ETV Bharat / lifestyle

டீன்-ஏஜ் பிள்ளைகளிடையே பதற்றத்தை அதிகரிக்கும் சர்க்கரை உட்கொள்ளல்! இரண்டுக்கும் என்ன தொடர்பு?

2000 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஒன்பது முக்கிய ஆய்வுகளை தொகுத்து பார்த்ததில், ஏழு ஆய்வுகள் குளிர்பானங்களுக்கும் மனப்பதற்றத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : February 27, 2026 at 2:36 PM IST

3 Min Read
Choose ETV Bharat

பொதுவாக நம் வீடுகளில் பிள்ளைகள் சோர்வாக இருந்தால் அல்லது தேர்வுக்குப் படிக்க அமர்ந்தால், "ஒரு ஜூஸ் குடி, தெம்பு வரும்" என்று கொடுப்பது வழக்கம். அதேபோல், நண்பர்களுடன் வெளியில் சென்றால் குளிர்பானங்கள் குடிப்பது இன்றைய இளம் தலைமுறையினரின் அடையாளமாகவே மாறிவிட்டது.

ஆனால், இந்த 'இனிப்பு' அவர்கள் உடலில் தெம்பை கூட்டுவதற்கு பதில், மனதில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகள், பதின்ம வயதினரின் அதிகப்படியான சர்க்கரை பயன்பாட்டிற்கும், அவர்களின் மனநல பாதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறுகின்றன.

ஒரு பக்கம் உடல் பருமன், பல் சொத்தை எனப் பேசி வந்த நாம், இப்போது சர்க்கரை எப்படி ஒரு குழந்தையின் மன அமைதியை குலைக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சர்க்கரையும் பதற்றமும்: ஆய்வுகள் சொல்வது என்ன? பதின்ம வயதில் இருக்கும் ஐந்தில் ஒருவருக்கு 'ஆங்க்சைட்டி' (Anxiety) எனப்படும் பதற்றக் குறைபாடு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் சமூக வாழ்க்கை, பள்ளிப் படிப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.

2000 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஒன்பது முக்கிய ஆய்வுகளை தொகுத்துப் பார்த்ததில், ஏழு ஆய்வுகள் குளிர்பானங்களுக்கும் மனப்பதற்றத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளன. இந்த ஆய்வின்படி, அதிகப்படியான குளிர்பானங்களை அருந்தும் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு, மற்றவர்களை விட 34 சதவீதம் அதிகமாக மனப்பதற்ற நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எதிலெல்லாம் இந்த 'ஃப்ரீ சுகர்' (Free Sugar) ஒளிந்திருக்கிறது? நாம் உணவில் நேரடியாக சேர்க்கும் சர்க்கரை மட்டுமல்லாமல், தேன், சிரப்கள், பழச்சாறுகள் மற்றும் காய்கறிச் சாறுகளில் இயற்கையாகவே உள்ள சர்க்கரையை 'ஃப்ரீ சுகர்' என்கிறோம். உதாரணத்திற்கு,

  • சோடா மற்றும் கார்பனேட்டட் பானங்கள்
  • இனிப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகள்
  • சாக்லேட் மற்றும் இனிப்பு கலந்த பால் பானங்கள்
  • எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy Drinks)
  • திக சர்க்கரை கொண்ட டீ மற்றும் காபி

பிரிட்டன் நாட்டின் வழிகாட்டுதலின்படி, ஒரு நாளில் நாம் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரியில் சர்க்கரை 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், இன்றைய டீன்-ஏஜ் பிள்ளைகள் தங்களுக்குத் தேவையான மொத்த ஆற்றலில் 20 சதவீதம் வரை சர்க்கரை மூலமாகவே பெறுகிறார்கள். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட நான்கு மடங்கு அதிகம்.

இது எப்படி மனநிலையைப் பாதிக்கிறது? சர்க்கரைக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். இதற்குக் குடல்-மூளை அச்சு (Gut-Brain Axis) ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

நமது குடல் ஆரோக்கியத்திற்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் உட்கொள்ளும் அதிகப்படியான சர்க்கரை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையைச் சீர்குலைக்கலாம், இது மறைமுகமாக மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் தூண்டக்கூடும்.

இருப்பினும், இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய தொடர்புதான். அதாவது, குளிர்பானம் குடிப்பதால்தான் பதற்றம் வருகிறதா அல்லது ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் பிள்ளைகள் ஆறுதலுக்காக இனிப்பான பானங்களைத் தேடிப் போகிறார்களா என்பதை இன்னும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. குடும்ப வருமானம், கல்விச் சூழல் மற்றும் தூக்கமின்மை போன்றவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்? மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு 30 கிராம் (சுமார் 7 தேக்கரண்டி) சர்க்கரைக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், சந்தையில் விற்கப்படும் ஒரு சாதாரண குளிர்பான டின்னில் மட்டுமே சுமார் 35 கிராம் சர்க்கரை இருக்கிறது. அதாவது, ஒரே ஒரு குளிர்பானம் குடித்தாலே அன்றைய தினத்திற்கான சர்க்கரை அளவைத் தாண்டிவிடுகிறோம்.

என்ன தான் செய்வது? நமது அன்றாட வாழ்வில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பிள்ளைகளை இதிலிருந்து பாதுகாக்கலாம் என்கிறது ஆய்வுகள். அவற்றின் விவரம் பின்வருமாறு,

  • சோடாவுக்குப் பதில் எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா அல்லது பழத் துண்டுகள் சேர்த்த தண்ணீரை (Detox Water) பழகலாம்.
  • எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் பானங்கள் தூக்கத்தையும், படிப்பில் கவனத்தையும் சிதறடிக்கும். அதற்குப் பதில் குறைந்த அளவு காஃபின் கொண்ட சாதாரண டீ அல்லது காபி கொடுக்கலாம்.
  • செயற்கை சர்க்கரைக்குப் பதில் பழங்களை அப்படியே சாப்பிடப் பழகலாம்.
  • உணவகங்களுக்குச் செல்லும் போது 'சர்க்கரை இல்லாத' (Sugar-free) பானங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.