இயற்கையான அழகே மாஸ்: ஜென் Z இளம் பெண்களின் பியூட்டி ட்ரெண்ட்ஸ்!
ஒரு பொருளை யார் விளம்பரம் செய்தாலும், அது நமக்கு செட் ஆகுமா என்பதை இணையத்தில் தேடி பார்த்தும், நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டும் தெளிவு பெறுகிறார்கள்.

Published : September 1, 2026 at 4:35 PM IST
அழகு என்றால் என்ன? முகத்தில் நிறைய மேக்க போட்டுக்கொள்வதும், கடைகளில் விற்கும் விதவிதமான அழகு சாதன பொருட்களை வாங்கி பூசிக்கொள்வதும் தான் அழகு என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இன்றைய இளம் பெண்கள் அதவாது ஜென் ஜி (Gen Z) தலைமுறையினர் இந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி வருகிறார்கள்.
அளவுக்கு அதிகமான மேக்கப் போடுவதை விட, சருமத்தை இயல்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதே சிறந்தது என்பதை இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அதை தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறார்கள்.
நம் பாட்டிமார்களின் காலத்தில் பின்பற்றப்பட்ட எளிய பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், அதுகுறித்த விழிப்புணர்வை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். செயற்கையான மேக்கப்பை குறைத்துவிட்டு, இயற்கையான ஆரோக்கியத்தை விரும்பும் இந்த ஜென் ஜி பெண்களின் எளிய பழக்கங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
செயற்கை மேக்கப்பிற்கு 'நோ' – ஆரோக்கியத்திற்கே 'யெஸ்'
பொதுவாக முகத்தில் கரும்புள்ளிகளோ அல்லது பருக்களோ வந்தால், அதை மேக்கப் போட்டு மறைத்துவிட வேண்டும் என்றுதான் பலர் யோசிப்பார்கள். ஆனால், இன்றைய இளம் பெண்கள் இந்த முறையை தவிர்க்கிறார்கள். பிரச்சனை வந்த பிறகு அதை மறைப்பதை விட, சருமப் பிரச்சனைகளே வராமல் முன்னெச்சரிக்கையாக பார்த்துக்கொள்வதே நல்லது என்று நினைக்கிறார்கள்.
இதற்காக ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை தவிர்த்துவிட்டு, சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது, தோலின் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்வது மற்றும் வெயிலில் இருந்து காக்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது என மிக எளிய பழக்கங்களையே பின்பற்றுகிறார்கள்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மற்றவர்களை பார்த்து அப்படியே செய்வதில்லை. தங்கள் சருமத்திற்கு எது செட் ஆகும் என்பதை ஆராய்ந்து, அதில் உள்ள பொருட்களை தெளிவுபடுத்திய பிறகே தேர்வு செய்கிறார்கள். சருமம் உள்ளிருந்து ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வெளியே பொலிவாக இருக்கும் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
சன்ஸ்கிரீன்: சருமத்தை பாதுகாக்கும் எளிய வழி
வெளியே செல்லும்போது வெயிலினால் சருமம் பாழாகிவிட கூடாது என்பதற்காக பலர் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது உண்டு. ஆனால் இன்றைய இளம் பெண்கள் இதை தவறாமல் செய்கிறார்கள். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் மட்டுமின்றி, நாம் எப்போதும் பயன்படுத்தும் மொபைல் போன் திரைகளில் இருந்து வரும் ஒளியும் கூட சருமத்தை பாதிக்கும்.
இது சிறிய வயதிலேயே தோலில் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும். இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க சன்ஸ்கிரீன் லோஷன்களை இவர்கள் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக தங்கள் தோலுக்கு ஏற்ற 'ஜெல்' வடிவிலான லோஷன்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள்.
விளம்பரங்களை குருட்டுத்தனமாக நம்புவதில்லை!
பிடித்த நடிகை விளம்பரத்தில் வந்து சொன்னார் என்பதற்காகவோ, சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு பொருளையும் இவர்கள் உடனடியாக வாங்கி விடுவதில்லை. அது தவறான முறை என்பது இவர்களின் கருத்து.
ஒரு பொருளை யார் விளம்பரம் செய்தாலும், அது நமக்கு செட் ஆகுமா என்பதை இணையத்தில் தேடிப் பார்த்தும், நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டும் தெளிவு பெறுகிறார்கள். அத்துடன் நின்றுவிடாமல், நம் பாட்டிமார்கள் காலத்தில் பயன்படுத்திய இயற்கை மருத்துவ குறிப்புகளையும் அறிந்து வைத்துக்கொண்டு அதை பின்பற்றவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் சருமத்திற்கு எந்த பாதிப்பும் வராதவாறு தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள்.
'நோ ஃபில்டர்' செல்ஃபிக்களும் தன்னம்பிக்கையும்
வெள்ளையாக இருக்க வேண்டும், ஒல்லியாக இருக்க வேண்டும் என அழகுக்கு சமூகம் வகுத்து வைத்திருக்கும் சில தவறான விதிகளை இவர்கள் நிராகரிக்கிறார்கள். இதனால்தான், கேமராவில் ஃபில்டர்கள் எதுவும் பயன்படுத்தாமல், தாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே படம் எடுத்து 'நோ ஃபில்டர்' செல்ஃபிக்களாக சமூக வலைத்தளங்களில் தைரியமாக பதிவிடுகிறார்கள்.
அதுமட்டுமன்றி, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் மற்றும் கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக பேச தயங்குவதில்லை. இதனால், இதே பிரச்சனைகளால் அவதிப்படும் மற்ற பெண்களுக்கும் "நாம் தனி ஆள் இல்லை, நமக்கும் ஆதரவு இருக்கிறது" என்ற நம்பிக்கை கிடைக்கிறது.
அழகு என்பது தோற்றத்தில் இல்லை, தன்னம்பிக்கையில்தான் இருக்கிறது என்பதை இவர்கள் காட்டுகிறார்கள். யாராவது இவர்களை உருவக்கேலி செய்தால், அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்களை உடனடியாக 'அன்ஃபாலோ' செய்துவிட்டுத் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
தலைமுடி பராமரிப்பு
தலைமுடி ஆரோக்கியமாக வளர எண்ணெய் தேய்க்க வேண்டும் என்பது நம் ஊரில் காலங்காலமாக சொல்லப்படும் ஒரு விஷயம். இதை இன்றைய தலைமுறையினரும் தீவிரமாக பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
நேரம் கிடைக்கும்போது தலையில் நன்றாக எண்ணெய் தடவி, மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் குளிக்கிறார்கள். ஒருவேளை நேரம் குறைவாக இருந்தால், குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது கூந்தலின் வேர்க்கால்களில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்கிறார்கள்.
முடி வளரும் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும் என்பதை இவர்கள் ஆழமாக நம்புகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், தேவையில்லாத மேக்கப் ஆடம்பரங்களை விட, இயல்பான பராமரிப்பும் சுய அன்பும்தான் உண்மையான அழகு என்பதை இன்றைய இளம் பெண்கள் உணர்த்தி வருகிறார்கள்.

