ETV Bharat / lifestyle

பதின்ம வயதினரை சூழும் 'காஸ்மெடிகோரெக்ஸியா': ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் மோகம்!

13 வயதை தொட்டாலே ஹார்மோன் மாற்றங்களால் முகத்தில் பருக்கள் வருவது பொதுவானதுதான். ஆனால், இன்றைய பிள்ளைகள் முகத்தில் ஒரு சிறு கரும்புள்ளி கூட இருக்க கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : July 2, 2026 at 11:02 AM IST

4 Min Read
Choose ETV Bharat

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நம் வீட்டு பிள்ளைகள், முகம் கை கால்களை கழுவிவிட்டு படிக்க உட்கார்ந்த காலம் மாறி, இன்று வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கண்ணாடியின் முன்னால் போய் நின்று கொள்கிறார்கள். தங்களின் முகத்தில் எங்கேனும் ஒரு சிறிய பருவோ அல்லது தழும்புகளோ வந்துவிட்டதா என்று கவலையோடு தேடி பார்க்கிறார்கள்.

முன்பெல்லாம் பதின் பருவத்தில் முகம் மாறுவதும், பருக்கள் வருவதும் இயற்கையான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய 13 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளோ, தங்களின் முகம் எப்போதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் யூடியூப் வீடியோக்களிலும் வரும் மாடல்களை போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள்.

இதற்காக, பெரியவர்கள் பயன்படுத்தும் வீரியமிக்க கிரீம்களையும், சீரம்களையும் ஆன்லைனில் வாங்கி, பெற்றோருக்கே தெரியாமல் தங்களின் மென்மையான முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். முகம் அழகாக வேண்டும் என்று ஆசைப்பட்டு செய்யும் இந்த அரைகுறை முயற்சி, இறுதியில் அவர்களின் முகத்தையே பாழாக்கி விடுகிறது.

சமூக ஊடகங்கள் வழியாக நம் பதின் பருவப் பிள்ளைகளின் மனதில் புகுந்துள்ள இந்த ஆபத்தான அழகு மோகத்தை பற்றியும், இதனால் அவர்களின் தோலுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளை பற்றியும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அழகு சாதனப் பொருட்களின் மீது ஏற்படும் அதீத மோகம்

இன்றைய பதின் பருவப் பிள்ளைகளிடம் மிக வேகமாக பரவி வரும் இந்த விசித்திரமான பழக்கத்திற்கு மருத்துவ உலகம் காஸ்மெடிகோரெக்ஸியா (Cosmeticorexia) என்று பெயரிட்டுள்ளது. அதாவது, தங்களின் வயதுக்கு தேவையில்லாத, முதிர்ந்த தோலுக்கு பயன்படுத்த வேண்டிய அழகு சாதனப் பொருட்களை பேராசையோடு முகத்தில் பூசி கொள்ளும் ஒருவித மனநிலைதான் இது.

13 வயதை தொட்டாலே ஹார்மோன் மாற்றங்களால் முகத்தில் பருக்கள் வருவது பொதுவானதுதான். ஆனால், இன்றைய பிள்ளைகள் முகத்தில் ஒரு சிறு கரும்புள்ளி கூட இருக்க கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். முகம் தெரியாத யாரோ ஒரு நபர் ஏதோ ஒரு வீடியோவில் பேசுகிறார் என்பதற்காக, தங்களின் மென்மையான தோலுக்கு அது ஒத்துக்கொள்ளுமா என்று கூட யோசிக்காமல், ஆன்லைன் மூலமாக அந்தப் பொருட்களை ஆர்டர் செய்து பயன்படுத்த தொடங்குகிறார்கள். இது ஏதோ ஒரு சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டுப் போல ஆரம்பித்து, நாளாக நாளாக ஒரு கடுமையான போதையாக மாறிவிடுகிறது.

