ETV Bharat / lifestyle

தலைக்கு குளித்த பின் சாம்பிராணி போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

குளித்து முடித்ததும் சாம்பிராணி புகை போடும்போது, அது கூந்தலில் உள்ள தேவையற்ற ஈரப்பதத்தை வேரிலிருந்து உறிஞ்சி, தலையை உலர வைக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Eenadu)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : July 7, 2026 at 12:18 PM IST

3 Min Read
Choose ETV Bharat

முந்தைய தலைமுறையினர் பின்பற்றிய பல பழக்கவழக்கங்கள் இன்று நம்மிடம் இல்லை. அப்படி மறைந்து வரும் பழக்கங்களில் ஒன்றுதான், பெண்கள் தலைக்கு குளித்த பிறகு கூந்தலுக்கு சாம்பிராணி புகை போடுவது. இன்று தலைமுடியை உலர வைக்க நம்மிடம் விதவிதமான ஹேர் ட்ரையர்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வந்துவிட்டன.

ஆனால், இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடி வறண்டு போவது, முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல்வேறு பிரச்சனைகளை நாம் தினமும் எதிர்கொள்கிறோம். நம் பாட்டிகளும், அம்மாக்களும் எந்த விதமான நவீன அழகு பொருட்களும் இல்லாமலேயே தங்களின் கூந்தலை எப்படி அடர்த்தியாகவும், கருகருவென ஆரோக்கியமாகவும் பராமரித்தார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

அதற்கு அவர்கள் பயன்படுத்திய எளிய இயற்கை வழிதான் சாம்பிராணி புகை போடுவது. இது கூந்தலை உலர வைக்க மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பழங்கால மரபு

நம் நாட்டில் பழங்காலம் தொட்டே சாம்பிராணி போடும் பழக்கம் இருந்து வருகிறது. வீட்டில் சாம்பிராணி புகை போடுவதால் நேர்மறை ஆற்றல் பெருகும் என்பதும், வீடும் அதை சுற்றியுள்ள இடங்களும் தூய்மையாகும் என்பதும் பலரின் நம்பிக்கை. குறிப்பாக, குழந்தைகளுக்கு குளிப்பாட்டிய பிறகு சளி பிடிக்காமல் இருக்க சாம்பிராணி புகை காட்டுவார்கள்.

அதேபோல், மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, தலைமுடி எளிதில் உலராது. இத்தகைய சூழலில் தலைக்கு சாம்பிராணி புகை போடுவது கிருமி தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்பார்கள்.

ஈரப்பதத்தை உறிஞ்சி பொடுகைத் தடுக்கும்

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, தலைக்கு குளித்த பிறகு முடி சீக்கிரம் காயாது. இதனால் மண்டை ஓட்டில் ஈரப்பதம் தங்கி, பூஞ்சை தொற்று மற்றும் பொடுகு போன்ற தொல்லைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குளித்து முடித்ததும் சாம்பிராணி புகை போடும்போது, அது கூந்தலில் உள்ள தேவையற்ற ஈரப்பதத்தை வேரிலிருந்து உறிஞ்சி, தலையை உலர வைக்கிறது.

மேலும், சாம்பிராணி தூபத்துடன் வேப்பிலை, துளசி போன்ற மூலிகைகளை சேர்த்து பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளிப்படும் புகைக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்களை அழிக்கும் திறன் கிடைக்கிறது. இந்த புகை தலைமுடியில் படும்போது, மண்டை ஓட்டில் இருக்கும் அழுக்குகள், வியர்வை மற்றும் கிருமிகள் முழுமையாக நீக்கப்படுகின்றன.

ரத்த ஓட்டமும் முடி வளர்ச்சியும்

சாம்பிராணி புகையில் இருக்கும் மிதமான வெப்பம், தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் போது, தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக சென்றடையும். இது முடியின் வேர்களை வலுவாக்கி, முடி உதிர்வதை கணிசமாககுறைக்கிறது. இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர தொடங்குகிறது.

தலைமுடி துர்நாற்றம் நீங்கும்

மழை நீரில் நனைவதாலோ அல்லது தலைமுடி சரியாக உலராததாலோ சிலருக்கு தலையிலிருந்து ஒருவிதமான வறட்டு வாடை அல்லது துர்நாற்றம் வீசக்கூடும். சாம்பிராணி புகை இதற்கு ஒரு சிறந்த இயற்கை வாசனை திரவியமாக (Natural Perfume) செயல்படுகிறது. இது கூந்தலில் இருக்கும் துர்நாற்றத்தை முழுமையாக நீக்கி, நாள் முழுவதும் கூந்தலை நறுமணத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

மன அமைதியும் நிம்மதியும்

சாம்பிராணியின் நறுமணம் உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் அமைதியை தரக்கூடியது. மழைக்காலங்களில் ஏற்படும் மந்தமான சூழல் மற்றும் மன அழுத்தத்தை மாற்றி, மூளையை சுறுசுறுப்பாக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும், சாம்பிராணிக்கு இயற்கையிலேயே கிருமிநாசினி குணங்கள் இருப்பதால், இது தலையில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தி நிம்மதியான உணர்வை தருகிறது.

அளவோடு பயன்படுத்தினால் மட்டுமே நன்மை

தலைமுடிக்கு சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியமான முறை என்றாலும், இதனை தினமும் செய்ய கூடாது. சாம்பிராணியில் இருந்து வெளிவரும் புகையை தொடர்ந்து அதிக அளவில் சுவாசிப்பது நுரையீரலுக்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே இந்த முறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது. குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் சளி, ஒவ்வாமை (Allergy) பிரச்சனை உள்ளவர்கள் இதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:

நம்மால் சில வாசனைகளை உணர முடியாமல் போவது ஏன்? 'நோஸ் பிளைண்ட்னஸ்' பாதிப்பு பற்றி தெரியுமா?

பதின்ம வயதினரை சூழும் 'காஸ்மெடிகோரெக்ஸியா': ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் மோகம்!

குழந்தைக்கு முடி சரியா வளரலையேனு கவலையா? விளக்கெண்ணெய் - தேங்காய் எண்ணெய்: எது பெஸ்ட்?