ETV Bharat / lifestyle

ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சீரழிகிறதா இளைஞர்களின் ஆரோக்கியம்? 'தி லான்செட்' ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!

அதிகப்படியான ஆன்லைன் பயன்பாடு மன அழுத்தம், பதற்றம் மற்றும் கவனச்சிதறல் போன்ற பொதுவான மனநலப் பிரச்சனைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : October 5, 2026 at 4:16 PM IST

3 Min Read
Choose ETV Bharat

இன்றைய சூழலில் நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனும் அதில் நாம் பார்க்கும் செயலிகளும்தான் நமது பெரும்பாலான நேரத்தை தீர்மானிக்கின்றன. நள்ளிரவு தாண்டியும் மொபைல் திரையை பார்த்துக்கொண்டே இருப்பது, தூக்கத்தை கெடுத்து கொள்வது, எந்த நேரமும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்களில் மூழ்கி இருப்பது போன்றவை இன்றைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் இயல்பு வாழ்க்கையாகவே மாறிவிட்டன.

"சும்மா நேரத்தை போக்கத்தானே பார்க்கிறார்கள், இதில் என்ன பெரிய ஆபத்து வந்துவிட போகிறது?" என்று நாம் இதை கடந்துபோய்விட முடியாது. ஏனெனில், புகழ்பெற்ற 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழில் 13 உலகளாவிய நிபுணர்கள் இணைந்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, நமது டிஜிட்டல் பழக்கவழக்கங்கள் இளைஞர்களின் மனநலனையும் உடல்நலனையும் எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.

சர்வதேச அளவிலான ஆய்வுகள், சர்வதேச மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளுடன், டிஜிட்டல் ஊடகங்கள் இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கவனத்தை கவர வடிவமைக்கப்படும் செயலிகள்

இன்றைய சோஷியல் மீடியா தளங்களும் செயலிகளும் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படவில்லை, மாறாக அவர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து, நேரத்தையும் தரவுகளையும் (Data) சேகரிப்பதற்காகவே திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன.

இது குறித்து பேசும் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மேஷன்ஸ் ஃபார் ஹெல்த் லேப் (DTH-Lab) தலைவர் பேராசிரியர் இலோனா கிக்புஷ், "குழந்தை பருவம் மற்றும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையோடு டிஜிட்டல் ஊடகங்கள் பிரித்துப்பார்க்க முடியாதபடி பிணைந்துவிட்டன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான விதிகளை தாங்களே அமைத்து கொள்ள அரசுகள் விட்டுவிட்டன. இதன் விளைவாக, இளைஞர்களின் ஆரோக்கியத்தை பற்றி எந்த கவலையும் படாமல், அவர்களின் கவனத்தை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு பல வணிக மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிடுகிறார்.

மேலும், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜெய் ஷா இது குறித்து கூறும்போது, "ஸ்க்ரோல் செய்துகொண்டே இருந்தால் வீடியோக்கள் வந்துகொண்டே இருக்கும் 'இன்ஃபினிட் ஸ்க்ரோல்' (Infinite scroll), அடுத்தடுத்த வீடியோக்கள் தானாக ஓடும் 'ஆட்டோப்ளே' (Autoplay) மற்றும் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடியோக்களைப் பரிந்துரைக்கும் அம்சங்கள் அனைத்துமே நிறுவனங்களால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வடிவமைப்பு தேர்வுகள்.

இது தனிநபரின் சுயக்கட்டுப்பாடு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இந்த குறிப்பிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மக்களின் பயன்பாட்டு முறையை எப்படி மாற்றுகின்றன என்பதை நாம் தீவிரமாக ஆராய வேண்டும்" என்கிறார்.

