ETV Bharat / international

இன்றிரவு ஓர் மனித நாகரிகமே அழியப்போகிறது; ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஈரானில் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது. கற்காலம் தான் என மிரட்டும் தொனியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்
டிரம்ப் (AP)
author img

By ANI

Published : April 7, 2026 at 10:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வாஷிங்டன்: ஈரானுக்கு தான் அளித்துள்ள கெடு முடியும் நேரம் நெருங்கும் வேளையில், ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். இன்றிரவு அங்கு மனித நாகரிகமே அழியப்போகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதில், ஈரானின் அயதுல்லா கமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். பல்வேறு பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள், அமெரிக்காவின் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக, உலகளவில் 20% எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட உலகம் நாடுகள் பலவற்றில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. . இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும், ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்திருந்தார். ஆனால், அதனை பெரிதாக கண்டுகொள்ளாத ஈரான், தனது தாக்குதல் மேலும் தீவிரமடையும் என்று பதிலடி கொடுத்திருந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப், ஆத்திரத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி ஈரானின் மின்சக்தி நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையும் பொருட்படுத்தாத ஈரான், தாங்கள் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியது.

ஈரானுக்கு தான் விதித்திருந்த கெடு முடியும் நேரம் நெருங்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் பெயரை குறிப்பிடாமல் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில், இன்றிரவு ஒரு மனித நாகரிகமே அழியப்போகிறது. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும் என சூசகமாக பதிவிட்டுள்ளார். இதனால், மேற்கு ஆசிய நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னெப்போதும் இல்லாத ஒரு பேரழிவு நிகழப்போகிறது. அதேநேரத்தில் அங்கு (ஈரான்) ஒரு அதிகார மாற்றம் நிகழக்கூடும். இன்றிரவு ஒரு மனித நாகரிகமே அழிந்துவிடும், அதை மீண்டும் ஒருபோதும் மீட்க முடியாது. இப்படி நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அது நடக்கவும் வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈரானில் சிக்கிய போர் விமானியை மீட்டது எப்படி? திக் திக் நிமிடங்களை பகிர்ந்த டிரம்ப்; மறுக்கும் ஈரான்

மேலும், “உலகின் முக்கியமான வரலாற்று தருணங்களில் ஒன்றான ஈரானின் முடிவை இன்றிரவு நாம் அறிந்து கொள்ளலாம். 47 ஆண்டுகாலமாக நடந்த ஊழல் உள்ளிட்டவை ஒருநாள் முடிவுக்கு வரும்” என்றும், இரவு 8 மணி காலக்கெடுவின் முடிவை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், “ஈரான் மக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்” எனவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஒரே இரவில் நாடு முழுவதும் முடக்கப்படலாம். அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம். இது ஒரு இக்கட்டான காலகட்டம். ஈரான் 7 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தபோதிலும், ஓர் ஒப்பந்தத்திற்காகத் தான் அவர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே. அந்நாட்டில் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது. கற்காலம் தான்” என மிரட்டும் தொனியில் டிரம்ப் தெரிவித்தார்.