ETV Bharat / lifestyle

கட்டி பெருங்காயத்தை வீட்டிலேயே பொடி செய்வது எப்படி? இனி கடையில் வாங்கவே மாட்டீங்க!

பெருங்காயத்தை வறுக்கும்போது கருகிவிட்டால் அதன் மருத்துவ குணம் போய் கசப்புத்தன்மை வந்துவிடும். எப்போதும் மிதமான தீயிலேயே வறுக்க வேண்டும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : August 31, 2026 at 1:28 PM IST

3 Min Read
Choose ETV Bharat

நமது வீட்டில் ரசம் கொதிக்கும்போதும், மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போதும் எழும் அந்த வாசனைக்கு காரணம் பெருங்காயம்தான். சமையலுக்கு மட்டுமல்ல, வயிறு மந்தமாகவோ அல்லது செரிமான கோளாறோ ஏற்பட்டால் உடனே வெந்நீரில் கொஞ்சமாக பெருங்காயத்தூளை தூவி கலக்கி குடி என்று பாட்டி சொல்வதை கேட்டிருப்போம்.

அந்த அளவிற்கு பெருங்காயத்திற்கும் நமது சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய பிணைப்பு உண்டு. முன்னெல்லாம் வீடுகளில் கட்டி பெருங்காயத்தை வாங்கி உரலில் இடித்துத்தான் இட்லிப் பொடி முதல் அனைத்து சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். ஆனால், காலப்போக்கில் அந்த வேலைகளை எல்லாம் சுலபமாக்கி கொள்ள நாம் கடைகளில் விற்கும் பெருங்காயத்தூளை வாங்க தொடங்கினோம்.

ஆனால் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எவரெஸ்ட் (Everest) மற்றும் எல்.ஜி (LG) நிறுவனங்களின் பெருங்காயத்தூளில் தரம் குறைபாடு மற்றும் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவற்றிற்கு உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்தது.

அடடே! நாம் இத்தனை நாட்களாக அசால்ட்டாக வாங்கிப் பயன்படுத்திய பெருங்காய பொடியில் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறதா என்று யோசிக்க வைத்தது அல்லவா? உண்மையில் கடைகளில் விற்கும் தூள் பெருங்காயத்தில் மணத்திற்காக மட்டுமே கொஞ்சம் பெருங்காயம் சேர்க்கப்பட்டு, பாக்கி முழுவதும் ஜவ்வரிசி மாவு அல்லது கோதுமை மாவே நிரப்பப்படுகிறது.

சரி, இப்போது இதற்கு என்னதான் தீர்வு? சுத்தமான மணத்துடனும் மருத்துவ குணத்துடனும் இருக்கும் கட்டி பெருங்காயத்தை நாமே வீட்டிலேயே வாங்கி, பக்குவமாக பொடி செய்து சேமிப்பதுதான் ஒரே வழி. அதை எப்படி சுலபமாக செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்!

கட்டி பெருங்காயத்தை பொடி செய்வது எப்படி?

கடைகளில் கட்டி பெருங்காயம் இரண்டு வகையாக கிடைக்கும். ஒன்று நல்ல பாறை போலக் கடினமாக இருக்கும். இன்னொன்று சற்று பிசுபிசுப்பாக, சவ்வு போல நெகிழும் தன்மையோடு இருக்கும். இந்த இரண்டையுமே மிக சுலபமாகப் பொடி செய்துவிடலாம்.

