ETV Bharat / lifestyle

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்: வைரலாகும் 'கொடவா' திருமண சடங்கு - அப்படி என்ன சிறப்பு?

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் 2 முறை திருமணம் செய்யவுள்ளனர். இதில் ராஷ்மிகாவின் பாரம்பரியமான கொடவா முறை திருமணம் என்றால் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா (Instagram page)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : February 26, 2026 at 1:47 PM IST

3 Min Read
Choose ETV Bharat

தென்னிந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் முக்கியமானவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரியைப் பார்த்த ரசிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை, இவர்களது நிஜ வாழ்க்கை உறவு குறித்து சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான விவாதங்கள் நடந்து வந்தன. இருவரும் பொது இடங்களில் ஒன்றாகத் தென்பட்ட போதும், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் கசிந்த போதும் இருவரும் மௌனம் காத்தே வந்தனர்.

தற்போது அந்த நீண்ட கால ரகசியத்திற்கு ஒரு அழகான முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது பாரம்பரியத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளித்து இந்தத் திருமணத்தை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு பாரம்பரியங்கள்: உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் நடைபெறும் இந்தத் திருமண விழா, முழுக்க முழுக்க உறவினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடக்கிறது. ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவின் குடகு (Coorg) பகுதியைச் சேர்ந்த 'கொடவா' இனத்தைச் சேர்ந்தவர். விஜய் தேவரகொண்டா தெலுங்கு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர். இந்த இரண்டு மாறுபட்ட பண்பாடுகளையும் கொண்டாடும் வகையில், இருவேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன.

இன்று காலை விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு இந்து மரபுப்படி சடங்குகள் நடந்து முடிந்த நிலையில், மாலையில் ராஷ்மிகாவின் பாரம்பரியமான கொடவா முறைப்படி சடங்குகள் நடைபெற உள்ளன. இதற்கிடையில், "கொடவா முறை திருமணம் என்றால் என்ன?" என்பது குறித்தும், அதன் சடங்குகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் இணையதளங்களில் மக்கள் அதிக அளவில் தேடத் தொடங்கியுள்ளனர்.

மாலையில் இராண்டாவது முறை திருமணம்: மாலையில் ராஷ்மிகாவின் பூர்வீகக் கலாச்சாரமான 'கொடவா' முறைப்படி திருமணச் சடங்குகள் தொடங்குகின்றன. 'கொடவா மங்கலா' என்று அழைக்கப்படும் இந்தத் திருமணம், இந்தியாவில் உள்ள மற்ற திருமணச் சடங்குகளில் இருந்து மிகவும் மாறுபட்டது. இது போர் வீரர்களின் மரபைக் கொண்டது.

கொடவா திருமணச் சடங்குகளின் சிறப்பம்சங்கள்: ராஷ்மிகாவின் கொடவா இனப் பாரம்பரியத்தில் சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. இந்தச் சடங்குகள் வெறும் சடங்குகளாக இல்லாமல், ஒரு சமூகக் கூடலாகவே பார்க்கப்படுகிறது.

ஆடை மற்றும் அலங்காரம்: இந்த கலாச்சாரத்தில் மணமகன் , 'குப்யா' (Kupya) எனப்படும் வெள்ளை நிற நீண்ட அங்கியை அணிந்திருப்பார். அதன் இடுப்பில் சிவப்பு மற்றும் தங்க வேலைப்பாடுகள் கொண்ட பட்டுத் துணி (Chele) கட்டப்பட்டிருக்கும். மணமகள், 'கொடவா' பாணியில் பின்புறம் மடிப்புகள் வைத்து கட்டப்படும் சிவப்பு நிறப் பட்டுச் சேலை மற்றும் தலைக்கவசம் அணிந்திருப்பார்கள்.

வீர மரபுச் சடங்கு: கொடவா மக்கள் தங்களை ஒரு போர் இனமாகவே கருதுகின்றனர். அதன் அடையாளமாக, மணமகன் தனது இடுப்பில் 'பீசேகத்தி' (Peechekathi) என்ற சிறிய கத்தியையும், முதுகில் 'ஓடி கத்தி' (Odi kathi) என்ற பெரிய வாளையும் அணிந்திருப்பார். திருமண மேடைக்கு வரும் முன், வீரத்தைக் குறிக்கும் வகையில் வாழைத் தண்டுகளை வாளால் வெட்டிச் சாய்க்கும் சடங்கு நடைபெறும்.

கங்கை பூஜை : திருமணத்திற்குப் பிறகு மணமகள் மணமகன் வீட்டிற்குச் செல்வதைக் குறிக்கும் வகையில் இந்தப் பூஜை நடக்கும். மணமகள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வர, அதை மணமகன் குடும்பத்தினர் விளையாட்டாக வழிமறித்துத் தடுத்து நடனமாடுவார்கள். இந்தப் போராட்டத்தைத் தாண்டி அவர் தண்ணீர் குடத்தை சமையலறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இது அந்தப் பெண் புதிய வீட்டில் நுழையும் உறுதியைக் குறிக்கிறது.

சமூக விருந்து: திருமணத்திற்கு முந்தைய நாளே 'ஊர் குடுவோ' (Ooor Kuduvo) என்ற சடங்கின் மூலம் ஊர் மக்கள் ஒன்று கூடி பந்தல் அமைத்து, காய்கறிகள் நறுக்கி விருந்து தயாரிப்பார்கள்.

புகைப்படங்களுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்: ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்கள் செல்போன் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று காலை முதலே ரசிகர்கள் "Virosh Wedding" மற்றும் "Vijay Rashmika" போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இவர்களது திருமணத்தைப் பற்றிப் பல செய்திகள் வந்தாலும், இப்போது அது நிஜமாகியுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துவிட்டது. எனினும், இன்னும் ஒரு புகைப்படம் கூட வெளியாகாதது அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்போது வெளியாகும் என்று ஏக்கத்துடன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ரசிகர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். புகைப்படங்கள் வெளியான சில நொடிகளிலேயே அவை இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க:

'பூத சுத்தி விவாகம்' முறையில் நடைபெற்ற நடிகை சமந்தா திருமணம் - அப்படி என்றால் என்ன தெரியுமா?