10 நிமிட உடற்பயிற்சி: புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
குடல் புற்றுநோய் செல்கள் வளர்வதை உடற்பயிற்சியினால் உண்டாகும் ரத்த மாற்றங்கள் கட்டுப்படுத்துகின்றன.

Published : January 5, 2026 at 10:46 AM IST
இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் 'உடற்பயிற்சி செய்ய நேரமில்லை' என்பதுதான் பலருடைய பொதுவான புகாராக உள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு வெறும் 10 நிமிடம் செலவழித்தால், உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை உங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், இங்கிலாந்தின் புகழ்பெற்ற நியூகாஸில் பல்கலைக்கழக (Newcastle University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு ஒன்று, உடற்பயிற்சி குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வு கூறுவது என்ன? பொதுவாக உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கும், தசை வலிமைக்கும் நல்லது என்று நமக்கு தெரியும். ஆனால், குறுகிய நேர உடற்பயிற்சி கூட ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்களை மாற்றி, புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. குறிப்பாக, குடல் புற்றுநோய் (Bowel Cancer) செல்கள் வளர்வதை உடற்பயிற்சியினால் உண்டாகும் ரத்த மாற்றங்கள் கட்டுப்படுத்துகின்றன.
இந்த ஆய்விற்காக 30 தன்னார்வலர்கள் (அதிக உடல் எடை கொண்ட ஆண்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். உடற்பயிற்சிக்கு முன்னும், உடற்பயிற்சி செய்த உடனேயும் அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆராய்ச்சியாளர்கள் அந்த ரத்தத்தை ஆய்வு கூடத்தில் இருந்த புற்றுநோய் செல்களுடன் சேர்த்தபோது பின்வரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
- புரதங்களின் உயர்வு: உடற்பயிற்சிக்கு பின் ரத்தத்தில் 13 வகையான புரதங்கள் அதிகரித்தன. இவை உடலில் வீக்கத்தைக் (Inflammation) குறைக்கவும், ரத்த நாளங்களை சீராக இயக்கவும் உதவுகின்றன.
- மரபணு மாற்றம்: புற்றுநோய் செல்களில் உள்ள 1,364 மரபணுக்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
- வளர்ச்சித் தடை: உடற்பயிற்சியினால் உருவான இந்த மாற்றங்கள், புற்றுநோய் செல்கள் தங்களை சரிசெய்து கொள்வதைத் தடுத்து, அவை வேகமாக வளர்வதைக் கட்டுப்படுத்தின.
இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் சாம் ஆரஞ்சு கூறுகையில், "உடற்பயிற்சி என்பது வெறும் ஆரோக்கியமான திசுக்களுக்கு மட்டும் பலன் தருவதல்ல. அது ரத்தத்தின் மூலம் புற்றுநோய் செல்களுக்கே சவால் விடக்கூடிய வலிமையான சமிக்ஞைகளை அனுப்புகிறது. 10 நிமிட பயிற்சியே புற்றுநோய் செல்கள் வளர முடியாத ஒரு சூழலை உடலுக்குள் உருவாக்குகிறது," என்கிறார்.
எதிர்காலத்தில், உடற்பயிற்சி செய்ய முடியாத புற்றுநோயாளிகளுக்கு, உடற்பயிற்சியினால் கிடைக்கும் அதே நன்மைகளைத் தரும் மாத்திரைகள் அல்லது சிகிச்சைகளை உருவாக்க இந்த ஆய்வு ஒரு புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? புற்றுநோய் தொண்டு நிறுவனமான Bowel Cancer UK அமைப்பின் தலைமை அதிகாரி ஜெனிவீவ் எட்வர்ட்ஸ் கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்குகிறார்..
- வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி (வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல்) செய்வது அவசியம்.
- நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி, அதிகப்படியான சிவப்பு இறைச்சி, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- சரியான உடல் எடையைப் பராமரிப்பது புற்றுநோய் அபாயத்தை பெருமளவு குறைக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு சிறு அசைவும் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அரணாக அமையும். நமது அன்றாட வாழ்வில் ஒரு 10 நிமிட சுறுசுறுப்பான நடைப்பயிற்சியோ அல்லது சைக்கிள் ஓட்டுதலோ உங்களை புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து காப்பாற்றக்கூடும் என்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

