ETV Bharat / lifestyle

மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு: அறுவை சிகிச்சை இன்றி குருத்தெலும்பை வளர்க்கும் புதிய மருந்து!

விளையாட்டு வீரர்கள் அல்லது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் ACL போன்ற தசைநார் கிழிவுகள் பிற்காலத்தில் நிச்சயம் ஆர்த்திரிடிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : January 8, 2026 at 10:46 AM IST

3 Min Read
Choose ETV Bharat

இன்றைய காலகட்டத்தில், முப்பது வயதை கடந்தாலே பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் 'மூட்டு வலி'. படிக்கட்டுகளில் ஏறும்போதும், அமர்ந்து எழும்போதும் முழங்கால்களில் ஏற்படும் 'சடசட' என்ற சத்தம் மற்றும் கடுமையான வலி பலரது அன்றாட வாழ்க்கையை முடக்கி விடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், நம் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு (Cartilage) தேய்ந்து போவதாகும்.

ஒருமுறை சிதைந்த குருத்தெலும்பை மீண்டும் தானாக வளர்ப்பது என்பது இதுவரை மருத்துவ உலகில் சவாலாக இருந்தது. ஆனால், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு, இந்த சவாலை மாற்றியமைத்துள்ளது.

ஆர்த்திரிடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. இதில் 'ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ்' (Osteoarthritis) என்பது மிகவும் பொதுவானது. நமது மூட்டுகளில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று நேரடியாக உரசாமல் இருக்க இடையில் மென்மையான ரப்பர் போன்ற 'குருத்தெலும்பு' திசுக்கள் கவசமாக இருக்கும்.

வயது அதிகமாகும்போதோ அல்லது காயம் ஏற்படும்போதோ இந்தத் திசுக்கள் மெல்லியதாக மாறி தேய்ந்து விடுகின்றன. குருத்தெலும்பு தேய்ந்து போகும்போது, எலும்புகள் நேரடியாக ஒன்றோடு ஒன்று உரச ஆரம்பிக்கின்றன. இது கடுமையான வலி, வீக்கம் மற்றும் நடப்பதில் சிரமத்தை உண்டாக்குகிறது. இறுதியாக, இதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Joint Replacement Surgery) ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது.

புதிய கண்டுபிடிப்பு: ஸ்டான்போர்டு மருத்துவ குழுவினர் (Stanford Medicine Researchers) நடத்திய ஆய்வில், மூட்டு குருத்தெலும்பு ஏன் மீண்டும் வளர்வதில்லை என்பதற்கான ரகசியத்தை கண்டறிந்துள்ளனர். அவர்களின் ஆய்வின்படி, நமது உடலில் உள்ள 15-PGDH என்ற புரதம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த ஆய்வு Inhibition of 15-hydroxy prostaglandin dehydrogenase promotes cartilage regeneration என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

வயதாகும்போது, நமது மூட்டுகளில் 15-PGDH என்ற புரதத்தின் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இந்த புரதம், மூட்டுகளை பாதுகாக்கும் மற்றும் பழுதுபார்க்கும் புரோஸ்டாக்லாண்டின் E2 (PGE2) என்ற பொருளை சிதைக்கிறது. அதாவது, மூட்டு தானாக குணமாவதை இந்த புரதம் தடுத்து நிறுத்துகிறது.

ஆராய்ச்சியாளர்கள் 15-PGDH புரதத்தின் செயல்பாட்டை தடுக்கும் ஒரு மருந்தை உருவாக்கி, அதை வயதான எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்தனர். அதன் முடிவுகள் பல அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

எலிகளின் மூட்டுகளில் தேய்மானம் நின்று போனது மட்டுமின்றி, குருத்தெலும்புகள் மீண்டும் வளர தொடங்கியுள்ளது. மேலும், அந்த எலிகள் முன்பை விட மிக எளிதாக நகர தொடங்கின. தண்டுவட அணுக்கள் (Stem cells) அல்லது எந்த அறுவை சிகிச்சையும் இன்றி, பழைய குருத்தெலும்பு செல்கள் "மீண்டும் புத்துயிர் பெற்று" (Reawakened) இளமையான செல்களை போல செயல்பட தொடங்கின என்கிறது ஆய்வு.

மேலும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மனித மூட்டு திசுக்களிலும் இந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. வெறும் ஒரு வார காலத்தில், அந்த திசுக்களில் புதிய குருத்தெலும்பு உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

விளையாட்டு வீரர்கள் அல்லது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் ACL போன்ற தசைநார் கிழிவுகள் பிற்காலத்தில் நிச்சயம் ஆர்த்திரிடிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும். ஆனால், இந்த கண்டுபிடிப்பின் மற்றொரு சோதனையில், தசைநார் காயம் அடைந்த எலிகளுக்கு இந்த மருந்தைச் செலுத்தியபோது, அவற்றிற்கு ஆர்த்திரிடிஸ் நோய் வரவே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் தற்போது எபிரியம் பயோ (Epirium Bio) என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து ஏற்கனவே வயதானவர்களுக்கு ஏற்படும் தசை பலவீனத்திற்காக (Muscle weakness) முதல்கட்ட மருத்துவ சோதனையில் (Phase 1 Clinical Trials) உள்ளது. அதன் முடிவுகள் மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன.

அடுத்த கட்டமாக மூட்டு தேய்மானம் மற்றும் ஆர்த்திரிடிஸ் நோயாளிகளுக்கு இந்த மருந்தைச் செலுத்திச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.