ETV Bharat / lifestyle

நம்மால் சில வாசனைகளை உணர முடியாமல் போவது ஏன்? 'நோஸ் பிளைண்ட்னஸ்' பாதிப்பு பற்றி தெரியுமா?

சுவையான உணவின் மணம், மலர்களின் நறுமணம் போன்ற வாழ்க்கையின் எளிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் போவதால் மனிதர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்படும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : July 6, 2026 at 12:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

உங்கள் வீட்டிற்குள் யாராவது புதிதாக வரும்போது, "வீட்டில் ஏதோ ஒரு நல்ல வாசனை வருகிறதே" அல்லது "ஒரு மாதிரியான சமையல் வாசனை அடிக்கிறதே" என்று கூறுவதை கவனித்திருக்கிறீர்களா? ஆனால், அதே வீட்டில் எப்போதும் வாழும் உங்களுக்கு எந்த வாசனை வித்தியாசமும் தெரிந்திருக்காது.

அதேபோல, மற்றவர்கள் எளிதாக கண்டுபிடிக்கும் ஒரு சில வாசனைகளை உங்களால் மட்டும் உடனடியாக நுகர முடியாமல் போகலாம். இந்த நிலையைத்தான் ஆங்கிலத்தில் 'நோஸ் பிளைண்ட்னஸ்' (Nose Blindness) என்று அழைக்கிறார்கள். தமிழில் இதனை 'வாசனை சோர்வு' அல்லது 'வாசனை மந்தநிலை' என்று சொல்லலாம்.

இது ஒரு தற்காலிகமான நிலைதான் என்றாலும், நம் அன்றாட வாழ்க்கையில் பல சுவாரசியங்களை நாம் இழக்க காரணமாகிறது. இப்படியிருக்க, நம்முடைய மூக்கு ஏன் ஒரு குறிப்பிட்ட வாசனைக்கு பழகிப்போகிறது, இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் மற்றும் இதனை எப்படி எளிதாக சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வாசனை சோர்வு (Nose Blindness) என்றால் என்ன?

வாசனை சோர்வு என்பது ஒரு குறிப்பிட்ட வாசனையை தற்காலிகமாக நம் மூக்கால் கண்டறிய முடியாமல் போகும் ஒரு நிலை. இந்த பாதிப்பு ஏற்படும்போது, நம்முடைய நுகர்வு திறன் ஒரு குறிப்பிட்ட வாசனைக்கு மட்டும் மழுங்கிப்போய், அந்த வாசனை நமக்கு தெரியாமல் பின்னணிக்கு சென்றுவிடுகிறது.

உதாரணமாக, ஒரு பேக்கரிக்குள் நுழையும்போது சுடச்சுட தயாராகும் பிஸ்கட்டின் வாசனை முதலில் நமக்கு நன்றாக தெரியும். ஆனால், அங்கேயே சிறிது நேரம் நிற்கும்போது அந்த வாசனை நமக்கு தெரியாமல் போய்விடும். அதேபோல, பூந்தோட்டத்திற்குள் நுழையும்போது தெரியும் மலர்களின் வாசனை, சிறிது நேரத்தில் நமக்கு தெரியாமல் போவது நுகர்வு சோர்வினால் தான்.

இதன் பின்னணியில் உள்ள அறிவியல்

நம்முடைய நுகர்வு மண்டலம் மிகவும் நுட்பமானது. நாம் ஒரு வாசனையை சுவாசிக்கும்போது, மூக்கிலுள்ள வேதியியல் ஏற்பிகள் (Chemical receptors) அந்த வாசனையை மூளைக்கு தகவலாக அனுப்புகின்றன. மூளை அதனை என்ன வாசனை என்று நமக்கு உணர்த்துகிறது.

ஆனால், ஒரே வாசனையை நாம் தொடர்ந்து நீண்ட நேரம் சுவாசிக்கும்போது, மூக்கிலுள்ள இந்த ஏற்பிகள் சோர்வடைந்துவிடுகின்றன. இதற்கு 'உணர்ச்சித் தகவமைப்பு' (Sensory adaptation) என்று பெயர். மூளை அந்த வாசனையை ஒரு தேவையற்ற பின்னணி சத்தமாக தவிர்த்துவிட்டு, புதிய வாசனைகளை கண்டறிய தயாராகிறது. இதனால்தான் நம்முடைய சொந்த வீட்டின் வாசனையோ அல்லது நாம் தினமும் பயன்படுத்தும் சென்ட் வாசனையோ நமக்கு தெரிவதில்லை.

ஏன் இது ஏற்படுகிறது?

