ஹோட்டலுக்கு போறீங்களா? டயட் கெடாம சாப்பிட இதோ சூப்பர் டிப்ஸ்!
ஒருவேளை தனியாக ஹோட்டலுக்கு சென்றால், உணவு வந்தவுடனேயே அதில் பாதியை வீட்டிற்கு எடுத்து செல்லும்படி பார்சல் செய்ய சொல்லிவிட்டு, மீதியை மட்டும் சாப்பிடலாம்.

Published : May 31, 2026 at 2:47 PM IST
உடல் எடையை குறைக்கணும், ஃபிட்டா இருக்கணும்னு பலரும் ரொம்ப கஷ்டப்பட்டு, தங்களுக்கு பிடிச்ச உணவுகளையெல்லாம் தியாகம் செஞ்சு டயட் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் என்ன செய்வது என்றே தெரியாமல் போகிவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு சூழல் தான், குடும்பத்தோடோ அல்லது நண்பர்களுடனோ ஹோட்டலுக்கு சென்று உணவருந்துவது. டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தாலும், சில நேரங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
அங்கே சென்றதும், சுவையான உணவுகளைப் பார்த்தவுடன் கட்டுப்பாட்டை இழந்து, பல நாட்கள் கஷ்டப்பட்டு டயட் இருந்ததை ஒரே நாளில் பாழாக்கும் விதமாகச் சாப்பிட்டுவிடுவார்கள். சமீபத்திய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.
அதாவது, டயட்டில் இருப்பவர்கள் உணவகங்களுக்கு செல்லும்போது தங்களின் வழக்கமான உணவு முறையைத் தொடர முடியாமல், அதிகக் கலோரிகளை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அப்படியான சூழலில் என்ன செய்வது? டயட்டும் கெடாமல், ஹோட்டலிலும் எப்படி நிம்மதியாகச் சாப்பிடுவது? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள் (மெனு கார்டு பிளான்)
பொதுவாக நாம் ஹோட்டலுக்கு சென்ற பிறகுதான் அங்கிருக்கும் மெனு கார்டைப் பார்த்து எதை ஆர்டர் செய்வது என்று யோசிப்போம். அந்த நேரத்தில் பசியின் காரணமாகவோ அல்லது உணவுகளின் பெயர்களைப் பார்த்தோ, தெரியாமல் அதிகக் கலோரிகள் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்துவிடுவோம்.
இதற்குப் பதிலாக, நீங்கள் செல்லவிருக்கும் ஹோட்டலின் மெனுவை இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே முன்கூட்டியே பார்த்துவிடுங்கள். உங்கள் டயட்டிற்குப் பொருத்தமான ஆரோக்கியமான உணவை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துக்கொண்டால், ஹோட்டல் சென்றதும் குழப்பமில்லாமல் அதே உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
சுவைக்கு மயங்கி அளவை மாற்றாதீர்கள்
ஹோட்டல் உணவு மிகவும் சுவையாக இருக்கிறது என்பதற்காக, நாம் தினமும் வீட்டில் சாப்பிடும் அளவை விட அதிகமாக சாப்பிடுவது பெரிய தவறு என்கிறார்கள் நிபுணர்கள். உணவு எவ்வளவு ருசியாக இருந்தாலும், உங்கள் உடலுக்கு தேவையான சரியான அளவை மட்டும் சாப்பிடுவதில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், டயட்டை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பழக்கத்தைக் கண்டிப்பாகக் பழகிக்கொள்ள வேண்டும்.
ஹோட்டல் சாப்பாட்டுக்காகப் பட்டினி கிடக்காதீங்க
மதியம் அல்லது இரவு ஹோட்டலுக்கு செல்லவிருக்கிறோம் என்பதால், காலை முதலே எதையும் சாப்பிடாமல் வயிற்றை காயப்போடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால், இப்படி செய்வது நல்ல அல்ல. உடலை வறுத்திப் பட்டினியாகச் செல்லும்போது, கடுமையான பசியின் காரணமாகக் கண்ணில் படும் எல்லா உணவுகளையும் அளவுக்கு அதிகமாக ஆர்டர் செய்ய தோன்றும். எனவே, ஹோட்டலுக்குப் புறப்படுவதற்கு சற்று முன்பாக ஏதேனும் ஒரு பழத்தையோ அல்லது லேசான உணவையோ சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள். இது உங்களின் அதீத பசியைக் கட்டுப்படுத்தும்.
வறுத்த உணவுகளுக்கு ‘நோ’ சொல்லுங்க
ருசி நன்றாக இருக்கும் என்பதற்காக எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை ஆர்டர் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வறுத்த உணவுகளுக்குப் பதிலாக ஆவியில் வேகவைத்த உணவுகள் (Steamed), கிரில் செய்யப்பட்ட உணவுகள் (Grilled) அல்லது தணலில் வாட்டப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை சுவையாக இருப்பதுடன் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமலும் பார்த்துக்கொள்ளும்.
உணவைப் பகிர்ந்து உண்ணுங்கள்
ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவின் அளவு பொதுவாகவே ஒரு நபருக்கு தேவையானதை விட சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ செல்லும்போது உணவைப் பகிர்ந்து சாப்பிடலாம். இது கலோரி அளவைக் குறைப்பதுடன் உணவும் வீணாகாமல் தடுக்கும். ஒருவேளை தனியாக சென்றால், உணவு வந்தவுடனேயே அதில் பாதியை வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி பார்சல் செய்ய சொல்லிவிட்டு, மீதியை மட்டும் சாப்பிடலாம்.
குளிர்பானங்களில் கவனம் தேவை
பிரியாணி போன்ற காரசாரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு, பலருக்கும் சோடா, குளிர்பானங்கள் அல்லது மில்க் ஷேக் குடிக்கும் பழக்கம் இருக்கும். இவற்றில் சர்க்கரையின் அளவும் கலோரிகளும் மிக அதிகமாக இருக்கும். எனவே, இவற்றுக்குப் பதிலாக எலுமிச்சை சாறு (சர்க்கரை இல்லாமல்) அல்லது சாதாரணத் தண்ணீர் குடிப்பது நல்லது. அதேபோல், உணவுக்குப் பிறகு சாப்பிடும் ஐஸ்கிரீம், ஸ்வீட்ஸ் போன்ற இனிப்பு வகைகளை (Desserts) முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
நிதானமாக சாப்பிடுங்கள்
ஹோட்டலுக்கு வந்துவிட்டோம், பிடித்த உணவு கிடைத்துவிட்டது என்பதற்காக வேகமாக சாப்பிடக் கூடாது. உணவை நன்றாக மென்று, நிதானமாக ரசித்து சாப்பிட வேண்டும். நாம் சாப்பிட தொடங்கிய 20 நிமிடங்களுக்கு பிறகுதான் நமது வயிறு நிறைந்துவிட்டது என்ற சமிக்ஞை மூளைக்கு சென்றடையும்.
எனவே, மெதுவாக சாப்பிடும்போது குறைந்த அளவிலேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, அதிகமாகச் சாப்பிடுவது தானாகவே தடுத்து நிறுத்தப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஹோட்டலுக்குச் செல்ல நேரிட்டாலும், இந்த எளிய டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொண்டால் உங்களின் டயட் பயணத்திற்கு எந்தவித இடையூறும் இருக்காது.
இதையும் படிங்க: கர்ப்பகால சர்க்கரை நோய்: பிற்காலத்தில் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் - எச்சரிக்கும் ஆய்வு! இரும்புச்சத்து மாத்திரைகளுடன் கொய்யா சாறு: ரத்த சோகையை விரைவில் குணமாக்கும் எளிய வழி! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

