ETV Bharat / lifestyle

நூல் இழைகளில் நுட்பம்: இந்திய காலநிலையை வெல்லும் புடவை மரபு!

ஆடை வடிவமைப்பு என்பது ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து அழகிற்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல, அது மனிதன் வாழும் நிலப்பரப்பை சார்ந்தது என்பதை நம் நாட்டு நெசவாளர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By Kasmin Fernandes

Published : June 30, 2026 at 3:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

வைகாசி, ஆனி மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும் போது, நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பட்டு புடவைகளையோ அல்லது நைலான், பாலியஸ்டர் போன்ற துணிகளையோ ஒதுக்கி வைத்துவிடுவார்கள். எவ்வளவு பெரிய விசேஷமாக இருந்தாலும் சரி, நல்ல இளவட்ட காட்டன் புடவையோ அல்லது மெல்லிய கைத்தறி புடவையோதான் அவர்களின் முதல் தேர்வாக இருக்கும்.

"இந்த வெயிலுக்கு இதுதான்பா உடம்புக்கு நல்லது, காத்தோட்டமா இருக்கும்" என்று அவர்கள் சொல்வதை நாம் அன்றாடம் கேட்டு வளர்ந்திருப்போம். நாம் என்ன நினைப்போம்? இதெல்லாம் பாட்டியின் பழைய காலத்து பழக்கம் என்று சாதாரணமாக நினைப்போம். ஆனால், உண்மையில் அதன் பின்னணியில் ஒரு மாபெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

இன்றைய நவீன உலகில், வெயிலை தாங்கும் ஆடைகளை உருவாக்க பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, புதுப்புது துணிகளை கண்டுபிடித்து வருகின்றன. இதற்கு 'சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்' (Climate-Tech) என்றும் பெயரிடுகிறார்கள். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் நாட்டின் தட்பவெப்ப நிலையை உணர்ந்து, அதற்கேற்ற ஆடைகளை நம் முன்னோர்கள் வடிவமைத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் புடவை. இப்படியிருக்க, வெயிலும் நம் வாழ்வியலும் எப்படி ஆடைகளோடு பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.

காலநிலையை உணர்ந்து நெய்யப்பட்ட ஆடைகள்

ஆடை வடிவமைப்பு என்பது ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து அழகிற்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல, அது மனிதன் வாழும் நிலப்பரப்பை சார்ந்தது என்பதை நம் நாட்டு நெசவாளர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். இந்தியன் சில்க் ஹவுஸ் ஏஜென்சியின் முதன்மை செயல் அதிகாரி தர்ஷன் துதோரியா இது குறித்து பேசும்போது, நாம் இன்று பாரம்பரியம் என்று பெருமையாக பேசும் பெங்கால் காட்டன், கோட்டா டோரியா, சந்தேரி புடவைகளுக்கு பின்னால் இருக்கும் நிஜமான காரணம் அழகு அல்ல, அது அந்தந்த மக்களின் வாழ்வாதார தேவை என்கிறார்.

உதாரணமாக, மேற்கு வங்காளத்தில் கோடைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். வியர்வை கொட்டும். அந்த சூழலை தாங்குவதற்காகவே அங்கு 'நெய்யப்பட்ட காற்று' என்று அழைக்கப்படும் அளவுக்கு மிக மெல்லிய மஸ்லின் துணிகள் நெய்யப்பட்டன. ஒரு முழுப் புடவையையும் ஒரு மோதிரத்திற்குள் நுழைத்து எடுத்துவிடலாம் என்பார்கள்.

அந்த நிலப்பரப்பின் வானிலைக்கு அது தேவையாக இருந்தது. அதேபோல், ராஜஸ்தானின் சுட்டெரிக்கும் பாலைவன வெப்பத்தை சமாளிக்கக் 'கோட்டா டோரியா' புடவைகள் பயன்பட்டன. ஆடம்பரம், அழகு என்பதெல்லாம் அடுத்தபடியாகத்தான் வந்தன. முதலில் மனிதன் அந்தந்த ஊர் வெயிலில் உடல் உபாதைகள் இல்லாமல் வாழ என்ன ஆடை தேவையோ, அதைத்தான் நெசவாளர்கள் உருவாக்கினார்கள்.

அலமாரியே அன்றைய ஏசி (AC)

இன்றைக்கு வெயில் அடித்தால் உடனே நாம் ஏசி ரிமோட்டைத் தேடுகிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களின் உடைகளை கட்டுப்படுத்தும் ஏசியாக அவர்களின் அலமாரிகளே இருந்தன என்று தர்ஷன் துதோரியா குறிப்பிடுகிறார். அக்காலத்தில் வேறு எந்த வசதியும் கிடையாது. நீங்கள் உடுத்தும் ஆடைதான் உடலின் வெப்பநிலையை தீர்மானித்தது.

ஒரு பெண் மதிய வெயிலில் நிம்மதியாக வேலை செய்ய போகிறாளா அல்லது புழுக்கத்தில் அவதிப்பட போகிறாளா என்பதை அவள் உடுத்தும் துணியின் இழை, நெசவின் அடர்த்தி மற்றும் புடவையின் எடைதான் முடிவு செய்தன. தமிழ்நாட்டின் செட்டிநாடு பருத்திப் புடவைகள் முதல் வடநாட்டின் சந்தேரி புடவைகள் வரை அனைத்துமே பெண்களின் அன்றாட வேலைகளுக்கு இடையூறு இல்லாதவாறும், அதே சமயம் உடலை குளிர்ச்சியாக வைக்கும் விதமாகவும் கணக்குப்போட்டு நெய்யப்பட்டவை.

தோல் அறியும் ஆடை அறிவியல்

இன்றைக்கு புடவை கடைகளுக்கு செல்லும் பெண்கள் யாரும் நெசவு வரலாற்றைப் படித்துவிட்டு துணிகளை தேர்ந்தெடுப்பதில்லை. சித்திரை, வைகாசி மாதம் வந்துவிட்டாலே கடைகளில் காட்டன், லினன் புடவைகளின் விற்பனை தானாகவே அதிகரித்துவிடுகிறது. பெண்கள் தங்களின் தோலுக்கு எது இதமாக இருக்கும், எந்த துணி வியர்வையை உறிஞ்சும் என்பதை தங்களின் அன்றாட அனுபவத்தின் மூலம் உணர்ந்து, அதை தேடி வாங்குகிறார்கள்.

தலைமுறைகள் மாறினாலும், துணியின் பின்னால் இருக்கும் தொழில்நுட்பத்தை மக்கள் மறந்தாலும், உடலுக்கு அது தரும் சுகத்தை யாரும் மறப்பதில்லை. நவீன ஃபேஷன் உலகம் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு புதிய ஆடையை அறிமுகப்படுத்தி, பழையதை அப்புறப்படுத்துகிறது. ஆனால், நம் நாட்டு பாரம்பரிய கைத்தறிப் புடவை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக உருவாக்கப்படுவது அல்ல, அது ஒரு ஆயுள் காலத்து ஆடை.

முப்பது வருடங்கள் ஆனாலும் அந்தப் புடவையை தையல் செய்து, பார்டர்களை மாற்றி, தாயிடம் இருந்து மகளுக்கும், மகளிடம் இருந்து பேத்திக்கும் அன்போடு கடத்தும் வழக்கம் நம் குடும்பங்களில் இன்றும் இருக்கிறது. நமது பாட்டிமார்கள் உடுத்திய புடவை என்பது வெறும் பாசத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு தலைசிறந்த பொறியியல் வடிவமைப்பு.

பல தலைமுறைகளாக நூலிழைகள், காற்றின் ஓட்டம், உள்ளூர் வானிலை ஆகியவற்றை ஆராய்ந்து நம் முன்னோர்கள் கண்டறிந்த தீர்வு. இன்றைக்கு நம் நாட்டில் கோடை காலம் நாளுக்கு நாள் கொடூரமாக மாறிவருகிறது. சில இடங்களில் வெயில் 53 டிகிரி செல்சியஸை தொடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

இத்தகைய சூழலில், காத்தோட்டமான உடைகளை உடுத்துவது என்பது வெறும் நாகரிகம் அல்ல, அது நம் ஆரோக்கியத்திற்கான அத்தியாவசியத் தேவை. நமது பாட்டியின் அலமாரியில் இருக்கும் புடவைகள் மாறிவரும் தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற எளிய அறிவியல் தீர்வுகள். அதை உணர்ந்து போற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

இதையும் படிங்க:

டைப்பிங் செய்யும் தலைமுறை: கைகளால் எழுதுவதை மறந்தால் மூளைக்கு ஆபத்தா?

உங்களை அழகாக காட்டும் இன்ஸ்டா ஃபில்டர்கள்: வெறும் பொழுதுபோக்கா? மனநல பாதிப்பா?