விலைவாசி ஏறுனா என்ன? சுவையும் சத்தும் குறையாம சமைக்க 20 சமையல் குறிப்புகள்!
சமைப்பதற்கு முன்பாகவே என்ன சமைக்க போகிறோம் திட்டமிட்டுக்கொள்வது அவசியம். காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து அழுகவிடாமல் பாதுகாப்பதே மிகப்பெரிய சிக்கனம் தான்.

Published : September 2, 2026 at 12:03 PM IST
முன்பெல்லாம் சந்தைக்கு புறப்படும்போது பைக்குள் நூறோ இருநூறோ எடுத்து சென்றால் போதும், வீடு திரும்பும்போது காய்கறி பை கையை வலிக்கும் அளவுக்கு நிறைந்து வழியும். ஆனால் இன்றோ, ஆயிரம் ரூபாயை தாண்டி பணத்தை கொண்டு போனாலும் பாக்கெட் தான் காலியாகிறதே தவிர, பை நிறைவதே இல்லை.
வெங்காயம், தக்காளி தொடங்கி அன்றாட சமையலுக்கு தேவையான ஒவ்வொன்றின் விலையும் ஏறிக்கொண்டே போவதை பார்க்கும்போது, "என்னடா இது, சமையல் செய்வதற்கே இவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறதே" என்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஆச்சரியமும் கவலையும் ஒருசேர எழுகிறது.
அதேநேரம், விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன? நினைப்பவர்களுக்கே இந்த யோசனைகள். உடலுக்கு தேவையான சத்துகளும் சுவையும் குறையாமல், அதே சமயத்தில் நமது மாதாந்திர வரவு செலவை சீராக பராமரிக்க 20 சமையல் டிப்ஸ்கள் இதோ!
- அடிகக்டி காய்கறி போட்டு சாம்பார் வைப்பதற்கு பதிலாக, வாரத்தில் இரண்டு நாட்கள் தட்டப்பயிறு, சுண்டல், பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை கொண்டு குழம்பு வைக்கலாம். இது உடலுக்கு நல்ல புரதச்சத்தை கொடுப்பதோடு, காய்கறி வாங்கும் செலவையும் மிச்சப்படுத்தும்.
- வெங்காயத்தின் விலை அதிகமாக இருக்கும் நாட்களில் தக்காளி, இஞ்சி, பூண்டு, தேங்காய், சீரகம் அரைத்து விட்டு செய்யப்படும் பூண்டுக் குழம்பு, காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு வைத்து அசத்தலாம். இதற்கு வெங்காயத்தின் தேவையே இருக்காது.
- காலை உணவுக்கு தினமும் இட்லி, தோசை என அரிசி உணவுகளையே நம்பியிருக்காமல், ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா என சமைக்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும், செலவும் குறையும்.
- காய்கறிகளை சமைக்கும் போது அதன் தோல்களை வீணாக்காமல் பீர்க்கங்காய், புடலங்காய், சௌசௌ போன்ற காய்களின் தோல்களில் அருமையான துவையல் செய்யலாம். இது சுவையையும் சத்தையும் ஒருசேர வழங்கும்.
- காய்கறிகளை முழுமையாக ஒரே உணவில் பயன்படுத்தாமல், பாதியை குழம்பிற்கும், மீதியைச் சிறிது கடலைப்பருப்பு சேர்த்து கூட்டு செய்வதற்கும் பயன்படுத்தினால் ஒரே காய்கறியில் இரண்டு உணவுகள் தயார் செய்துவிடலாம்.
- வாரச் சந்தைகளில் காய்கறிகள் மிகவும் மலிவாக கிடைக்கும். எனவே பெரிய அங்காடிகளுக்கு செல்லாமல், உள்ளூர் சந்தைகளில் வாரத்திற்கு தேவையானதை ஒரே நேரத்தில் பார்த்து வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும்.
- அந்தந்த காலங்களில் (சீசன்) அதிகளவில் விளைச்சல் ஆகும் காய்கறிகளை வாங்குவது நல்லது. பருவம் இல்லாத காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்கலாம்.
- சமையலில் தக்காளியின் பயன்பாட்டை குறைக்க விரும்புபவர்கள், தக்காளியின் அளவை பாதியாக குறைத்துவிட்டு சிறிதளவு புளி அல்லது தயிர் சேர்த்து சமைப்பதன் மூலம் புளிப்பை ஈடுசெய்ய முடியும்.
- காய்கறிகளுடன் ஒப்பிடும்போது கீரை வகைகளின் விலை குறைவு, ஆனால் சத்துகள் அதிகம். வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு கீரையை கடைந்தோ அல்லது பொரியல் செய்தோ உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
- கடைகளில் விற்கும் தயார்நிலை தோசை மாவை வாங்குவதை தவிர்த்து, வீட்டிலேயே அரிசி மற்றும் உளுந்து ஊறவைத்து அரைத்துக்கொண்டால் வாரத்தின் பல நாட்களுக்கு காலை உணவைப் கவலையின்றி சமாளிக்கலாம்.
- இரவில் சாதம் மீந்துபோனால் அதனை வீணாக்காமல், மறுநாள் காலையில் பழைய சாதமாக மாற்றி சின்ன வெங்காயம் மற்றும் மோர் மிளகாய் தொட்டுச் சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியையும் தரும், உணவும் வீணாகாது.
- வாரத்தில் ஒருநாள் பருப்பு சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற கலவை சாதங்களை சமைக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள வடகம் அல்லது அப்பளமே போதுமானது, காய்கறிகளின் தேவை இருக்காது.
- காய்கறிகளை அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல், ஒரு மெல்லிய துணியிலோ அல்லது காற்று புகாத பெட்டிகளிலோ அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் புதுசு போலவே இருக்கும்.
- சமையலுக்குத் தேவையான மசாலாப் பொடிகளை பாக்கெட்டுகளாக வாங்காமல், வீட்டிலேயே மல்லி, மிளகாய் வறுத்து அரைத்து வைத்துக்கொண்டால் மாதாந்திர மளிகைப் பட்டியல் செலவு கணிசமாகக் குறையும்.
- முட்டை குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த சத்துணவு. வாரத்தில் இரண்டு நாட்கள் காய்கறிகளுக்கு பதிலாக முட்டைத் தொக்கு அல்லது முட்டைக் குழம்பு வைத்து உணவை நிறைவு செய்யலாம்.
- மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும். இவற்றை அவித்து மாலை நேர ஸ்நாக்ஸிற்காக அல்லது குழம்பில் சேர்த்தோ பயன்படுத்தலாம்.
- அசைவப் பிரியர்கள் தினமும் கறி, மீன் என செலவு செய்யாமல், வாரத்தில் ஒருநாள் மட்டும் அசைவம் எடுத்துக்கொண்டு மற்ற நாட்களில் காளான் அல்லது பன்னீர் பயன்படுத்தி சமைக்கலாம்.
- வீட்டிலிருக்கும் சிறிய இடைவெளிகளிலோ அல்லது தொட்டிகளிலோ புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை வளர்த்தால் அன்றாட சமையலுக்கான தேவையை வீட்டிலேயே பூர்த்தி செய்யலாம்.
- குழம்பு கட்டியாக வருவதற்கு அதிக அளவில் தேங்காய் அரைத்து ஊற்றுவதற்குப் பதிலாக, சிறிதளவு பொட்டுக்கடலை அல்லது நிலக்கடலையை அரைத்து சேர்த்தால் குழம்பும் கெட்டியாகும், ருசியும் கூடும்.
- சமைப்பதற்கு முன்பாகவே என்ன சமைக்க போகிறோம் திட்டமிட்டுக்கொள்வது அவசியம். காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து அழுகவிடாமல் பாதுகாப்பதே மிகப்பெரிய சிக்கனம் தான்.

