கஷ்டப்பட்டு குறைத்த எடை டக்குனு திரும்ப ஏறுதா? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம் இதோ!
நாம் எடையை குறைத்தாலும், கொழுப்பு செல்கள் தங்களின் பழைய நினைவை வைத்துக்கொண்டு விழிப்போடு காத்திருக்கின்றன.

Published : September 2, 2026 at 11:06 AM IST
நாம் எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்தில் உடலை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்போம். டயட் இருப்போம், நடைப்பயிற்சி செல்வோம். கொஞ்ச நாளில் கன்னம் ஒட்டிப்போகும், கையும் காலும்கூட மெலிதாகிவிடும். ஆனால், அந்த வயிற்று பகுதியில் இருக்கும் தொப்பை மட்டும் குறையவே குறையாது.
"எல்லா இடத்துலயும் சதை குறையுது, இங்க மட்டும் ஏன் நகர மாட்டேங்குது?" என்று கண்ணாடியை பார்த்து அலுத்து கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அதைவிட கொடுமை என்னவென்றால், கஷ்டப்பட்டு 5 கிலோவை குறைத்தால், கொஞ்சம் அசந்த நேரத்தில் 6 கிலோவாக வந்து சேர்ந்துவிடும்.
"நாம என்ன சாப்பிட்டோம், அதுக்குள்ள எப்படி எடை ஏறுச்சு?" என்ற இந்த கேள்விக்கான பதிலைத்தான் சமீபத்தில் வெளியான அறிவியல் ஆய்வு ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
நம்ம உடம்புக்குள் இருக்கும் ஒரு 'ரகசிய மெமரி'!
நமது உடலில் உள்ள கொழுப்பு செல்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறதாம். நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு எடையைக் குறைத்தாலும், "நாம் முன்பு எப்படி குண்டாக இருந்தோம்" என்ற நினைவை அந்த செல்கள் தங்களுக்குள்ளேயே ரகசியமாக சேமித்து வைத்துக்கொள்கின்றன.
அதாவது, மூளை விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது போல இது யோசித்து நினைவில் வைப்பதில்லை. நாம் குண்டாக இருந்த காலத்தில், நமது கொழுப்பு செல்களின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் நடக்கும். நாம் எடையை குறைத்து ஒல்லியான பிறகும் கூட, அந்த செல்களின் பழைய மாற்றங்கள் அழியாமல் அப்படியே தங்கிவிடுகின்றன. இதைத்தான் ஆராய்ச்சியாளர்கள் 'கொழுப்பு செல்களின் நினைவாற்றல்' என்று கூறுகிறார்கள்.
எடை திரும்பவும் வேகமா ஏறுவது ஏன்?
எடையை குறைத்த எலிகளை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிந்தது. எடையை குறைத்த எலிகளுக்கு மீண்டும் கொழுப்பு சத்து உள்ள உணவை கொடுத்தபோது, அவை முன்பு எடையை குறைக்காத எலிகளை விட மிக வேகமாக மீண்டும் குண்டாகின.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,
- நாம் எடையை குறைத்தாலும், கொழுப்பு செல்கள் தங்களின் பழைய நினைவை வைத்துக்கொண்டு விழிப்போடு காத்திருக்கின்றன.
- நாம் எப்போதாவது கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும், "அப்பாடா உணவு கிடைத்துவிட்டது" என்று அந்த செல்கள் உணவில் இருக்கும் ஆற்றலை உடனே கொழுப்பாக மாற்றி சேமிக்க தொடங்கிவிடுகின்றன.
- இதனால்தான் எடையை குறைப்பதை விட, குறைந்த எடையை அப்படியே தக்கவைத்து கொள்வது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
அப்போ தொப்பை கொழுப்புக்கு மட்டும் தனி நினைவாற்றல் இருக்கா?
அப்படி இல்லை. வயிற்று பகுதியில் மட்டும் கொழுப்பு சேர்வதற்கும், அது தாமதமாக குறைவதற்கும் நமது பரம்பரை தன்மை, ஹார்மோன் மாற்றங்கள், நமது வயது மற்றும் அன்றாட வாழ்க்கை முறை என பல காரணங்கள் இருக்கின்றன.
வயிற்றில் தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு ஒருவகை என்றால், உடலின் உள் உறுப்புகளை சுற்றி இருக்கும் கொழுப்பு மற்றொரு வகை. இவை ஒவ்வொன்றும் கரைய கண்டிப்பான கால அவகாசம் தேவைப்படும். எனவே, வயிற்று பகுதி கொழுப்பு மட்டும் தனியாக எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை.
இனி நாம் என்ன செய்ய வேண்டும்?
"என் கொழுப்பு செல்களே எடையை நினைவில் வைத்திருக்கிறதே, அப்புறம் நான் ஏன் கஷ்டப்பட்டு எடையைக் குறைக்க வேண்டும்?" என்று சோர்ந்துபோக தேவையில்லை.
- உடல் பருமன் என்பது ஏதோ நம் சோம்பேறித்தனத்தால் மட்டும் வருவதில்லை. அது உடலின் செல்லுலார் அளவில் நடக்கும் ஒரு இயல்பான போராட்டம் என்பதை இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.
- எடையைக் குறைப்பது ஒரு நாள் அல்லது ஒரு மாதப் பயணம் அல்ல.
- சத்தான வீட்டு உணவு, தினமும் சுறுசுறுப்பான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றை நமது வாழ்க்கைமுறையாகவே மாற்றிக்கொள்ள வேண்டும்.
- எதிர்காலத்தில் இந்த செல்களின் 'பழைய நினைவை' அழிக்கும் மருந்துகளை அறிவியல் கண்டுபிடிக்கக்கூடும். அதுவரை, எடையைக் குறைத்த பிறகும் தொடர்ந்து ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதுதான் எடையை மீண்டும் ஏறவிடாமல் தடுக்கும் ஒரே வழி என்கிறது இந்த ஆய்வு.
ஆய்வு:
https://www.nature.com/articles/s41586-024-08165-7
https://www.birmingham.ac.uk/news/2026/obesity-leaves-a-lasting-memory-in-immune-cells

