாவிற்கு மட்டுமல்லாமல், தொடுதிரைகளில் டிஜிட்டல் பேனா (Stylus) கொண்டு எழுதும்போதும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, காகிதமோ அல்லது டிஜிட்டல் திரையோ, விரல்களால் எழுத்துக்களை உருவாக்குவதே நம் மூளையைச் கூர்மையாக்கத் தேவையான மிக முக்கியமான விஷயமாகும்.
ஆய்வு:
https://www.frontiersin.org/journals/psychology/articles/10.3389/fpsyg.2023.1219945/full

