சிறுவயது வறுமையால் 26% வரை குறையும் ஆயுட்காலம்: மனிதனின் வாழ்நாளை தீர்மானிப்பது பெற்றோரின் பொருளாதாரமா?
மிக குறைந்த பொருளாதார வாய்ப்புகள் உள்ள தொழில்களை செய்த தந்தையரின் பிள்ளைகள், நல்ல வசதியான சூழலில் வளர்ந்த பிள்ளைகளை விட 26% அதிக இறப்பு விகிதத்தை கொண்டிருந்தனர்.

Published : October 8, 2026 at 1:21 PM IST
ஒரு மனிதன் எவ்வளவு காலம் உயிரோடு வாழ்வான் என்பதை அவனது தற்போதைய வருமானமும், அவன் வாழும் சூழலும் மட்டும் தீர்மானிப்பதில்லை, மாறாக, அவன் பிறந்த குடும்பத்தின் பொருளாதார நிலையும், அவன் வளர்ந்த குழந்தைப்பருவ சூழலுமே அவனது ஆயுட்காலத்தை மிக ஆழமாக தீர்மானிக்கின்றன.
வளர்ந்த பணக்கார நாடுகளில் கூட ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான ஆயுட்கால இடைவெளி மிக அதிக அளவில் உள்ளது. இந்த இடைவெளிக்கான காரணங்களை தேடும் ஆய்வாளர்கள், தற்போது ஒருவரின் குழந்தைப்பருவத்திற்கு சென்று ஆராயத் தொடங்கியுள்ளனர்.
24 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 102 நீண்டகால ஆய்வுகள் மற்றும் 85 லட்சம் மக்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட புதிய சர்வதேச ஆய்வு ஒன்று, குழந்தைப்பருவத்தில் சந்திக்கும் வறுமையும் நிதி நெருக்கடியும் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒருவரது முதிர்ந்த வயதில் மரண விகிதத்தை எவ்வாறு உயர்த்துகின்றன என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
ஆயுட்கால இடைவெளியும் குழந்தைப்பருவ தாக்கமும்
உலகின் மிகப்பெரிய பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வேயில், மிகவும் பணக்காரர்களான 1% ஆண்களின் ஆயுட்காலம், ஏழ்மையான 1% ஆண்களை விட சுமார் 14 ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த இடைவெளி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக உள்ளது.
2040-க்குள் இதுபோன்ற சுகாதார இடைவெளிகளைக் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்குகள் நிறைவேறுவது கடினம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒருவர் வளர்ந்து ஆளான பிறகு பெறும் வருமானம், வேலை செய்யும் இடம் போன்றவற்றை வைத்தே அவரது ஆரோக்கியம் மதிப்பிடப்பட்டது. ஆனால், சமீபத்திய விரிவான சர்வதேச ஆய்வு ஒன்று, சிறுவயது வாழ்க்கை முறையே இதன் தொடக்கம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
24 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 102 நீண்டகால ஆய்வுகளையும், சுமார் 85 லட்சம் மக்களின் தரவுகளையும் ஒருங்கிணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெற்றோரின் தொழில், கல்வித் தகுதி, குடும்ப நிதி நிலை மற்றும் வீட்டு வசதி போன்ற குழந்தைப்பருவ சூழல்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களின் இறப்பு விகிதங்கள் கண்காணிக்கப்பட்டன.
ஏன் இந்த வித்தியாசம்?
ஆய்வு முடிவுகளின்படி, சிறுவயதில் அதிக பொருளாதார பின்னடைவை சந்தித்தவர்கள், வளர்ந்த பிறகு அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
- தந்தையின் தொழில்: 20ம் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் தந்தையின் தொழிலையே முக்கிய சமூக அளவுகோலாக கொண்டன. மிக குறைந்த பொருளாதார வாய்ப்புகள் உள்ள தொழில்களை செய்த தந்தையரின் பிள்ளைகள், நல்ல வசதியான சூழலில் வளர்ந்த பிள்ளைகளை விட 26% அதிக இறப்பு விகிதத்தை கொண்டிருந்தனர்.
- நோய்களின் தாக்கம்: இந்த இறப்பு விகித உயர்வு முக்கியமாக இதய நோய்கள், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படுவது கண்டறியப்பட்டது.
- பிற காரணிகள்: பெற்றோரின் குறைந்த கல்வி தகுதி, நிதி நெருக்கடி மற்றும் நெரிசலான சிறிய வீடுகளில் வளர்ந்தது போன்ற சூழல்களும் பிற்கால மரண விகித அதிகரிப்புடன் தொடர்புடையவையாக இருந்தன.
குடும்ப சூழல் தான் காரணமா?
இந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை கவனித்து பதிவு செய்யப்பட்டவை (Observational Studies) மட்டுமே. எனவே, சிறுவயது வறுமைதான் நேரடி காரணம் என்று அடித்து சொல்ல முடியாது. மன அழுத்தம், வீட்டின் சூழல், அக்கம் பக்கத்தின் பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணிகளும் இதனுடன் பின்னி பிணைந்துள்ளன.
மேலும், சிறுவயதில் ஏற்படும் வறுமை, ஒருவர் வளர்ந்த பிறகு பெறக்கூடிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது. எனவே, இந்த பாதிப்பு சிறுவயதில் மட்டுமே உருவானதா அல்லது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சேர்ந்த பின்னடைவா என்பதை தனியாக பிரித்து பார்ப்பது கடினம். இருப்பினும், தரவுகளின் நம்பகத்தன்மையை மறுக்க முடியாது.
எதிர்காலத்திற்கான தீர்வு
குழந்தைப் பருவத்திலேயே இந்த சமத்துவமின்மையைக் களைய வேண்டியது மிக முக்கியம். இதற்கு "விகிதாச்சாரப் பொதுமைவாதம்" (Proportionate Universalism) என்ற அணுகுமுறை தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
இதன்படி, கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவாக வழங்குவதோடு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவியும், வீடமைப்பு ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.
2070-களில் முதியவர்களாக வாழப்போகும் மனிதர்கள், இன்றைக்கு குழந்தைகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இன்றைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது மட்டுமே, இன்னும் சில தசாப்தங்களில் உருவாகப்போகும் மிகப்பெரிய சுகாதார இடைவெளியைத் தடுப்பதற்கான ஒரே வழி என்கிறது ஆய்வு.
ஆய்வு:
https://www.who.int/news/item/06-05-2025-health-inequities-are-shortening-lives-by-decades

