ETV Bharat / lifestyle

உங்க மெட்டபாலிசம் பலவீனமா இருக்கா? கடகடவென அதிகரிக்க டிப்ஸ் இதோ!

ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்து வேலை செய்வது அல்லது உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது, உங்கள் தசைகளை செயலற்றதாக மாற்றுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 2, 2026 at 5:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

நாம் உண்ணும் உணவு எப்படி ஆற்றலாக மாறுகிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? ஒரே அளவில் சாப்பிடும் இருவரில் ஒருவர் மட்டும் உடல் எடை கூடாமலும், மற்றொருவர் உடனடியாக எடை அதிகரிப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் பின்னால் இருப்பது தான் 'மெட்டபாலிசம்'.

நமது உடல் இயங்குவதற்கு தேவையான எரிபொருளை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை போல இது செயல்படுகிறது. நாம் உறங்கும் போதும், சுவாசிக்கும் போதும் கூட இந்த இயந்திரம் ஓயாமல் உழைத்து கொண்டே இருக்கிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த இயந்திரத்தை சீராக வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதை பற்றி விரிவாக காண்போம்.

மெட்டபாலிசம் என்றால்? உயிரியல் ரீதியாகப் பார்த்தால், வளர்சிதை மாற்றம் (Metabolism) என்பது நம் உடலில் உயிர் வாழ்வதற்கு தேவையான வேதிவினைகளின் தொகுப்பாகும். இதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் என்கிறது Harvard ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வு. ஒன்று 'கேடபாலிசம்' (Catabolism), இது நாம் உண்ணும் உணவை உடைத்து சக்தியை வெளியிடும் செயல்முறை.

மற்றொன்று 'அனபாலிசம்' (Anabolism), இது செல்கள் மற்றும் திசுக்களை உருவாக்க தேவையான புரதங்களை வளர்க்கும் செயல்முறை. சுருக்கமாக சொன்னால், நாம் சுவாசிப்பதில் தொடங்கி, ரத்த ஓட்டம் சீராக இருப்பது, காயங்கள் குணமாவது மற்றும் தசை வளர்ச்சி என அத்தனையையும் மெட்டபாலிசமே தீர்மானிக்கிறது. இதன் வேகம் 'மெட்டபாலிக் ரேட்' என்று அழைக்கப்படுகிறது.

வேகமான வளர்சிதை மாற்றத்தின் நன்மைகள்: வேகமான வளர்சிதை மாற்றத்தை கொண்டிருப்பவர்கள், உண்ணும் உணவை மிக விரைவாக சக்தியாக மாற்றிவிடுவார்கள். இதனால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது குறைகிறது. அவர்களுக்கு எப்போதும் உற்சாகமும், உடல் உழைப்பிற்கான அதீதத் திறனும் (Endurance) இருக்கும்.

இது வெறும் உடல் எடையை பராமரிப்பதோடு நின்றுவிடாமல், ஹார்மோன் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சுதல் போன்ற ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கிறது. அதனால்தான் சிலரால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையை தற்காத்து கொள்ள முடிகிறது.

கடும் உணவுக்கட்டுப்பாடு எனும் ஆபத்து: உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு, மிகக் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது. நீங்கள் மிக குறைவாக சாப்பிடும்போது அல்லது பட்டினி கிடக்கும் போது, உங்கள் உடல் 'பஞ்சம்' வந்துவிட்டதாக பயந்து, 'ஸ்டார்வேஷன் மோடுக்கு' (Starvation mode) சென்றுவிடும்.

அதாவது, இருக்கும் சக்தியை சேமித்து வைப்பதற்காக வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை உடல் தானாகவே குறைத்துக்கொள்ளும். இது உடல் எடையைக் குறைப்பதற்கு பதிலாக, நீண்ட கால அடிப்படையில் உங்கள் வளர்சிதை மாற்ற இயந்திரத்தையே பழுதடைய செய்துவிடும்.

சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை: நமது தசைகள் எவ்வளவு தூரம் இயங்குகிறதோ, அவ்வளவு தூரம் அவை சக்தியை கோரும். ஆனால், ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்து வேலை செய்வது அல்லது உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது, உங்கள் தசைகளைச் செயலற்றதாக மாற்றுகிறது.

தசைகள் வேலை செய்யாதபோது, அவை எரிபொருளை கேட்காது, இதனால் மெட்டபாலிசம் மந்தமடைந்து விடும். இது காலப்போக்கில் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பு படிவதற்கும், எப்போதும் சோர்வாக உணர்வதற்கும் முதன்மையான காரணமாக அமைந்துவிடுகிறது.

உறக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்: உறக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது மெட்டபாலிக் ஹார்மோன்களைச் சீரமைக்கும் ஒரு காலகட்டம். போதிய உறக்கம் இல்லாதபோது, பசியைத் தூண்டும் 'கிரெலின்' (Ghrelin) ஹார்மோன் அதிகரித்து, வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும் 'லெப்டின்' (Leptin) ஹார்மோன் குறைந்துவிடுகிறது.

இதனால் உறக்கம் குறைந்தவர்களுக்கு தேவையில்லாத பசியும், அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கமும் ஏற்படுகிறது. நீண்ட கால தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைத்து, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

புரதச்சத்து மற்றும் தண்ணீர் பற்றாக்குறை: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கே உடலுக்கு சற்று ஆற்றல் தேவைப்படும், இதை 'தெர்மிக் எஃபெக்ட்' (TEF) என்பார்கள். மாவுச்சத்து மற்றும் கொழுப்பை விட, புரதத்தை செரிப்பதற்கு உடல் அதிகக் கலோரிகளை எரிக்கிறது. எனவே, உணவில் போதிய புரதம் இல்லையெனில் மெட்டபாலிசம் குறையும். அதேபோல், தண்ணீரும் மிக அவசியம்.

கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றுவதற்கு தண்ணீர் ஒரு முக்கிய காரணியாகும். லேசான நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்பட்டால் கூட, ஊட்டச்சத்துக்களை சுழற்சி செய்யும் வேகம் குறைந்து வளர்சிதை மாற்றம் மந்தமாகிவிடும்.

மன அழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம்: அதிகப்படியான மன அழுத்தம் உடலில் 'கார்டிசோல்' ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலுக்கு கொழுப்பை சேமித்து வைக்குமாறு சமிக்ஞை அனுப்புகிறது, குறிப்பாக வயிற்று பகுதியில் கொழுப்பு சேர இதுவே காரணம்.

மேலும், நேரத்திற்கு சாப்பிடாமல் வேளைகளை தவிர்ப்பது (Skipping meals), உடலை சக்தியைச் சேமிக்க தூண்டி வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். முறையான உடற்பயிற்சி, அதிகப் புரத உணவுகள், தசைப் பயிற்சிகள் மற்றும் சரியான நீர்ச்சத்து ஆகியவற்றின் மூலம் நாம் இந்த 'சக்தி இயந்திரத்தை' மீண்டும் வேகப்படுத்த முடியும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.