மழைக்கால நோய்களும் குடல் ஆரோக்கியமும்: நாம் செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்!
மழைக்காலம் முடியும் வரை சாலையோர கடைகளில் விற்கப்படும் திறந்தவெளி உணவுகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பச்சை காய்கறி சாலடுகள் மற்றும் சாட் வகைகளை தவிர்ப்பது நல்லது.

Published : July 7, 2026 at 10:48 AM IST
கோடையின் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் ஆவலோடு எதிர்பார்த்த மழைக்காலம் ஒருவழியாக வந்துவிட்டது. குளிர்ந்த காற்றும், மண் வாசனையும் நம் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதோ, அதே அளவுக்கு இந்த சமயத்தில் நம் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகிறது. ஏனென்றால், மழைக்காலம் தொடங்கிவிட்டாலே மருத்துவமனைகளில் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை சட்டென்று உயர்ந்துவிடுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, மற்றும் அஜீரணம் போன்ற தொல்லைகள் இந்த சமயத்தில் பலரையும் வாட்டி வதைக்கின்றன. காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதமும், ஆங்காங்கே தேங்கும் தண்ணீரும் கிருமிகள் பெருகுவதற்கு மிக சாதகமான சூழலை உருவாக்கிவிடுகின்றன. இந்த சூழலில், நம்மை அறியாமல் நாம் செய்யும் சில சின்ன சின்ன அலட்சியங்கள் தான், பெரிய அளவில் வயிற்று உபாதைகளை ஏற்படுத்திவிடுகின்றன.
ஏன் மழைக்காலத்தில் வயிற்றுப் பிரச்சனைகள் அதிகமாகின்றன?
மழைக்காலத்தில் நம்மை சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் சில மாற்றங்கள் தான் நோய்த்தொற்றுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. தொடர் மழையினால் நிலத்தடி நீர்நிலைகளிலும், குடிநீர் விநியோக குழாய்களிலும் கழிவுநீர் கலப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்த அசுத்தமான தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது, அது உடனே வயிற்று போக்கை உண்டாக்கிவிடுகிறது.
அடுத்ததாக, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, உணவுகள் மிக விரைவாக கெட்டுப் போகின்றன. திறந்தவெளியில் வைக்கப்படும் உணவுகள், சரியாகப் பராமரிக்கப்படாத கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் போன்றவற்றில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மிக வேகமாகத் தொற்றிக் கொள்கின்றன. குறிப்பாக, நகர்ப்புறங்களில் தேங்கி நிற்கும் மழைநீரும், தேங்கும் குப்பைகளும் கிருமிகள் பரவுவதை மேலும் தீவிரமாக்குகின்றன.
அறிகுறிகள் என்னென்ன?
வயிற்று தொற்று ஏற்படும் போது, நம் உடல் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் வாந்தி வருவது போன்ற உணர்வு, அடிவயிற்றில் கடுமையான பிடிப்பு அல்லது சுளுக்கு போன்ற வலி, லேசானது முதல் கடுமையான காய்ச்சல், வயிறு உப்பி இருப்பது போன்ற உணர்வு மற்றும் உடல் சோர்வு போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
தொடர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, நாக்கு வறண்டு போகலாம். இந்த அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, காய்ச்சல் மிக அதிகமாக இருந்தாலோ அல்லது மலத்தில் ரத்தம் கலந்து சென்றாலோ, சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக மிக அவசியமாகும். குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பாதிப்புகளில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்
மழைக்கால நோய்களில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்ள சில எளிய, நடைமுறைப் பழக்கங்களை நம் அன்றாட வாழ்க்கையில் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்:
- சுத்தமான குடிநீர்: மழைக்காலத்தில் குடிநீரே நோய்களின் பிறப்பிடமாக மாறுகிறது. எனவே, தண்ணீரை எப்போதும் நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து மட்டுமே குடிக்க வேண்டும். வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்தே தண்ணீரை எடுத்து செல்வது நல்லது. பொது இடங்களில் இருக்கும் தண்ணீரை தவிர்ப்பது சிறந்தது.
- கை சுத்தம்: சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும், வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்த உடனும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். கைகளின் மூலமாகவே பெரும்பாலான கிருமிகள் நம் வயிற்றுக்குள் நுழைகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- சாலையோர உணவுகள்: மழைக்காலம் முடியும் வரை சாலையோர கடைகளில் விற்கப்படும் திறந்தவெளி உணவுகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறி சாலடுகள் மற்றும் சாட் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. ஈக்கள் மொய்க்கும் உணவுகள் தொற்றை எளிதாகக் பரப்பிவிடும்.
- காய்கறி, பழங்கள்: சந்தையில் இருந்து வாங்கி வரும் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சமைப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ முன்பு, ஓடும் நல்ல தண்ணீரில் பலமுறை நன்றாகக் கழுவ வேண்டும். முடிந்தவரை பழங்களின் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவது பாதுகாப்பானது.
- சூடான உணவுகள்: உணவை சமைத்த சில மணி நேரங்களிலேயே சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். நீண்ட நேரம் வெளியில் வைக்கப்பட்ட உணவுகளையோ அல்லது முந்தைய நாள் மீந்துபோன உணவுகளையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஈரப்பதம் நிறைந்த வானிலையில் உணவுகள் சீக்கிரம் கெட்டுவிடும்.
- உணவை சேமித்தல்: பால், முட்டை, இறைச்சி போன்ற விரைவில் கெட்டுப் போகும் உணவுப் பொருட்களை முறையாகப் பிரிட்ஜில் வைத்துப் பராமரிக்க வேண்டும். மின்சாரத் தடை ஏற்படும் சமயங்களில், பிரிட்ஜில் இருக்கும் உணவுகள் கெடாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டுப் பயன்படுத்தவும்.
- உடல் ஆரோக்கியம்: நம் குடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நோய்களை எதிர்க்க முடியும். எனவே, எளிதில் செரிமானமாகும் உணவுகள், தயிர், மோர் போன்ற புரோபயாடிக் உணவுகள் மற்றும் சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் போதிய அளவு தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்தோடு வைத்திருக்க வேண்டும்.
ஆய்வு:

