உலகளவில் 95 மில்லியன் குழந்தைகளுக்கு செவித்திறன் இழப்பு! உலக செவிப்புலன் தினத்தில் WHO வலியுறுத்துவது என்ன?
ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அதற்கான தீர்வுகளை வழங்க முடியும்.

Published : March 3, 2026 at 12:04 PM IST
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பேசுவதற்கும், மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்கும் செவித்திறன் அடிப்படையாக இருக்கிறது. பல நேரங்களில் குழந்தைகளுக்கு காது கேட்பதில் சிரமம் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய தவறிவிடுகிறோம்.
இது ஏதோ ஒரு பெரிய மருத்துவ பிரச்சனை என்று பார்க்காமல், ஒரு குழந்தையின் அன்றாட கற்றல் மற்றும் சமூகத்தோடு பழகும் தன்மையை பாதிக்கும் விஷயமாக பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் சொல்வது புரியாமல் போவது அல்லது நண்பர்களுடன் விளையாடும்போது மற்றவர்களின் பேச்சை புரிந்து கொள்ள முடியாமல் போவது போன்ற எதார்த்தமான சிக்கல்கள் செவித்திறன் குறைபாட்டால் ஏற்படுகின்றன.
இன்றைய சூழலில் ஒலிகள் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்தாலும், சரியான நேரத்தில் ஒரு குழந்தையின் செவித்திறனை பரிசோதிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கினால், அந்த குழந்தைகளால் மற்றவர்களை போலவே இயல்பாக வளர முடியும்.
உலகளாவிய பாதிப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்: ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி உலக செவிப்புலன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' (Global Burden of Disease) அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
உலகளவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 95 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் கண்டறியப்படாத அல்லது கவனிக்கப்படாத செவித்திறன் இழப்புடன் வாழ்ந்து வருகின்றனர் என்கிறது WHO. இவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளும் முறையான வசதிகளும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்த பாதிப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களில் உள்ள குழந்தைகள் இந்த செவித்திறன் பாதிப்பால் மற்ற பகுதிகளை விட அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைப் பருவ செவித்திறன் இழப்பிற்கான காரணங்கள்: குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்படுவதற்கு பல எதார்த்தமான காரணங்கள் உள்ளன. பிறப்பிலேயே ஏற்படும் மரபணு கோளாறுகள் ஒருபுறம் இருந்தாலும், வளரும் பருவத்தில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
குறிப்பாக, காதுகளில் ஏற்படும் தொடர் தொற்று மற்றும் சீழ் வடிதல் போன்றவற்றை சரியாக கவனிக்காமல் விடுவது செவித்திறனை பாதிக்கும். தட்டம்மை, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களின் பாதிப்பால் செவித்திறன் இழப்பு ஏற்படலாம்.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக சத்தம் கொண்ட மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்போது, அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போவது பாதிப்பை தீவிரமாக்குகிறது.
ஆரம்பக்கால கண்டறிதலின் அவசியம்: ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். பிறந்த உடனேயே குழந்தைகளுக்கு செய்யப்படும் செவித்திறன் பரிசோதனை (Hearing Screening) மூலம் பல பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்துவிடலாம்.
ஒரு குழந்தை பேச தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது சத்தம் கேட்கும்போது எதிர்வினை ஆற்றாமல் இருந்தாலோ, அது செவித்திறன் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதனை பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்பக்காலத்திலேயே கண்டறியப்படும் செவித்திறன் பாதிப்புகளுக்கு நவீன சிகிச்சைகள் மற்றும் செவித்திறன் கருவிகள் மூலம் எளிய தீர்வுகளை காண முடியும்.
தடுப்பு முறை என்ன? உலக சுகாதார நிறுவனம் 2026-ம் ஆண்டு உலக செவித்திறன் தினத்தில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கான சில எளிய தடுப்பு முறைகள் என்பதையும் பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு.
- குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க முறையான தடுப்பூசிகளை செலுத்துதல்.
- காதுகளில் வலி அல்லது திரவம் வெளியேறினால் உடனடியாக மருத்துவரை அணுகுதல்.
- அதிக சத்தம் கொண்ட சூழலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்.
- பள்ளி மற்றும் சமூக அளவில் செவித்திறன் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

