ETV Bharat / lifestyle

பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் சுவை மாறுவது ஏன்? இந்த காரணம் கட்டாயம் உங்களுக்கு தெரியாது!

கண்ணாடி என்பது வேதியியல் ரீதியாக மிகவும் நிலையான ஒரு பொருள். எளிமையாக சொன்னால், அது தன் வேலையை மட்டும் பார்க்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : August 30, 2026 at 7:00 AM IST

2 Min Read
Choose ETV Bharat

டீயை டீக்கடை கிளாஸில் குடிப்பதற்கும், 'யூஸ் அண்ட் த்ரோ' பிளாஸ்டிக் கப்பில் குடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பிளாஸ்டிக் கப்பில் குடிக்கும்போது "என்னடா இது, டீல சுவையே இல்லையே" என்று தோன்றும். அதேபோல வீட்டில் பலரும் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட கிளாஸை வைத்திருப்பார்கள். "அதில் குடித்தால்தான் நன்றாக இருக்கும்" என்பார்கள்.

நீங்களும் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? டீ, காபி அல்லது ஜூஸ் என அனைத்தையும் ஒரு கப்பை விட்டு மற்றொன்றில் குடித்தால் ஏன் சுவை மாறுகிறது என்று? ஜூஸை கிளாஸ் கப்பில் குடிப்பதற்கும், பிளாஸ்டிக் கப்பில் குடிப்பதற்கும் ஏதோ வித்தியாசம் இருக்கும். ஆனால், யாருக்கும் அந்த 'ஏதோ' என்பது என்னவென்று சரியாக தெரியாது. இதற்கு பின்னால் இருக்கும் அறிவியலை இங்கு விரிவாக பார்க்கலாம்.

சுவையில் தலையிடாத கண்ணாடி!

கண்ணாடி என்பது வேதியியல் ரீதியாக மிகவும் நிலையான ஒரு பொருள். எளிமையாக சொன்னால், அது தன் வேலையை மட்டும் பார்க்கும். உள்ளே இருக்கும் பானத்தின் சுவையிலோ அல்லது மணத்திலோ தலையிடாது.

கண்ணாடியானது பானத்தில் இருக்கும் சுவையையோ நறுமணத்தையோ தான் உறிஞ்சி வைத்துக்கொள்ளாது. அதேபோல தன்னிடமிருந்து எந்தவொரு வாசனையையும் பானத்திற்குள் கலக்கவும் விடாது. இதனால், கண்ணாடி பாட்டிலில் அல்லது கிளாஸில் ஊற்றி வைக்கப்படும் டீ, காபி, ஜூஸ் போன்றவை தங்களுடைய அசல் சுவையை அப்படியே தக்க வைத்து கொள்கின்றன.

பிளாஸ்டிக்கிற்கு உறிஞ்சும் குணம் உண்டு!

கண்ணாடியோடு ஒப்பிடும்போது பிளாஸ்டி முற்றிலும் வேறுபட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கப் வெளியே பார்க்க இறுக மூடியது போல தெரிந்தாலும், அவற்றின் நுண் அமைப்புகள் வழியாக பானத்தின் நறுமணம் வெளியேற வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக்கிற்கு பானத்தின் சுவையையும் மணத்தையும் உறிஞ்சி வைத்துக்கொள்ளும் இயல்பு உண்டு. அத்துடன், சூடான டீ அல்லது ஜூஸ் ஊற்றப்படும்போதோ, வெயிலில் வைக்கப்படும்போதோ பிளாஸ்டிக்கின் லேசான வாடை பானத்தில் கலந்துவிடும். இதனால் தான் பிளாஸ்டிக் கப்பில் குடிக்கும்போது அதன் அசல் சுவை நமக்கு கிடைப்பதில்லை.

கேஸ் வெளியேறுவதும்... ஜில்லென்ற உணர்வும்!

குளிர்பானங்களில் இருக்கும் நுரைக்கும் தன்மைக்கு (Fizz) அதில் அடைக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவே காரணம். கண்ணாடி பாட்டில்கள் இந்த வாயுவை வெளியேற விடாமல் அப்படியே அடைத்து வைக்கின்றன.

ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களின் சுவர் வழியாக இந்த வாயு காலப்போக்கில் மெதுவாக வெளியேறிவிடும். இதனால் தான் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குளிர்பானம் விரைவில் தனது சுவையை இழந்து சப்பையாகிவிடுகிறது. மேலும், ஜில்லென்ற வெப்பநிலையை நீண்ட நேரம் தக்கவைக்கும் திறனும் கண்ணாடிக்கு உண்டு.

தண்ணீருக்கு கூட இது பொருந்துமா?

ஆம், சாதாரண தண்ணீருக்கு கூட இது பொருந்தும். பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருக்கும் தண்ணீரை விட, கண்ணாடி பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமான சுவையுடன் இருக்கும். ஏனெனில், பிளாஸ்டிக் பாட்டில்கள் பழையதாகும்போதோ அல்லது வெயிலில் படும்போதோ ஒருவித பிளாஸ்டி நெடியை தண்ணீருக்கு அளித்துவிடும். கண்ணாடியில் எலுமிச்சை அல்லது பழத் துண்டுகளைப் போட்டு வைத்தாலும், அதன் சுவையை கண்ணாடி உறிஞ்சுவதில்லை.

பிளாஸ்டி பாட்டில்கள் ஆபத்தானவையா?

பிளாஸ்டிக் பாட்டில்கள் என்றாலே உடனே ஆபத்து என்று அர்த்தமில்லை. பிஏபி (BPA) போன்ற சில வேதிப்பொருட்கள் பிளாஸ்டிக்கில் இருப்பது கவலைக்குரிய விஷயம் என்றாலும், பானங்கள் விற்கப் பயன்படுத்தப்படும் 'PET' வகை பிளாஸ்டிக்குகள் கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்படுகின்றன. எனவே, பிளாஸ்டிக் உடனடியாக ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், சுவை மற்றும் தரத்தின் அடிப்படையில் கண்ணாடியே சிறந்தது.

கண்ணாடி பாட்டில் எப்படி தயாராகிறது?

ஒரு சாதாரண கண்ணாடி பாட்டிலில் 70% சிலிக்கா, சோடா சாம்பல் மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை கலந்திருக்கின்றன. இவை மிக அதிக வெப்பநிலையில் உருக்கப்பட்டு பாட்டில்களாக மாற்றப்படுகின்றன.

கடைசியாக, சுவை என்பதில் அறிவியலையும் தாண்டி நமது மனோதத்துவமும் வேலை செய்கிறது. கண்ணாடி பாட்டிலின் கச்சிதமான எடை, மூடியைத் திறக்கும் சத்தம், கையில் கிடைக்கும் குளிர்ச்சி என எல்லாமே சேர்ந்துதான் அந்தப் பானத்தின் சுவையை நமக்கு முழுமையாகத் தருகின்றன.

ஆய்வு:

இதையும் படிங்க:

தள்ளிப்போடும் பழக்கத்திற்கு டாட்டா l வேலையை உடனே முடிக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

ஃப்ரீசரில் ஐஸ் கட்டியா? எளிதாக நீக்க 2 சிம்பிள் டிப்ஸ்!