குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகமா இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க!
குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ.

Published : December 15, 2025 at 3:01 PM IST
குளிர்காலம் வந்தாலே நம்மில் பலருக்கு முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை அதிகமாகிவிடும். வெளியில் உலர்ந்த, குளிர்ந்த காற்று ஆகியவை நம்முடைய தலைமுடியையும், உச்சந்தலையையும் பாதிக்கின்றன. இந்த குளிர் சீசனில் எப்படி நமது தலைமுடியைப் பாதுகாப்பது, அதற்கான எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏன் குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன? குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதம் நமது உச்சந்தலையை வறண்டு போகச் செய்கிறது. இதனால் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், சில சமயங்களில் தலையில் உருவாகும் பூஞ்சை தொற்றும் பொடுகு தொல்லைக்கு காரணமாக அமைகிறது.

குளிர்காலத்தில், நம் உச்சந்தலையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, முடி வேர்கள் பலவீனமடைவதால் முடி உதிர்வு அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைகளை தடுக்க சில எளிய வீட்டு வைத்தியங்களை செய்தால் போதும். அந்த வகையில், குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு தொல்லையை தவிர்க்க உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொடுகு மற்றும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த எளிய இயற்கை வைத்தியங்கள்
ஆப்பிள் சைடர் வினிகர்: இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது, இதனால் பொடுகு உண்டாக்கும் பூஞ்சைகள் நீங்குகின்றன. சம அளவு ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து, தலைக்குக் குளித்த பிறகு உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசவும்.
வேப்பிலை: வேப்பிலையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வேப்பிலைகளை அரைத்து உச்சந்தலை மற்றும் முடியில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பு கொண்டு அலசலாம். அல்லது வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கூந்தலை அலசப் பயன்படுத்தலாம்.
வெந்தயம்: முடி உதிர்வு மற்றும் பொடுகுத் தொல்லைக்கு வெந்தயம் ஒரு மிகச்சிறந்த தீர்வு. வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசலாம்.

முட்டை வெள்ளைக்கரு: முட்டையில் உள்ள புரதம் கூந்தலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பு கொண்டு அலசலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு: தேங்காய் எண்ணெய் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது, மேலும் எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகு பூஞ்சையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து அலசலாம்.
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு: தயிர் தலைக்கு குளிர்ச்சியையும் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. தயிருடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து உச்சந்தலைக்கு நன்கு மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு அலசவும்.
டிப்ஸ்:
- தலைக்கு அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களை நீக்கி மேலும் வறட்சிக்கு வழிவகுக்கும். வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும்.
- கண்டிஷனரைப் பயன்படுத்துவது மற்றும் வாரத்திற்கு ஒருமுறை ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க் போடுவது அவசியம்.
- குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருந்தாலும், உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்துவது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
- பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், டீ ட்ரீ ஆயில், வேம்பு அல்லது கெட்டோகோனசோல் (Ketoconazole) போன்ற பொருட்கள் அடங்கிய பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்தலாம்.
- சரியான கவனிப்பு மற்றும் இந்த எளிய இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம், குளிர்காலத்திலும் முடி உதிர்வு மற்றும் பொடுகுத் தொல்லையை திறம்பட நிர்வகிக்க முடியும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

