முகம் தங்கம் போல ஜொலிக்க..கடலை மாவை இந்த 6 வழிகளில் ட்ரை பண்ணி பாருங்க!
உங்கள் சருமம் வறண்டு, பொலிவில்லாமல் இருந்தால் கடலை மாவுடன் தேன், பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தவும்.

Published : March 3, 2026 at 1:45 PM IST
முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்வது என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் முதலில் கைகாட்டுவது கடலை மாவை தான். "ஏன்ப்பா... ஒரு காலத்துல சோப்பு கூட கிடையாது, கடலை மாவு தேய்ச்சுதான் குளிச்சாங்க, முகம் எப்படி பளபளன்னு இருந்துச்சு தெரியுமா?" என்று நம் பாட்டி சொல்வதை கேட்டிருப்போம்.
அது ஏதோ ஓரளவிற்கு உண்மை தான். ஆனால், வெறும் கடலை மாவை மட்டும் பயன்படுத்துவதை விட, அதனுடன் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை சரியான அளவில் சேர்த்தால், அதன் பலன் இரட்டிப்பாகும். அந்த வகையில், பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல், முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்ற கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
கடலை மாவு, எலுமிச்சை சாறு மற்றும் பாலேடு: சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற இந்த ஃபேஸ் பேக் சிறந்த 'நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்'. 2 ஸ்பூன் கடலை மாவுடன், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் பாலேடு சேர்த்து கலக்கவும்.
பாலேடு உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தந்து மிருதுவாக்கும். எலுமிச்சை சாறு முகத்தில் உள்ள கருமையை நீக்கி பிரகாசம் தரும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், உடனேயே மாற்றத்தை உணர முடியும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த பலனை தரும்.
கடலை மாவு, பப்பாளி மற்றும் ஆரஞ்சு சாறு: வெயிலில் அலைவதால் ஏற்படும் 'சன் டான்' (Sun Tan) மற்றும் முகத்தில் உள்ள ஆங்காங்கே இருக்கும் கரும்புள்ளிகளை போக்க இது உதவும். நன்றாக கனிந்த பப்பாளி பழத்தை துண்டுகளாக்கி மசித்து, அதனுடன் கடலை மாவு மற்றும் சில துளிகள் ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.
பப்பாளியில் உள்ள சத்துக்கள் இறந்த செல்களை நீக்கி முகத்தை புதுப்பிக்கும். ஆரஞ்சு சாற்றில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு ஒரு இயற்கையான பொலிவை தரும். வாரத்தில் இரண்டு முறை இதனை பயன்படுத்தினால் முகம் ஒரே சீரான நிறத்தை பெறும்.
கடலை மாவு உப்டன் விசேஷ நாட்களில் முகம் ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த 'உப்டன்' முறையை தேர்ந்தெடுக்கலாம். கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தயிர் அல்லது பால், கொஞ்சம் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல தயார் செய்யவும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை ஆழமாக நீக்குவதுடன், முகத்தில் இருக்கும் தேவையற்ற மெல்லிய முடிகளை நீக்கவும் உதவுகிறது.
கடலை மாவு, தேன், பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு: உங்கள் சருமம் மிகவும் வறண்டு, பொலிவில்லாமல் காணப்பட்டால் இந்த ஃபேஸ் பேக் பெஸ்ட். கடலை மாவுடன் தேன், பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலக்கவும்.
முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை சுருங்காமல் இளமையாக வைத்திருக்க உதவும். பாதாம் எண்ணெய் மற்றும் தேன் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை உள்ளிருந்து வழங்கி, முகத்தை எப்போதும் 'ஃப்ரெஷ்' ஆக வைத்திருக்க உதவும். இது ஒரு முழுமையான 'ஸ்கின் ஃபுட்' என்று கூட சொல்லலாம்.
கடலை மாவு மற்றும் பால்: உங்களுக்கு அதிக வேலை இருக்கிறது, பெரிய அளவில் எதையும் செய்ய நேரமில்லை என்றால், இந்த எளிய முறையை செய்யலாம். வெறும் கடலை மாவை காய்ச்சாத பாலில் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.
இது முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, முகத்தை சுத்தமாக்கும். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தினமும் அலுவலகம் முடிந்து வந்ததும் இதை செய்தால், முகத்தில் சேரும் தூசு மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறும்.
கடலை மாவு, ஆரஞ்சு தோல் மற்றும் பாலேடு: முகத்தை 'ஸ்க்ரப்' (Scrub) செய்ய இது ஒரு அருமையான வழி. ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். அந்த பொடியுடன் கடலை மாவு மற்றும் பாலேடு சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக தேய்த்து கழுவவும்.
இது சருமத் துளைகளில் ஒளிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றும். ஆரஞ்சு தோலின் நறுமணம் உங்களுக்கு ஒரு புத்துணர்வைத் தருவதோடு, உங்கள் முகத்திற்கு ஒரு அழகான 'நேச்சுரல் க்ளோ' கொடுக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