  • தொடர்ச்சியான வெளிப்பாடு: மிகவும் அடர்த்தியான அல்லது ஒரே மாதிரியான வாசனை உள்ள சூழலில் தொடர்ந்து இருப்பது (உதாரணமாக: வாசனை திரவியங்கள் தயாரிக்கும் இடம் அல்லது மாசடைந்த பகுதிகள்).
  • சுவாச பிரச்சனைகள்: சளி, இருமல் மற்றும் சைனஸ் போன்ற தற்காலிக உடல்நலக் குறைபாடுகள் மூக்கடைப்பை ஏற்படுத்தி நுகர்வு திறனை பாதிக்கும்.
  • வயது முதிர்வு: வயது கூடிக்கொண்டே போகும்போது, நம் மூக்கிலுள்ள வாசனை ஏற்பிகளின் உணர்திறன் இயற்கையாகவே குறையத் தொடங்கும்.
  • மருந்துகள் மற்றும் கட்டிகள்: சில வகையான மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், மூக்கிற்குள் வளரும் சதை வளர்ச்சியினாலும் (Nasal polyps) காற்று செல்வது தடைபட்டு வாசனை தெரியாமல் போகலாம்.

பாதிப்புகளை கண்டறிவது எப்படி?

மற்றவர்களுக்கு தெளிவாக தெரியும் ஒரு வாசனை உங்களுக்கு மட்டும் தெரியவில்லை என்றாலோ, அல்லது உங்களுக்கு பிடித்த உணவுகளின் நறுமணம் முன்பை விட குறைவாக தெரிந்தாலோ உங்களுக்கு வாசனை சோர்வு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். வாசனை திறனும் சுவை திறனும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால், இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவின் சுவையும் சற்றே மந்தமாக தெரியும்.

இது தொடர்ச்சியாக இருந்தால், காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் 'ஸ்னிஃபின் ஸ்டிக்ஸ்' (Sniffin' Sticks) போன்ற எளிய சோதனைகள் மூலம் உங்கள் நுகர்வுத் திறனின் அளவைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.

இதனால் ஏற்படும் அன்றாடப் பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள்

வாசனை சோர்வு என்பது ஏதோ வாசனையை மட்டும் இழக்கும் விஷயம் அல்ல, இதில் சில ஆபத்துகளும் ஒளிந்துள்ளன,

  • பாதுகாப்பு அச்சுறுத்தல்: வீட்டில் சமையல் எரிவாயு (Gas leak) கசிந்தாலோ அல்லது ஏதேனும் பொருள் கருகிப் புகை வந்தாலோ வாசனை சோர்வு உள்ளவர்களால் அதனை உடனடியாக கண்டறிய முடியாது. இது பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.
  • மனநிலை மாற்றம்: சுவையான உணவின் மணம், மலர்களின் நறுமணம் போன்ற வாழ்க்கையின் எளிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் போவதால் ஒருவித சலிப்பு ஏற்படும்.
  • உடல்நல எச்சரிக்கை: சில சமயங்களில், இந்த வாசனை சோர்வு என்பது சைனஸ் பாதிப்பு, மூக்கு சதை வளர்ச்சி அல்லது நரம்பியல் குறைபாடுகளின் (பார்கின்சன் அல்லது அல்சைமர் போன்ற நோய்கள்) ஆரம்பக்கால அறிகுறியாகவும் இருக்கலாம்.

வாசனை சோர்விலிருந்து மீள்வது மற்றும் தடுக்கும் முறைகள்

இந்த பாதிப்பிலிருந்து விடுபடவும், நம் நுகர்வு திறனை கூர்மையாக வைத்திருக்கவும் சில எளிய வழிமுறைகள் உள்ளன..

  • எலுமிச்சை, ரோஜா, கிராம்பு, யூகலிப்டஸ் போன்ற இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்களை (Essential Oils) தினமும் சில நிமிடங்கள் தொடர்ந்து முகர்ந்து பார்த்து வர வேண்டும். இது மூளையின் நுகர்வு பகுதியை மீண்டும் தூண்ட உதவும்.
  • உப்பு நீர் கொண்டு மூக்கை தூய்மைப்படுத்துவதன் மூலம் ஒவ்வாமை மற்றும் அடைப்புகளை நீக்கி, நுகர்வு பாதையை சுத்தமாக வைத்திருக்கலாம்.
  • வீட்டில் ஈரப்பதமூட்டியை (Humidifier) பயன்படுத்துவது நல்லது. காபி தூளை அவ்வப்போது முகர்வது மூக்கின் வாசனை ஏற்பிகளை மீட்டமைக்க உதவும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். புகைபிடிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம்.

குறிப்பு: உங்களுக்கு திடீரென்று வாசனை அறியும் திறன் முற்றிலும் இல்லாமல் போனால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது அவசியமாகும்.

ஆய்வு:

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK482152/

https://stanmed.stanford.edu/sense-smell-health/

இதையும் படிங்க:

டைப்பிங் செய்யும் தலைமுறை: கைகளால் எழுதுவதை மறந்தால் மூளைக்கு ஆபத்தா?

நூல் இழைகளில் நுட்பம்: இந்திய காலநிலையை வெல்லும் புடவை மரபு!

பதின்ம வயதினரை சூழும் 'காஸ்மெடிகோரெக்ஸியா': ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் மோகம்!