ETV Bharat / international

அயதுல்லா காமேனி இறப்பு - ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்?

ஈரானின் நிபுணர்கள் சபையில் 88 உறுப்பினர்கள் உள்ள நிலையில், புதிதாக ஒருவரை தலைவராக நியமிக்கவும், அந்த பொறுப்பிலிருந்து ஒருவரை நீக்கவும் இந்த சபைக்கு அதிகாரம் உள்ளது.

கோப்புப்படம் - ஈரானின் பிரார்த்தனையை வழிநடத்தும் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி
கோப்புப்படம் - ஈரானின் பிரார்த்தனையை வழிநடத்தும் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 3:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புது டெல்லி: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் அடுத்த உச்ச தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த சில வாரங்களாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரானை சுற்றி நிறுத்தியது. இதனால் எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்து வந்த நிலையில், சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த இஸ்ரேல் நேற்று (பிப். 28) திடீரென ஈரான் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

சற்று நேரத்தில் அமெரிக்காவும் இந்த தாக்குதலில் இணைந்துகொண்ட நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்பட, இஸ்பஹான், கோம், கார்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானும் இன்று அதனை உறுதி செய்தது.

ஈரானின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவராக அறியப்பட்ட காமேனியின் மறைவு, அந்நாட்டை நிலைகுலைய செய்திருக்கிறது. காமேனியின் மறைவுக்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு 7 நாட்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கிறது.

உச்ச தலைவர் பொறுப்பு

1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, அயதுல்லா ருஹோல்லா காமேனி அந்நாட்டின் உச்ச தலைவராக பதவி வகித்தார். 1989இல் அவருடைய மறைவுக்கு பிறகு உச்ச தலைவராக பொறுப்பேற்றார் அலி காமேனி. அன்றிலிருந்து இதுவரை அந்த பதவியை தக்கவைத்திருந்த அவர், ஈரானின் பல்வேறு புரட்சிகளையும், ஈராக்குடனான 8 ஆண்டு போரையும் வழிநடத்தியுள்ளார்.

89 வயதான காமேனியின் மறைவுக்கு பிறகு, ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியானும், இரண்டு உயரதிகாரிகளும் தற்காலிகமாக ஈரானை வழிநடத்தவுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டிருக்கிறது. ஈரானை பொருத்தவரை ஷியா மத கோட்பாட்டின் முக்கிய பொறுப்பாக உச்ச தலைவர் பொறுப்பு பார்க்கப்படுகிறது. அரசின் அனைத்து முக்கிய விஷயங்களிலும் இறுதி முடிவை எடுப்பவர் உச்ச தலைவரே. நாட்டின் ராணுவம், காவல்படையின் தளபதியும் உச்ச தலைவர்தான்.

ஈரானிய சட்டத்தின்படி, நிபுணர்கள் சபை என்று அழைக்கப்படுகிற 88 உறுப்பினர்களைக் கொண்ட குழு உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும். தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை ஒரு தலைமைத்துவக் குழு அந்த பொறுப்பை ஏற்று நாட்டை வழிநடத்தும். அதன்படி, ஜனாதிபதி பெஷேஷ்கியான், அவருடன் ஈரானின் நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் மற்றும் மற்றொரு சட்டக்குழு அதிகாரி ஆகியோரால் நாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: 'ஒற்றை மனிதன்... 4 தசாப்தங்கள்' அமெரிக்காவை அலற விட்ட பேரரசன்; யார் இந்த காமேனி?

நிபுணர்கள் சபை என்பது என்ன?

ஈரானின் நிபுணர்கள் சபையில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவுக்கு ஒருவரை தலைவராக நியமிக்கவும், அந்த பொறுப்பிலிருந்து ஒருவரை நீக்கவும் அதிகாரம் இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஷியா மத குருமார்கள் மட்டுமே இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் வேட்புமனுக்களை ஈரானின் அரசியலமைப்பு கண்காணிப்பு அமைப்பான கார்டியன் கவுன்சில் அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்பானது பல்வேறு தேர்தல்களில் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த மத குருமார்களின் ஆலோசனை மிகவும் ரகசியமாக நடத்தப்படும் என்பதால் யார் அடுத்த தலைவராவார் என்பதை கணிப்பது கடினம்.

ஈரானில் தற்போதைய நிலவரப்படி, காமேனியின் மகனான 56 வயதான ஷியா மதகுரு மொஜ்தபா அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.