வெண்புள்ளி பரம்பரை நோயா? வதந்திகளும் உண்மைகளும்!
வெண்புள்ளி சரும பாதிப்பு உள்ளவர்கள் தங்களின் தோற்றத்தால் கடுமையான மன உளைச்சல், சமூகப் பதற்றம், மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

Published : May 29, 2026 at 2:51 PM IST
உலகில் நம்மோடு வாழும் மனிதர்கள் சிலர்களுக்கு, உடலின் சில இடங்களில் சருமத்தின் நிறம் மங்கி, வெள்ளை திட்டுகளாக மாறுவதை பார்த்திருப்போம். இதை விட்டிலிகோ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. தமிழில் வெண்புள்ளி என அழைக்கின்றோம். இது நூறில் ஒருவருக்கு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான பாதிப்பு போல தெரிந்தாலும், இது உலகளவில் மிக சாதாரணமாக காணப்படும் ஒரு தோல் நிலைதான். ஆனால், இதைப் பற்றிய புரிதல் நம் சமூகத்தில் இன்னமும் முழுமையாகப் போய் சேரவில்லை என்பதுதான் உண்மை.
இதனால், இந்த பாதிப்பு உள்ளவர்கள் தினமும் பலரது பார்வைகளையும், தேவையில்லாத கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஏதோ ஒரு தொற்றுநோய் என்று நினைப்பது முற்றிலும் தவறு. இது நம் உடலுக்குள் நடக்கும் ஒரு எளிய உயிரியல் மாற்றம் மட்டுமே என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பாதிப்பைக் குறித்த சரியான அறிவியல் விழிப்புணர்வு நமக்கு ஏன் இன்று மிக அவசியம் என்றால், இது வெறுமனே தோலின் நிறம் மாறும் ஒரு உடல் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அதைவிடப் பெரிய அளவில் ஒரு மனிதனின் நிம்மதியையும், சுயமரியாதையையும், சமூகத்தில் அவருக்கான சம உரிமையையும் சிதைக்கும் ஒரு உளவியல் போராட்டமாக இருக்கிறது.
நாம் காட்டும் அறியாமையும், தயக்கமும் ஒரு சக மனிதனை அவனது சொந்த வாழ்விடத்திலேயே அந்நியப்படுத்தி விடுகிறது. இந்த நிலையை மாற்றி, அவர்களை நம்மில் ஒருவராக இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், முதலில் இந்த பாதிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை நாம் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உடலுக்குள் நடக்கும் உயிரியல் மாற்றம்
அறிவியல் பூர்வமாக பார்த்தால், நம் தோலின் நிறத்திற்கு மெலனின் என்ற நிறமிதான் காரணம். நம் தோலின் மேல் அடுக்கில் இருக்கும் சில குறிப்பிட்ட செல்கள் இந்த நிறமியை உருவாக்குகின்றன. விட்டிலிகோ பாதிப்பு உள்ளவர்களின் உடலில், அவசியமில்லாமல் அவர்களுடைய சொந்த நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக இந்த செல்களை உடலுக்கு ஆபத்தானது என்று நினைத்து அழித்துவிடுகிறது.
இப்படி நோய் எதிர்ப்பு சக்தி தனக்கு தானே எதிரியாக மாறுவதைத்தான் மருத்துவர்கள் ஆட்டோஇம்யூன் நிலை என்று சொல்கிறார்கள். இதனால், அந்த குறிப்பிட்ட இடங்களில் நிறமி இல்லாமல் போய், தோல் வெண்மையாக மாறுகிறது. இதற்கு பின்னால் குடும்பத்தில் யாருக்காவது இருக்கும் மரபணு காரணங்களோ அல்லது கடுமையான மன அழுத்தம், வெயிலின் தாக்கம் மற்றும் சில ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமை போன்ற சுற்றுச்சூழல் காரணங்களோ இருக்கலாம்.
பாதிப்பின் தன்மைகளும் அறிகுறிகளும்
இந்த பாதிப்பு எந்தவொரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ, வயதினருக்கோ அல்லது ஆணுக்கோ பெண்ணுக்கோ மட்டுமே வருவது கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கறுப்பு அல்லது மாநிறம் கொண்டவர்களுக்கு இது வெளியில் சற்று அதிகமாகத் தெரிகிறது, அவ்வளவுதான்.
உடலின் இருபுறமும் கைகள், கால்களில் சமமாகப் பரவுவது, அல்லது உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் தோன்றுவது என இதில் சில வகைகள் உண்டு. சிலருக்குப் புதிய திட்டுகள் தோன்றும் போது லேசான அரிப்போ அல்லது எரிச்சலோ இருக்கலாம். அதேபோல, நிறமி இல்லாததால் சூரிய வெளிச்சம் நேரடியாக படும்போது அந்த இடம் சற்று மென்மையாக உணரும்.
மற்றபடி, இது ஒருவருக்குள் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி சார்ந்த விஷயம் என்பதால், இவர்களுக்கு தைராய்டு அல்லது சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட சற்று கூடுதலாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதைக் கட்டுப்படுத்தவும், தோலின் நிறத்தை ஓரளவிற்கு சமன்படுத்தவும் இப்போது பல நவீன மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டன.
சமூகப் பார்வை
விஷயம் இவ்வளவுதான் என்றாலும், சமூகத்தில் இதைப் பற்றி இருக்கும் தவறான எண்ணங்கள் பலரை மனதளவில் காயப்படுத்துகின்றன. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தொழுநோய் போன்ற ஒரு நோய் என்றோ, அல்லது சுத்தமாக இல்லாததால் வருகிறது என்றோ பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற சர்வதேச மாடல் அழகி வின்னி ஹார்லோ தனக்கு இருக்கும் இந்த விட்டிலிகோ பாதிப்பைப் பற்றிப் பேசும்போது, தான் குழந்தையாக இருந்தபோது மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னோடு விளையாட விடவில்லை என்றும், அவளோடு பழகினால் அது உனக்கும் ஒட்டிக்கொள்ளும் என்று பயந்து ஓடியதாகவும், பள்ளிப் பருவத்தில் கடுமையான கேலிகளைச் சந்தித்ததாகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
மாற வேண்டிய சமூகப் பொறுப்பு
சமீபத்திய பல சமூக மற்றும் உளவியல் ஆய்வுகளின்படி, விட்டிலிகோ பாதிப்பு உள்ளவர்கள் தங்களின் தோற்றத்தால் கடுமையான மன உளைச்சல், சமூகப் பதற்றம், மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்புகளில் மறைமுகமாகப் புறக்கணிக்கப்படுவது, பொது இடங்களில் மக்கள் விசித்திரமாகப் பார்ப்பது, திருமண வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் எனப் பல சவால்களை அவர்கள் தினமும் கடக்க வேண்டியுள்ளது.
ஒரு மனிதனின் தகுதியும் அடையாளமும் அவனது தோலின் நிறத்தில் மட்டும் இல்லை. எனவே, விட்டிலிகோ என்பது தீண்டத்தகாத ஒன்றோ அல்ல, அது வெறும் ஒரு எளிய மருத்துவ நிலை மட்டுமே என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். சமூகமாக நாம் காட்டும் உண்மையான அன்பும், இயல்பான பார்வையும் மட்டுமே இவர்களின் வாழ்க்கையை இன்னும் நம்பிக்கையானதாக மாற்றும்.
ஆய்வு:
https://www.britishskinfoundation.org.uk/conditions/vitiligo
https://www.termedia.pl/Review-paper-Skin-melanocytes-biology-and-development,7,20287,0,1.html
https://link.springer.com/article/10.1007/s13555-025-01451-w

