ETV Bharat / lifestyle

டிரெக்கிங் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? உடல் முதல் மன நலம் வரை இவ்வளவு நன்மைகள் இருக்கு!

டிரெக்கிங் செல்வதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டமும், மனிதபிணைப்பும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 4, 2026 at 10:28 AM IST

3 Min Read
Choose ETV Bharat

பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு செல்லக்கூட வண்டியை தேடும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. 100 மீட்டர் நடப்பதை கூட ஒரு பெரிய போராட்டமாக பார்ப்பார்கள். ஆனால், இதற்கு நேர்மாறாக மற்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் வார இறுதியில் ஏதோ ஒரு மலை உச்சியை நோக்கி கிளம்பிவிடுவார்கள்.

செங்குத்தான பாதைகள், கரடுமுரடான கற்கள், மூச்சிரைக்கும் ஏற்றங்கள் என உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், அவர்கள் கால்கள் மட்டும் முன்னேறிக்கொண்டே இருக்கும். டிரெக்கிங் முடித்துவிட்டு வந்த அடுத்த நாள், படுக்கையை விட்டு எழக்கூட முடியாது.

உடல் முழுக்க வலி, கால்களை நகர்த்தினால் உயிர் போகும் வேதனை. "ஏன்டா போனோம்?" என்று ஒரு நிமிடம் தோன்றினாலும், அடுத்த முறை கிளம்பும்போது அதே உற்சாகத்துடன் முதல் ஆளாக தயாராக நிற்பார்கள். "ஏன் இந்த வீண் சிரமம்?" என்று கேட்டால், "அது ஒரு தனி பீலிங் மச்சான்" என்று ஒற்றை வரியில் முடித்துவிடுவார்கள். அந்த 'பீலிங்' உண்மையில் என்ன? டிரெக்கிங் தரும் மனநிலை மாற்றம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஆந்திராவில் உள்ள அகோபிலம் மலையேற்றம்
ஆந்திராவில் உள்ள அகோபிலம் மலையேற்றம் (ETV Bharat)

வலியை தேடி செல்லும் பயணத்தின் ரகசியம்: மக்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மலை ஏறுகிறார்கள் என்ற கேள்விக்கு விடை தேடினால், அது வெறும் உடல் உழைப்பு சார்ந்தது அல்ல என்பது புரியும். நாம் வாழும் இன்றைய நவீன உலகம் நமக்கு எல்லா வசதிகளையும் கொடுக்கிறது. ஆனால், மனித மூளை சவால்களை எதிர்கொள்ளும்போதுதான் அதிகப்படியான மகிழ்ச்சியை அடைகிறது.

ஒரு செங்குத்தான மலையில் ஏறும்போது, ஒவ்வொரு அடியும் ஒரு போராட்டமாக இருக்கும். இதயம் வேகமாக துடிக்கும், நுரையீரல் காற்றிற்காகத் தவிக்கும், கால்கள் நடுங்கும். ஆனால், இவ்வளவு சிரமங்களுக்கு இடையே அந்த உச்சியை அடையும்போது கிடைக்கும் அந்த வெற்றி உணர்வு இருக்கிறதே, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இந்த வெற்றி உணர்வுதான் அந்த தசை வலியை விட மேலானது. தங்களை சுற்றியுள்ள சௌகரியமான வட்டத்தை விட்டு வெளியே வந்து, இயற்கையின் கடினமான சூழலை எதிர்கொள்வது ஒரு தனி மனிதனுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது.

மன அழுத்தத்திற்கு மருந்தாகும் இயற்கை: நவீன உலகில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. லேப்டாப் திரைகளும், செல்போன் நோட்டிபிகேஷன்களும் நம் மூளையை எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன.

