ETV Bharat / international

மாறி மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான்; அடுத்து என்ன நடக்கப்போகிறது? தீவிரமடையும் மேற்காசிய போர்!

என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிக துரிதமாக நடவடிக்கையாக இருக்கும் என்றும், தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் (APTN)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 9, 2026 at 8:17 AM IST

2 Min Read
Choose ETV Bharat

வாஷிங்டன்: போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. அதற்கு பதிலடியாக 3 வளைகுடா நாடுகளின் மீது இன்று அதிகாலை முதல் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கிய போரானது, 110 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அதேபோல் ஈரான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணை (APTN)

மொத்தம் 14 அம்சங்கள் அடங்கிய அந்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிகட்ட முடிவை எடுக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த போர் நிறுத்தத்திற்கு பிறகு, உலகின் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை வர்த்தக கப்பல்கள் செல்வதற்கு திறப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், போருக்கு முந்தைய நிலையை போன்று இனிமேல் இருக்காது என்றும் தெரிவித்திருந்தது.

ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல்

இந்நிலையில், ஜூலை 7 அன்று ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மார்ஷல் தீவு, சவுதி அரேபியா மற்றும் லைபீரியா நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் 80 முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் இரு நாடுகளிடையே மீண்டும் போர் மூண்டது.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி இறுதிச் சடங்கு
ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி இறுதிச் சடங்கு (APTN)

ஈரானை அமெரிக்கா முதலில் தாக்கியபோது, அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். அவரின், இறுதிச்சங்குகள் ஜூலை 4 முதல் ஈரானில் நடைபெற்று வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க துருக்கி சென்றிருந்த டிரம்ப், இரு நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தானதாக புதன்கிழமை (ஜூலை 8) அறிவித்தார். மேலும், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று இரவே மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

விட்டிக்கொடுக்காத அமெரிக்கா - ஈரான்

குறிப்பாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட முக்கிய தலங்களை தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், எண்ணெய் உற்பத்தி மையமான கார்க் தீவை கைப்பற்ற உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிக துரிதமாக நடவடிக்கையாக இருக்கும் என்றும், தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் போர் பதற்றம்: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து என டிரம்ப் அறிவிப்பு

இதனிடையே, அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் ராணுவ முகாம்கள் உள்ள பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நேற்றே தாக்குதல்களை நடத்தியது. இதில் 2 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக குவைத் தெரிவித்திருந்தது.

அதேபோல், டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, புதன்கிழமை (ஜூலை 8) இரவு ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு சில மணிநேரங்களிலேயே, அதாவது இன்று அதிகாலை குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது.

இதனால், இந்த மூன்று வளைகுடா நாடுகளிலும் இன்று அதிகாலை சைரன்கள் ஒலித்தன. தங்களை நோக்கி ஏவப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தீவிரமாக இடைமறித்து அழித்து வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்திருக்கிறது.