கடினமான கட்டி பெருங்காயம்

  • கல் போல கடினமாக இருக்கும் பெருங்காயத்தை ஒரு துணியில் சுற்றி, சுத்தியல் அல்லது உரல் கல்லை வைத்து சிறிய சுண்டக்காய் அளவிற்கு தட்டி உடைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு வாணலியில் அரை ஸ்பூன் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சூடானதும், இந்த துண்டுகளை போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். பெருங்காயம் எண்ணெயில் நன்றாக பொரிந்து, உப்பி, லேசான பொன்னிறத்திற்கு வரும் வரை வறுக்க வேண்டும்.
  • பொரிந்த துண்டுகளை ஒரு தட்டில் கொட்டி முழுமையாக ஆறவிட வேண்டும். சூடு ஆறினால்தான் அரைக்கும்போது பிசுபிசுப்பு இல்லாமல் நல்ல தூளாக வரும்.
  • முழுமையாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி உப்பு சேர்ப்பதால் பெருங்காயம் மிக்ஸி ஜாரில் ஒட்டாமல் நைஸாக அரைபடும்.

சவ்வு போன்ற பெருங்காயம்

  • சற்று ஈரப்பதத்துடன் சவ்வு போல நெகிழும் பெருங்காயத்தை, கைகளில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவிக்கொண்டு, சிறு சிறு பட்டாணி அளவிலான துண்டுகளாகப் பிய்த்து உருட்டிக்கொள்ள வேண்டும்.
  • இந்த சிறு உருண்டைகளை ஒரு தட்டில் தனித்தனியாகப் பரப்பி, நல்ல வெயிலில் 2 முதல் 3 நாட்கள் வரை காயவைக்க வேண்டும். பெருங்காயத்தில் உள்ள ஈரம் முழுவதும் வற்றி, கையில் எடுத்துத் தட்டினால் "டங்" என்று சத்தம் வரும் அளவிற்கு நன்றாக காய வேண்டும்.
  • வெயிலில் நன்றாக காய்ந்த உருண்டைகளை வெறுமனே வாணலியில் போட்டு மிதமான தீயில் 1 அல்லது 2 நிமிடங்கள் லேசாக சூடேற்றி எடுத்து ஆறவைக்கவும்.
  • முழுமையாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் கமகமக்கும் நைஸான பெருங்காயப் பொடி தயார்!

மணமும் குணமும் மாறாமல் இருக்க சில டிப்ஸ்

ஈரமில்லாத சேமிப்பு: அரைத்த பெருங்காயத்தூளின் சூடு நன்றாக ஆறின பிறகு, ஒரு சுத்தமான, ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். பிளாஸ்டிக் டப்பாக்களை தவிர்த்தால் நீண்ட நாட்களுக்கு மணம் மாறாமல் அப்படியே இருக்கும்.

மிக்ஸி ஜார் சுத்தம்: பெருங்காயத்தை அரைத்த பிறகு மிக்ஸி ஜாரில் வாசம் அல்லது பிசுபிசுப்பு அப்படியே இருக்கும். அதைப்போக்க சிறிதளவு கல்லுப்பு போட்டு மிக்ஸியை ஒரு சுற்று சுற்றி துடைத்தால் ஜார் பளிச்சென்று சுத்தமாகிவிடும்.

அளவோடு வறுப்பது அவசியம்: பெருங்காயத்தை எண்ணெயிலோ அல்லது வெறுமனேயோ வறுக்கும்போது தீ அதிகமாகிப் புகையக் கூடாது. கருகிவிட்டால் பெருங்காயத்தின் மருத்துவ குணமும் போய் கசப்புத்தன்மையும் வந்துவிடும். எப்போதும் மிதமான தீயிலேயே வறுக்க வேண்டும்.

வீட்டிலேயே நாமே தயாரிக்கும் இந்த பெருங்காயத்தூள் 100% சுத்தமானது. அதனால் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அளவில் பாதியளவு போட்டாலே சமையல் மணமுறுக்கும், உடலுக்கும் எந்த கெடுதலும் வராது!

இதையும் படிங்க:

ஃப்ரீசரில் ஐஸ் கட்டியா? எளிதாக நீக்க 2 சிம்பிள் டிப்ஸ்!

ஃப்ரிட்ஜை இப்படி பயன்படுத்தினால் 'கரண்ட் பில்' குறையும் - மெக்கானிக் சொல்லும் சூப்பர் ஐடியா!