ஈரான் போர் எதிரொலி: அமெரிக்காவில் எகிறும் எரிபொருள் கட்டணம் - செலவை ஈடுகட்ட விலையை உயர்த்தும் நிறுவனங்கள்
ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவிலும் எரிபொருள் கட்டணம் என்பது பலமடங்கு உயர்ந்துள்ளது.


Published : April 5, 2026 at 12:51 PM IST
வாஷிங்டன்: ஈரான் போர் எதிரொலியாக அமெரிக்காவில் எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. உலகளவில் 20% எரிபொருள் விநியோகம் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்காவுடனான போரை அடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது போரை நடத்தி வரும் அமெரிக்காவிலும் எரிபொருள் கட்டணம் என்பது பலமடங்கு உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அமெரிக்காவில் பெட்ரோலின் விலை சாரசரியாக ஒரு கேலன் (3.7 லிட்டர்) தற்போது 4.09 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்பு பதிவான உச்சபட்சம் இதுவாகும். போர்க்கு முன்பு இருந்த விலையை விட 1 டாலர் வரை அதிகரித்துள்ளது.
தொழிற்சாலைகள், போக்குவரத்து, விவசாயம் என பல்வேறு முக்கிய துறைகளில் பயன்படுத்தப்படும் டீசலின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு வருடம் முன்பு ஒரு கேலன் 3.64 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5.43 டாலராக விலை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு எதிரொலி
பெட்ரோல், டீசல் ஆகிய முக்கிய எரிபொருள் விலை உயர்வின் எதிரொலியாக வணிக நிறுவனங்கள், விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், எரிபொருளுக்கான கட்டணத்தை வசூலிக்கவுள்ளதாக அறிவித்தன. குறிப்பாக இ-காமர்ஸ் வணிக நிறுவனமான அமேசான் ஏப்ரல் 17 முதல் டெலிவரி பொருட்களுக்கு எரிபொருள் கட்டணமாக 3.5 செண்ட் கூடுதலாக சேர்க்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதே போன்று, விமான சேவை நிறுவனங்களும், எரிபொருள் செலவை ஈடுகட்டும் வகையில் விமான கட்டணத்தை உயர்த்துகின்றன.
மேலும், அமெரிக்காவின் தபால் சேவையும் பார்சல்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் டெலிவரிகளுக்கு தற்காலிகமாக 8 செண்ட் எரிபொருள் கட்டணமாகச் சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும், ஏப்ரல் 26 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
| இதையும் படிங்க : மத்திய கிழக்கில் நீடிக்கும் போரால் தொற்று நோய் பரவல் அபாயம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை |
அமெரிக்கா - ஈரான் பேச்சு வார்த்தை
ஈரானுடனான போர் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், அமெரிக்காவுடன் எந்த விதமான நேரடி பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