மரங்களின் சத்தம், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என இயற்கையோடு ஒன்றி போகும்போது மூளையில் 'எண்டோர்பின்' மற்றும் 'டோபமைன்' போன்ற மகிழ்ச்சியை தரும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது செயற்கையான மருந்துகளை விட அதிக வீரியம் கொண்டது. இதனால் தான் உடல் வலித்தாலும், மனம் ஒருவித புத்துணர்ச்சியை அடைகிறது. அந்த புத்துணர்ச்சிதான் அவர்களுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள பர்வதமலை மலையேற்றம்
திருவண்ணாமலையில் உள்ள பர்வதமலை மலையேற்றம் (ETV Bharat)

சமூக பிணைப்பு: டிரெக்கிங் என்பது ஒரு தனி நபர் பயணம் மட்டுமல்ல, அது ஒரு குழுவாக செயல்படும் அற்புத அனுபவம். வழியில் யாராவது சோர்வடைந்தால் அவர்களுக்கு கை கொடுப்பது, தன்னிடம் இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்வது, ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது என அங்கே மனிதநேயம் மிக இயல்பாக வெளிப்படும்.

சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், ஒரு இக்கட்டான மலையடிவாரத்தில் உங்களுக்கு உதவி செய்ய வரும் அந்த சக பயணியின் முகம் தான் உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நினைவிருக்கும். மற்றவர்களுக்கு உதவுவதும், மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும். டிரெக்கிங் செல்வதன் மூலம் கிடைக்கும் இந்த நட்பு வட்டமும், மனிதப் பிணைப்பும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும் மலைகள்: ஒவ்வொரு டிரெக்கிங் பயணமும் ஒரு வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறது. மலை ஏறும் போது உங்கள் முதுகில் இருக்கும் பையில் தேவையற்ற பாரங்களை சுமந்தால், உங்களால் நீண்ட தூரம் நடக்க முடியாது. இது வாழ்க்கையிலும் அப்படியே.

தேவையற்ற கவலைகளையும், கடந்த கால கசப்புகளையும் சுமந்து திரிந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதை அந்த மலைப்பாதை நமக்கு சொல்லிக் கொடுக்கும். அதேபோல், உச்சியை அடைவது மட்டுமே இலக்கல்ல, அந்த பாதையில் நாம் கடந்து வரும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கல்லும் முக்கியமானது என்பதை உணரச் செய்யும்.

பொறுமை, விடாமுயற்சி மற்றும் திட்டமிடுதல் போன்ற திறன்கள் இயல்பாகவே வளர்கின்றன. எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும், நிதானமாக செயல்பட்டால் அதை வெல்ல முடியும் என்ற மனப்பக்குவம் டிரெக்கிங் செல்வோருக்குக் கிடைக்கிறது.

உடல் ஆரோக்கியம் மேம்படும்: கடைசியாக, இதன் உடல் ரீதியான நன்மைகள் ஈடு இணையற்றவை. ஜிம்மில் ஒரு இயந்திரத்தின் மீது ஓடுவதற்கும், மேடு பள்ளங்கள் நிறைந்த இயற்கையான பாதையில் நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இது இதய துடிப்பை சீராக்கி, எலும்புகளை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, இன்றைய தலைமுறை சந்திக்கும் முதுகுவலி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு டிரெக்கிங் ஒரு சிறந்த தீர்வாகும்.

சுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் உள்ள நச்சுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீராகிறது. மறுநாள் உடல் வலிப்பது என்பது, உடலின் தசைகள் வேலை செய்ய தொடங்கிவிட்டன என்பதற்கான அறிகுறிதான். அந்த வலி ஒரு வாரத்தில் மறைந்துவிடும், ஆனால் அந்தப் பயணம் கொடுத்த அனுபவமும், ஆரோக்கியமும் காலம் முழுக்க நிலைத்திருக்கும். எனவே தான், கஷ்டம் என்று தெரிந்தும் மக்கள் மீண்டும் மீண்டும் மலைகளைத் தேடி ஓடுகிறார்கள்.

இதையும் படிங்க:

பயணத்தின் போது வாந்தி எடுப்பவர்கள் கவனத்திற்கு! 'எலெக்ட்ரிக் கார்களில்' சென்றால் நிலைமை மோசமாகுமாம்!

உங்க மெட்டபாலிசம் பலவீனமா இருக்கா? கடகடவென அதிகரிக்க டிப்ஸ் இதோ!

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.