ETV Bharat / international

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிகஸ்

டெல்சி ரோட்ரிகஸின் சிறந்த நிர்வாகத் திறன் காரணமாக அவருக்கு இந்த பொறுப்பை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ்
வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் (File/AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 10:44 AM IST

2 Min Read
Choose ETV Bharat

கராகஸ்: வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சிறை பிடித்துள்ள நிலையில் அந்நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக எழுந்த விவகாரத்தில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்து, விசாரணைக்காக நியூயாரிக்கிற்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வெனிசுலா நாடாளுமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மூத்த சட்டமன்ற உறுப்பினரான ஃபெர்னாண்டோ சாட்டோ, இந்த போரில் அமெரிக்கா வெற்றிபெறாது என்றும், வெனிசுலா நாட்டினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றிகரமாக தங்கள் அதிபர் நிகோலஸை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்து வருவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

இதனிடையே, அதிபரின் கைது நடவடிக்கையால் அந்நாட்டின் நிர்வாகம் சீர்குலையாமல் இருக்க, டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால அதிபராக பதவியேற்குமாறு வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு, அந்நாட்டு ராணுவமும் முழு ஆதரவை வழங்கி இருக்கிறது.

இடைக்கால அதிபராக இன்று பதவியேற்றிருக்கும் டெல்சி ரோட்ரிகஸ், வாஷிங்டன் உடனான தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியுள்ளார். இவர் வெனிசுலா நாடாளுமன்ற சபாநாயகர் ஜார்ஜ் ரோட்ரிகஸின் சகோதரி ஆவார்.

இதையும் படிங்க: வெனிசுலாவுக்கு அத்தியாவசிய தேவையின்றி செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

முன்னதாக, வெனிசுலா நாட்டிலிருந்து படகுகள் மூலமாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கப் படைகள் வெனிசுலாவுக்குச் சென்று, கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவற்றில் போதைப் பொருட்கள் இருந்ததாகவும் அறிவித்தன.

ஆனால், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கா இவ்வாறு தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ வீடியோ வெளியிட்ட நிலையில், ஜனவரி 2ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில், 40 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வெனிசுலா ராணுவம் அமெரிக்க படையிடம் சரணடைந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்க படை சிறைபிடித்தது.

இந்நிலையில் தற்போது அந்நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றிருக்கிறார். இதற்கு நிகோலஸ் மதுரோவின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான மதுரோ குவேராவும் ஆதரவு வழங்கியுள்ளார். தனது பெற்றோர் திரும்பி வரும்வரை நாடு ‘நல்ல கைகளில்’ இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

யார் இந்த டெல்சி ரோட்ரிகஸ்?

2018ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவின் துணை அதிபராக பதவி வகித்துவரும் டெல்சி, அந்நாட்டின் நிதி மற்றும் எண்ணெய் வளங்கள் துறை அமைச்சராகவும் உள்ளார். வெனிசுலாவின் முக்கியத் துறையை கையில் வைத்திருக்கும் டெல்சியை, கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸே ‘புலி’ என்று பலமுறை பாராட்டியுள்ளார். அவரது நிர்வாகம் மற்றும் சிறந்த செயல்திறன் காரணமாக தற்போது இடைக்கால அதிபர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.