ஹார்முஸ் நீரிணையில் 3 கப்பல்களை குறிவைப்பு; 80-க்கும் மேற்பட்ட ஈரான் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்
இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று கச்சா எண்ணெய் விலையானது 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2 வாரங்களில் இல்லாத உச்சமாகும்.


Published : July 8, 2026 at 2:22 PM IST
ஃபுளோரிடா: ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் 80க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க தெரிவித்திருக்கிறது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்திருக்கிறது.
ஜூலை 7ஆம் தேதி ஈரானின் 80க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதலை முன்னெடுத்ததாகவும் அமெரிக்காவின் கமாண்டு பிரிவு விளக்கமளித்திருந்தது.
அதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் அணையை கடக்க முயன்ற மார்ஷல் தீவு, சவுதி அரேபியா மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக ஈரானின் 80க்கும் மேற்பட்ட இடங்களை அமெரிக்கா துல்லியமாக குறிவைத்து தாக்கியது. அதில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கமாண்டு மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை அருகில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய புரட்சிப் படையின் சிறு படகுகள் ஆகியவற்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது. மேலும், ஈரான் இந்த தாக்குதலானது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமீறல் என்று குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, அமெரிக்காவின் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஐ.ஆர்.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வான்வெளி தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தொடர் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், இரண்டு கப்பல் துறைமுகங்களில் தீப்பிடித்ததாகவும் தெரிவித்திருக்கிறது.
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஈராக் சென்றிருந்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மீண்டும் ஈரானுக்கு திரும்பியுள்ளார்.
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு அளித்திருந்த பொது உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஈரான் இதன் பின்விளைவுகளை சந்திக்கும் என்றும் கூறியிருக்கிறது.
ஆனால், ஹார்முஸ் நீரிணையில் முன்பிருந்த நிலைமையை போன்று போருக்கு பிந்தைய நிலைமை இருக்காது என ஈரான் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. அதனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரும், ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள் தங்களுடைய வழித்தடங்களை தான் பின்பற்ற வேண்டுமென திட்டவட்டமாக கூறியிருக்கிறது. அப்படி பின்பற்றாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருக்கிறது.
இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று கச்சா எண்ணெய் விலையானது மூன்று சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2 வாரங்களில் இல்லாத உச்சமாகும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மூண்ட போரின் விளைவாக தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான். முக்கிய நீர்வழித்தடமாக இந்த நீரிணை மூடப்பட்டதால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலைமையை சரிசெய்ய பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்த நிலையில், ஒருவழியாக ஜூன் 17ஆம் தேதி இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டு, 14 அம்சங்கள் அடங்கிய போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த புரிந்துணர்வு ஒப்பந்ததின்படி, 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டுமென்ற அம்சமும் அதில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் போர் மூண்டிருக்கிறது.