90 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வும் ஆரோக்கியப் பாதிப்புகளும்

'தி லான்செட்' இதழுக்காக 25 வயதிற்குட்பட்ட 90 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி 121 வெவ்வேறு ஆய்வுகளின் தொகுப்பு ஆராயப்பட்டது. இதில், அளவுக்கு அதிகமான அல்லது போதை போன்ற டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு இளைஞர்களின் ஆரோக்கியத்தில் தொடர்ச்சியான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • மனநலப் பாதிப்புகள்: அதிகப்படியான ஆன்லைன் பயன்பாடு மன அழுத்தம், பதற்றம் மற்றும் கவனச்சிதறல் போன்ற பொதுவான மனநலப் பிரச்சனைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
  • தூக்கமின்மை மற்றும் உடல் உழைப்பின்மை: நள்ளிரவு வரை மொபைல் பார்ப்பதால் தூக்கம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற விளையாட்டு போன்ற உடலியக்கங்கள் கணிசமாக குறைகின்றன.
  • ஆண்டிற்கு லட்சக்கணக்கான ஆரோக்கிய ஆண்டுகள் இழப்பு: உலகளவில் தினசரி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக திரையைப் பார்ப்பதால், மன அழுத்தத்தால் தோராயமாக 28 லட்சம் ஆரோக்கியமான வாழ்நாட்களும், உடல் பருமனால் (Obesity) 2 லட்சத்து 40 ஆயிரம் ஆரோக்கியமான வாழ்நாட்களும் இழக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

அதேவேளையில், அளவான டிஜிட்டல் பயன்பாடும், உடலியக்கத்தை ஊக்குவிக்கும் வீடியோ கேம்களும் சில இடங்களில் மனநலனுக்கும் சுறுசுறுப்பிற்கும் நேர்மறையான பலன்களை தருவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கட்டுப்பாடுகளும் உலக நாடுகளின் பொறுப்பும்

புகையிலை மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் எவ்வாறு தங்கள் பொருட்களின் தீமைகளை மறைக்க முயன்றனவோ, அதேபோன்ற உத்திகளையே பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன என்று ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் பார்பரா பிரைன்சாக் எச்சரிக்கிறார்.

அவர் கூறும்போது, "தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக வரும் விமர்சனங்களை பொய்யாக்க முயல்கின்றன. அரசின் கட்டுப்பாடுகளை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக சித்தரிக்கின்றன. ஆனால், முறையான அரசுக் கட்டுப்பாடுகள் என்பது புதுமைக்கு எதிரானதல்ல, அது பாதுகாப்பான தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு காரணியாகும்" என்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த இளம் நிபுணரான டாக்டர் சல்மான் ஃபித்ரத் கான் இது குறித்துக் கூறும்போது, "டிஜிட்டல் அமைப்புகளால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்களை தடுக்க முடியும். அரசுகள் கட்டுப்பாடுகளை கொண்டுவர 'பூரணமான' ஆதாரங்கள் வரும் வரை காத்திருக்கக் கூடாது. இளைஞர்களையும் உள்ளடக்கிப் பாதுகாப்பான ஆன்லைன் உலகை உருவாக்க இப்பொழுதே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்.

தீர்வு என்ன?

வயதுக் கட்டுப்பாடு போன்ற தனித்தனி தற்காலிக நடவடிக்கைகள் மட்டும் இந்த சிக்கலுக்கு முழுமையான தீர்வாகாது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன:

  • தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்தவொரு புதிய செயலி அல்லது அம்சத்தை வெளியிடுவதற்கு முன்பும், அது பயனர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை சோதிக்க வேண்டும்.
  • செயலிகள் மக்களின் ஆரோக்கியத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த தரவுகளை பொதுநல ஆராய்ச்சியாளர்களுடன் நிறுவனங்கள் சட்டப்பூர்வமாகப் பகிர வேண்டும்.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) மூலம் சர்வதேச அளவிலான கட்டுப்பாட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒரு நாட்டில் இருக்கும் சட்டப் பலவீனத்தைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தப்பிப்பதை தடுக்க முடியும்.
  • நிறுவனங்களை கேள்வி கேட்கவும், அவர்களின் உள்நாட்டுப் ஆவணங்களை வெளியே கொண்டு வரவும் சட்டப் போராட்டங்கள் ஒரு சிறந்த வழியாக உருவெடுத்து வருகின்றன.

ஆய்வு:

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(26)01292-4/abstract

இதையும் படிங்க:

மனநிலைக்கும் வால்நட்ஸிற்கும் என்ன தொடர்பு? தினமும் 1 கைப்பிடி சாப்பிட சொல்லும் புதிய ஆய்வு!

பிரபல நிறுவன சீரக தூளில் பூச்சிக்கொல்லி? உங்கள் வீட்டில் இந்த பாக்கெட் இருக்கானு செக் பண்ணுங்க!