சமூக ஊடகங்களும் விளம்பர மாயையும்

இன்றைய பதின் பருவத்தினர் தங்களின் பெரும்பாலான நேரத்தை செல்போன் திரையிலேயே கழிக்கிறார்கள். அதில் வரும் இன்ஃப்ளூயன்சர்கள் என்று சொல்லப்படும் நபர்கள், கேமராக்களில் இருக்கும் அழகு பில்டர்களை ஆன் செய்து கொண்டு, தங்களின் முகம் இயற்கையிலேயே பளபளப்பாக இருப்பது போல காட்டி கொள்கிறார்கள். அதோடு, சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தினால் உங்களுக்கும் முகம் இப்படி மாறும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

பதின் பருவத்தினரை கவரும் வகையில் மிட்டாய் வாசனையிலும், கவர்ச்சியான பாட்டில்களிலும் இந்த அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. இதை பார்க்கும் 14, 15 வயதுப் பிள்ளைகள், தங்களுக்கு வயதான பிறகு வரக்கூடிய தோல் சுருக்கங்களை இப்போதே தடுக்க வேண்டும் என்று தவறாக நம்பி, 'ஆன்டி ஏஜிங்' கிரீம்களை பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். இந்த வியாபார மாயையில் நம் வீட்டு பிள்ளைகளும் எளிதாக விழுந்துவிடுகிறார்கள்.

மென்மையான தோலில் ஏற்படும் காயங்கள்

பெரியவர்களின் முதிர்ந்த தோலில் இருக்கும் சுருக்கங்களை நீக்கவும், இறந்த செல்களை அழிக்கவும் தான் ரெட்டினால் மற்றும் கிளைகோலி அமிலம், சாலிசிலி அமிலம் போன்ற வீரியமிக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரியவர்களின் தோல் தடிமனாக இருக்கும் என்பதால், அவர்களால் இந்த அமிலங்களின் வீரியத்தைத் தாங்க முடியும்.

ஆனால், பதின் பருவ பிள்ளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதன் இயற்கையான ஈரப்பதமும், தோலின் சமநிலையும் முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய மென்மையான தோலில், அடுத்தடுத்து இந்த அமிலங்களையும் சீரம்களையும் பூசும்போது, தோலின் மேல் இருக்கும் இயற்கையான பாதுகாப்பு படலம் முற்றிலும் அழிந்து போகிறது. இதனால், முகத்தில் கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, இறுதியில் ரசாயனங்களால் ஏற்படும் வேதித் தீக்காயங்கள் உருவாகின்றன. முகம் சிவந்து போய், தோல் உறிந்து, ஆறாத புண்களாக மாறிவிடுகிறது.

மனநலப் பாதிக்கும் அபாயம்

இந்த அழகு மோகம் உடலை மட்டுமல்லாமல், பதின் பருவப் பிள்ளைகளின் மனநலனையும் கடுமையாக பாதிக்கிறது. எப்போதும் தன் முகம் அழகாக இல்லை, மற்றவர்கள் நம்மை பற்றிக் கேலி செய்வார்களோ என்ற கவலை பிள்ளைகளை வாட்டுகிறது. இதனால், அவர்கள் தங்களின் நண்பர்களோடு சேர்ந்து வெளியே செல்லவும், நாலு பேரோடு பழகவும் தயங்குகிறார்கள். கண்ணாடி முன்னாடியே மணிக்கணக்கில் நின்று தங்களின் முகத்தை ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

இல்லாத ஒரு குறையை கற்பனை செய்து கொண்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த ஆபத்தை உணர்ந்த ஐரோப்பிய நாடுகள், பதின் பருவ பிள்ளைகளை குறிவைத்து தங்களின் அழகு சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது தற்பொழுது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கின. 12 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.

நாம் செய்ய வேண்டியது என்ன?

நம் பிள்ளைகளின் முக அழகை விட அவர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை பெற்றோர்களாகிய நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரணப் பதின் பருவப் பிள்ளைக்கு முகத்தை சுத்தமாக வைத்து கொள்ள மென்மையான சோப் அல்லது ஃபேஸ் வாஷ் மட்டுமே போதுமானது.

தோலின் ஈரப்பதத்தை தக்க வைக்க ஒரு எளிய மாய்ஸ்சரைசர் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு சன்ஸ்கிரீன் கிரீம் இருந்தால் போதும். இதை தாண்டி, முகத்தில் கடுமையான பருக்கள் போன்ற மருத்துவ பிரச்சனைகள் இருந்தால், தகுந்த சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டுமே தவிர, இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்து பொருட்களை வாங்க கூடாது. செயற்கையான பளபளப்பை விட, இயற்கையான ஆரோக்கியமே சிறந்தது என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் தான் புரிய வைக்க வேண்டும்.

ஆய்வு:

https://pubmed.ncbi.nlm.nih.gov/41793594/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC11345696/

இதையும் படிங்க:

தலைமுறை தாண்டும் மரபணு பாதிப்புகள்: சொந்த பந்த திருமணங்கள் தரும் ஆபத்து!

சுற்றுச்சூழல் மாசு: கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது ஏன்?