உங்கள் தினசரி பழக்கங்கள் பற்களில் மஞ்சள் கறைகளை ஏற்படுத்தும்! இதை மட்டும் புறக்கணிக்காதீங்க!
டீயில் உள்ள 'டானின்கள்' என்ற சேர்மங்கள் காபியை விட அதிக செறிவுடன் இருப்பதால், அவை எனாமலுடன் பிணைந்து பழுப்பு அல்லது மஞ்சள் கறைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

Published : December 12, 2025 at 12:52 PM IST
நமது புன்னகைக்கு கூடுதல் அழகை சேர்ப்பது முத்துப்போன்ற வெண்மையான பற்கள். ஆனால், நாளடைவில் பற்களில் மஞ்சள் நிறமாற்றம் ஏற்படுவது பொதுவான கவலைகளில் ஒன்றாகும். என்ன தான் பற்களை அழுத்தி தேய்த்தாலும், மஞ்சள் கறை மட்டும் நீங்காமல் இருக்கும்.
இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் நாம் அறியாமலேயே செய்யும் சில வழக்கமான பழக்கங்கள், நமது பற்களின் எனாமலை மெல்லச் சேதப்படுத்தி, அவற்றை மஞ்சள் நிறமாக்குகின்றன என பல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பற்களின் வெளிப்புற அடுக்கான எனாமல் நுண்துளைகள் கொண்டது. இதனால், நாம் அடிக்கடி உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள நிறமிகள் எளிதில் இந்தத் துளைகளில் சிக்கி கறைகளை உருவாக்குகின்றன.

ஆனால், இந்த கறைகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவை அல்லது எளிய அறிவியல் பூர்வமான வழிமுறைகள் மூலம் குணப்படுத்தக்கூடியவை. அந்த வகையில், அழகைக் கெடுக்கும் தினசரிப் பழக்கங்களையும், அவற்றைச் சரிசெய்வதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
டீ குடிப்பது: ஆய்வுகளின்படி, டீயில் உள்ள 'டானின்கள்' (Tannins) என்ற சேர்மங்கள் காபியை விட அதிக செறிவுடன் இருப்பதால், அவை எனாமலுடன் பிணைந்து பழுப்பு அல்லது மஞ்சள் கறைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. இது கோல்கேட் தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ளாக் டீ போன்றவைக்கு பதில், பால் சேர்த்த டீ குடிப்பது கறையை குறைக்கும். பாலில் உள்ள புரதங்கள் கறைகள் ஏற்படுவதை தவிர்க்கும். அதே போல், ஒவ்வொரு முறை டீ குடித்த பிறகும் வாயை கொப்பளிப்பது, அல்லது குறைந்த டானின் அளவுள்ள மூலிகை டீக்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
அன்றாட சமையலில் மஞ்சள்: மஞ்சளில் இருக்கும் சக்திவாய்ந்த நிறமியான 'குர்குமின்' (Curcumin) பற்களின் எனாமலில் மிக எளிதில் ஒட்டிக்கொள்ளும் திறன் கொண்டது என 2022ம் ஆண்டு வெளியான NCBI ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஞ்சள் அதிகம் உள்ள உணவுகளை உண்டவுடன் உடனடியாக வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஆனால், சாப்பிட்ட உடனே பல் துலக்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அமிலத்தன்மை எனாமலை தற்காலிகமாக மென்மையாக்கி இருக்கும்.

அடிக்கடி ஸ்நாக்ஸ் உட்கொள்ளல்: ஒவ்வொரு முறை ஸ்நாக்ஸ் உண்ணும்போதும், வாயின் pH சமநிலை குறைந்து, எனாமல் மென்மையாகிறது. இது கறைகளை உறிஞ்சும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதனால் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும், தண்ணீர் குடிக்க வேண்டும். ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்ப்பது எனாமலை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும்.
உடற்பயிற்சி சப்ளிமென்ட்கள்: புரோட்டீன் பவுடர்கள் மற்றும் ப்ரீ-ஒர்க்அவுட் பானங்களில் உள்ள செயற்கை சாயங்கள் கறையை ஏற்படுத்தும். மேலும், சில துணைப் பொருட்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவையாகவும் உள்ளன. நிறமற்ற, ஃபிளேவர் இல்லாத சப்ளிமென்ட்களைத் தேர்வு செய்யவும். ஸ்ட்ரா பயன்படுத்தி குடிப்பது, மற்றும் குடித்த பிறகு வாயை கொப்பளிப்பது அவசியம்.
வாய்வழி சுவாசம் (தூங்கும்போது): வாய் வழியாக சுவாசிப்பது உமிழ்நீரை உலரச் செய்கிறது. உமிழ்நீர் வாயின் இயற்கை சுத்தப்படுத்தியாகச் செயல்படுவதால், அதன் குறைபாடு கறை மற்றும் பிளேக் படிவத்தை அதிகரிக்கும் என்கிறது ஆய்வு. மூக்கடைப்பு போன்ற காரணங்களுக்குச் சிகிச்சை அளிக்கவும். இரவில் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம் அல்லது பல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது: போதுமான நீர்ச்சத்து இன்மையால் நிறமிகள் மற்றும் உணவுத் துகள்களை வாயிலிருந்து அகற்ற முடிவதில்லை. அடிக்கடி தண்ணீ குடிப்பது மற்றும் கறையை ஏற்படுத்தும் உணவுகளுக்குப் பிறகு (கறி, பீட்ரூட் போன்றவை) வாயைக் கட்டாயம் கொப்பளிக்கவும்.
அமில உணவுக்குப் பின் உடனடியாக பல் துலக்குதல்: சிட்ரஸ், தக்காளி, சோடா போன்ற அமில உணவுகளை உட்கொண்டவுடன் உடனடியாகப் பல் துலக்குவது, மென்மையான எனாமலுக்குள் நிறமியைத் தள்ளி, கறையை மோசமாக்கிவிடும். அதனால், உணவு உட்கொண்ட 30 நிமிடங்களுக்கு பின் பல் துலக்கலாம். இடைப்பட்ட நேரத்தில் வாயை நீரால் நன்கு கொப்பளிக்கவும்.
செயற்கை சாயம் கொண்ட மவுத்வாஷ்கள்: சில வண்ணமயமான மவுத்வாஷ்கள் (நீலம், பச்சை) அடிக்கடி பயன்படுத்தப்படும்போது எனாமலை கறைப்படுத்தலாம். சாயம் மற்றும் ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷ்களைத் தேர்ந்தெடுத்து, பயன்படுத்தலாம்.
இரவு பல் துலக்காதது: இரவு நேரத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக பெருகி, கறைகளை ஆழமாகப் பதிக்கின்றன. சரியான நுட்பத்தில் துலக்காமல் இருப்பதும் சிக்கல். மிருதுவான பிரஷ்ஷைப் பயன்படுத்தி, ஃப்ளூரைடு டூத்பேஸ்ட்டுடன் தினமும் இரண்டு முறை 2 நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் துலக்குங்கள். பிரஷ்ஷை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவும்.
வெண்மையாக்கும் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல்: ஒயிட்னிங் ஸ்ட்ரிப்ஸ் அல்லது கரி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது எனாமலை அரித்து, நீண்ட கால மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும். பல் மருத்துவர் அங்கீகரித்த வெண்மையாக்கும் முறைகளை மட்டும் பின்பற்றுங்கள். கரி போன்ற சிராய்ப்புத் தன்மையுள்ள பொருட்களைத் தவிர்க்கவும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

