முடியை அடர்த்தியாக்க தினமும் இதை சாப்பிடுங்க - லிஸ்ட் இதோ!
தினசரி ஒரு வகை கீரை சாப்பிடுவதால் இரும்பு சத்து அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

Published : December 14, 2025 at 3:45 PM IST
பொலிவான, அடர்த்தியான முடி வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது. முடி உதிர்தல் மற்றும் மந்தமான முடி வளர்ச்சிக்கு மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தவறான பராமரிப்பு முறைகள் போன்ற பல காரணங்கள் இருந்தாலும், நமது உணவுப் பழக்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வெளிப்புறப் பராமரிப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நாம் உள்ளே எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்கள். முடி வளர்ச்சியின் அடித்தளமே நாம் சாப்பிடும் உணவில் தான் உள்ளது. அந்த வகையில், முடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அளித்து, வேரிலிருந்து முடியைப் பலப்படுத்தும் 5 இயற்கையான உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

முட்டை: முடி இழைகள் கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனவை. எனவே, போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரதக் குறைபாடு இருந்தால், முடி பலவீனமடைந்து உதிர ஆரம்பிக்கும். இது வைட்டமின் பி7 என்றும் அழைக்கப்படுகிறது. பயோட்டின் கெரட்டின் உற்பத்தியைத் தூண்டி, முடி வளர்ச்சியை விரைவுபடுத்த உதவுகிறது.
ஆய்வுகளின்படி, பயோட்டின் குறைபாடு உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. தினமும் காலையில் அவித்த முட்டை, ஆம்லெட் அல்லது முட்டைப் பொரியல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கீரை வகைகள்: பொதுவாகவே, முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்கள் (RBC) உருவாக உதவுவதுடன், அவை உச்சந்தலை மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன. போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் மட்டுமே முடி வேர்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வளர முடியும்.
கீரையில் உள்ள வைட்டமின் A, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படும் சீபம் (Sebum) உற்பத்தியைச் சீராக்குகிறது. வைட்டமின் C, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. தினமும் ஒரு வகை கீரையை குழம்பு, பொரியல் என செய்து சாப்பிடலாம்.

கொழுப்பு நிறைந்த மீன்கள்: சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள சத்துக்கள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அமிலங்கள் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாதவை. இவை முடி வேர்கள் மற்றும் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
சில கொழுப்பு மீன்களில் வைட்டமின் D-யும் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சி சுழற்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. வாரம் இருமுறை கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது முடி வளர்ச்சிக்கு உதவும். அசைவம் சாப்பிடாதவர்கள் ஆளி விதைகள் அல்லது வால்நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளலாம்.
பெர்ரிஸ்: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் C, முடி எளிதில் உடையாமல் இருக்க உதவும் கொலாஜன் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், இது முடியை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை (Free Radicals) எதிர்த்துப் போராடுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து, நச்சுக்களை நீக்க உதவுகிறது. காலை உணவில் ஓட்ஸ் அல்லது தயிருடன் பெர்ரி பழங்களைச் சேர்த்து சாப்பிடலாம்.
நட்ஸ் மற்றும் விதைகள்: சியா விதைகள், பூசணி விதைகள், பாதாம் மற்றும் வால்நட் போன்ற பருப்புகள் ஆகியவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான தாதுக்களை வழங்குகின்றன. பாதாமில் உள்ள வைட்டமின் E, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
துத்தநாகம், முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான தாது ஆகும். ஆளி விதைகள் மற்றும் வால்நட் தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பயோட்டின் சத்துக்களை வழங்குகின்றன.
தினமும் ஒரு சிறிய அளவு விதைகளை சாலடுகள், ஸ்மூத்திகள் அல்லது ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இந்த 5 உணவுகளையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது, முடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியப் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறுதி செய்கிறது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

