ETV Bharat / lifestyle

ஆந்திரா ஸ்டைல் காரசாரமான வேர்க்கடலை சட்னி - தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன்!

இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிடாமல் ஒரு முறை காரசாரமான இந்த வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடுங்கள். ரெசிபி இதோ!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : November 15, 2025 at 3:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சட்னி என்றதும் பலரின் நினைவுக்கு முதலில் எட்டுவது தக்காளி சட்னியும், தேங்காய் சட்னியும் தான். அதையும் தாண்டி கொஞ்சம் யோசித்தால் புதினா சட்னி ஞாபகத்திற்கு வரும். நீங்கள் எப்போதாவது வேர்க்கடலை சட்னி சாப்பிட்டுருக்கீங்களா? அதுவும் ஆந்திரா ஸ்டைலில்? வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து காரசாரமாக இருக்கும் இந்த சட்னி நிச்சயம் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒன்றாக மாறிவிடும்.

சுட சுட தோசைக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் எத்தனை தோசை சாப்பிடுகிறோம் என்ற கணக்கே இருக்காது. அப்புறம் என்ன நண்பர்களே! வீட்டில் ஒரு முறை இந்த ரெசிபியை ஃபாலோ பண்ணி காரசாரமான வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடுங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

தேவையான பொருட்கள்:

  • வேர்க்கடலை - 1 கப்
  • காய்ந்த மிளகாய் - 10
  • பொட்டுக் கடலை - 1/4 கப்
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

  • கடுகு - அரை டீஸ்பூன்
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • உளுந்து - அரை டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
  • பூண்டு - 5 பல்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்

காரசாரமான வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
  • வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் நன்றாக வறுப்பட்டு வந்ததும், பொட்டுக்கடலையை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அணைக்கவும்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
  • இவை முற்றிலுமாக ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவி வைத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • பின்னர், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, முடிந்தவரை நைசாக அரைக்கவும்.
  • இப்போது இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து சட்னியை தாளிக்கவும்.
  • அதற்கு, அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, தட்டி வைத்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் வறுத்ததும், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுப்பாக வதக்கவும்.
  • பின், அடுப்பை அணைத்து இதை சட்னியில் சேர்த்தால் அவ்வளவு தான்.. சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி தயார்.

டிப்ஸ்:

  • வேர்க்கடலையை எண்ணெயில் வறுப்பதால் தோலை நீக்க வேண்டிய அவசியமில்லை. எண்ணெய்யில் வறுக்க வேண்டாம் என நினைப்பவர்கள், கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து தோல் நீக்கி சட்னி செய்யலாம்.
  • உங்கள் ருசிக்கேற்ப காய்ந்த மிளகாயைச் சேர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: